அரசாங்க உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுமியிடம், ‘நீ எப்படி இந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தாய்?’ என்று கேட்கிறார் ஒரு அதிகாரி. அந்த மாணவி சொன்ன பதில், அவளுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தில் பெண்களின் நிலையையும் சேர்த்தே பிரதிபலிக்கிறது.
“எங்க அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து எங்க அம்மாவை அடிப்பாராம். அப்போ நான் என் அம்மாவோட வயித்துல இருந்தேன். அன்னைக்கு அம்மாவோட சண்டை போட்ட அப்பா, ஆத்திரத்துல அம்மாவைக் கொன்னுட்டாராம். உடனே அவங்களைப் புதைச்சுட்டாராம். வயித்துக்குள்ளே இருக்கற குழந்தை உயிரோட இருக்குதான்னு பார்க்கறதுக்காக பாட்டி, அம்மாவோட உடம்பை உடனே வெளியே எடுத்திருக்காங்க. அதிர்ஷ்டவசமா நான் உயிரோட இருந்திருக்கேன். அப்பா ஜெயிலுக்குப் போயிட்டார். என்னை எங்க பாட்டிதான் வளர்த்தாங்க. பாட்டி செத்த பிறகு இங்கே வந்துட்டேன்” என்று அந்த மாணவி சொல்லி முடித்தபோது கேள்வி கேட்ட அதிகாரியே கலங்கிப்போனார்.
இன்னொரு மாணவனின் கதையும் வறுமையின் நிறம்தான். அவன் தம்பிக்கு இதயத்தில் பிரச்சினை. தம்பிக்குத் துணையாக மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. சில நாட்களில் மருத்துவமனை அவனுக்குப் பழகிவிட, அங்கிருக்கும் ஊழியர்கள் அவனை உதவிக்கு அழைத்தார்கள். அவனும் அவர்கள் தருகிற பணத்தை வாங்கிக்கொண்டு சின்ன சின்ன வேலைகளைச் செய்திருக்கிறான். பெரும்பாலும் பிணக்கிடங்கு சார்ந்த வேலைகள்தான் அவனுக்கு அளிக்கப்படும்.
யாரைப் பார்த்தாலும் கோபப்படுவது, திட்டுவது என முரட்டுத்தனத்தின் முழு வடிவமாகவே அவன் வளர்ந்தான். அவன் வாழ்வு அந்த மருத்துவமனையோடு முடிந்துவிடும் என்று பலரும் நினைத்திருக்க, தற்போது அவன் வாலாஜாபாத் ஆதிதிராவிடர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான்.
கை கொடுக்கும் கை
“இந்த இரண்டு மாற்றங்களுக்கும் சமூக மாற்றத்திற்கான நல்ல முன் நகர்வுகள். அதற்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம் என்பது மனநிறைவு தருகிறது” என்கிறார் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலரான கல்பனா சங்கர். அரசாங்கப் பணியில் கூடுதல் செயலர் தகுதியில் இருந்தவர், சமூக முன்னேற்றத்துக்கான பணியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்க வேலையைத் துறந்தார்.
“அரசுசாரா தொண்டு நிறுவனத்தில் சேர்வதற்காக நான் அரசாங்க வேலையை ராஜினாமா செய்தபோது என் நேர்மையைச் சந்தேகித்தவர்கள்தான் அதிகம். அப்போது எனக்கு அது வேதனையளித்தாலும், எங்கள் அமைப்பின் மூலம் நாங்கள் கண்ட மாற்றங்கள் அந்தக் காயங்களுக்குக் களிம்பு பூசிவிட்டன” என்று எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் கல்பனா.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸி பார்னவிக் என்பவர், இந்தியாவின் வறுமை ஒழிப்புக்காக ஒரு திட்டத்தை உருவாக்கியிருந்தார். அதற்கான மதிப்பீட்டுத் தொகை மிக அதிகம் என்பதால் திட்டத்தைச் செயல்படுத்தச் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அரசாங்கம் சார்பில் உலக வங்கி நிதியுதவியுடன் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் செயல்பட்ட அனுபவம் கல்பனா சங்கருக்குக் கைகொடுத்தது. அன்று முதல் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்துக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
பயணங்கள் தந்த தெளிவு
“குழந்தைத் தொழிலாளர் மீட்பு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புற மக்களுக்கு அரசாங்க சேவைக்கான வழிகாட்டல், சுற்றுச்சூழல், கிராம சுகாதாரம் போன்ற ஐந்து முக்கியப் பணிகளைக் கையில் எடுத்துச் செயல்பட்டு வருகிறோம். நான் அரசுப் பணியில் இருந்தபோது பணி நிமித்தமாகப் பல கிராமங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் மெலிந்து, வயிறு வீங்கியிருக்கும் குழந்தைகள்தான் அதிகம் என் கண்ணில்படுவார்கள்.
உசிலம்பட்டி பகுதிக்குச் சென்றால் அங்கே வீடுகளுக்குள்ளேயே ஒரு பகுதி மேடிட்டு இருக்கும். கேட்டால் அங்கேதான் தங்கள் பெண் குழந்தையைப் புதைத்திருப்பதாகச் சொல்வார்கள். அரசாங்கப் பதிவில் காய்ச்சலால் மரணம் என்று இருக்கும். ஆனால் விசாரணையில் அந்தப் பெண் குழந்தை நெல் மணி கொடுத்தோ, கள்ளிப்பால் ஊற்றியோ கொல்லப்பட்டிருக்கும்.
இதுபோன்ற கொடுமைகளை நிச்சயம் குறைக்க வேண்டும் என்று நான் நினைத்தபோதுதான் உலக வங்கி நிதியுதவியுடன் மகளிர் மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ‘புதுவாழ்வு’ திட்டம் உருவானது. தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் அந்தத் திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றியே என்னை இப்படி ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தூண்டியது” என்கிறார் கல்பனா.
குழந்தைத் தொழிலாளர் மீட்பு
“சேலம், கல்வராயன் குன்று பகுதிகளில் குவாரிகளிலும் கொப்பரைகளிலும் பணியில் ஈடுபட்டிருந்த குழந்தைத் தொழிலாளர்களை மீட்டோம். அவர்களை பணியில் இருந்து விடுவிப்பது அத்தனை சுலபமல்ல. முதலாளிகளை ஒருவகையில் சமாளிக்க வேண்டும் என்றால், அந்தக் குழந்தைகளின் பெற்றோரையும் சமாளித்தாக வேண்டும். குழந்தைகளின் மனநிலையையும் மாற்ற வேண்டும். படிப்பு மேல் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குள் முன்னேற்றம் குறித்த நெருப்பையும் விருப்பையும் வளர்க்க வேண்டும்.
நாங்கள் அப்படித்தான் செய்தோம். அப்படி மீட்கப்பட்ட குழந்தைகளில் 400க்கும் மேல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள். இரண்டு பேர் மருத்துவம் படிக்கிறார்கள். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், ஆடிட்டர் ஆகும் லட்சியத்துடன் பி.காம் முடித்திருக்கிறான். இதுதான் எங்கள் வெற்றி” என்று தங்கள் செயல்பாட்டையும் அதன் நல்விளைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
எல்லை கடந்த வெற்றி
முதலில் காஞ்சிபுரத்தில் இருந்துதான் இவர்கள் தங்கள் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது எட்டு மாநிலங்கள், ஏழு நாடுகள் என்று எல்லை கடந்து தடம்பதித்து இருக்கிறார்கள்.
“ஒரு முறை மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றோம். நாட்டின் பருப்பு உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கிறது அந்த மாநிலம். ஆனால் அங்கிருப்பவர்கள் அவற்றைச் சாப்பிடக்கூட முடியாத வறுமையில் இருக்கிறார்கள். கடும் குளிரில் மெல்லிய ஆடை அணிந்து வேலை பார்க்கிறார்கள். மருத்துவமும், சுகாதாரமும் அங்கு பெயரளவுக்குக்கூட இல்லை.
அதுபோன்ற கிராமங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறோம்” என்கிறவர், பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
பெண் என்னும் பெரும் சக்தி
“பெண்களின் சக்தி அளவிட முடியாதது. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடைந்துவிடுவார்கள். எழுதப் படிக்கத் தெரியாத பெண்களும் இன்று மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வெற்றி பெற்ற தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் இருக்கும் பெண்கள் குழுக்களிடம் கிட்டத்தட்ட 320 கோடி ரூபாய் இருப்பில் இருக்கிறது.
அந்தப் பணத்தை அவர்கள் அவர்களுக்குள்ளேயே குறைந்த வட்டிக்குக் கடனாகக் கொடுக்கிறார்கள். இதனால் கந்துவட்டி தொல்லையில் இருந்து தப்பிப்பதுடன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் ஈடுசெய்து கொள்கிறார்கள்.
கிராமங்களில் கழிப்பிட வசதிகளைச் செய்து தரும் அதே நேரத்தில் குப்பைகளைச் சரியாகக் கையாள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை மூலம் மின்சாரம் தயாரிப்பதையும் முயன்று வருகிறோம். அரசின் திட்டங்கள் பொதுமக்களைச் சென்று சேர்வதற்கான பாலமாகவும் நாங்கள் இருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் நிறுவன ஊழியர் இருப்பார்.
உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களை இனங்கண்டறிந்து, எங்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் அவருடைய வேலை. பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பணியாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களின் பணி என்ன என்ற தெளிவு இருக்கிறது. அந்தத் தெளிவும் ஈடுபாடுமே எங்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோட வைக்கிறது” என்கிறார் கல்பனா சுந்தர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago