வாசல் திறக்கும் ஃபேஷன் உலகம்

By ச.ரேணுகா

“என்ன ஃபேஷன் ஷோவுக்குப் போறீங்களா?” – கொஞ்சம் மை, லிப்ஸிடிக், ஸ்டைலான உடை, ஹீல்ஸ் அணியும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் கேள்வி இது. ஆடம்பரம், அழகு, புகழ் என்பதே பொது மக்கள் மத்தியில் ஃபேஷன் பற்றிய மன பிம்பமாக உள்ளது. ஃபேஷன் உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது?

நமது படைப்பாற்றலை எந்த அளவுக்கு ஆடை, அணிகலன்களின் மூலம் வெளிப்படுத்துகிறோம் என்பதே ஃபேஷன் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. சாதாரண ஆடைகளையும் அழகானதாக மாற்றும் கலைதான் ஃபேஷன்.

மேல்தட்டு மக்களுக்கே உரியதாக இருந்த இந்த ஃபேஷன் துறை, தற்போது நடுத்தர வர்க்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஃபேஷன் உலகை ஒவ்வாமையுடன் பார்த்துவந்த காலம் மறைந்துவிட்டது. “முன்பு திருமணம், கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் பட்டுப்புடவையும் தங்க நகைகளும் அணிவோம். இதற்கான செலவு அதிகம். ஆனால் இப்போது ஆன்டிக் ஜுவல்லரிகள், ஃபேன்சி புடவைகள் போன்றவற்றின் வருகையால், நாங்களும் காலத்திற்கு ஏற்றாற்போல் ஃபேஷனை பின்பற்ற முடிகிறது. அதே சமயம் செலவும் குறைவு” என்று மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார் இல்லத்தரசி ஷீலா.

“ஃபேஷன் ஷோவில் அணிந்து வரும் ஆடைகளை நம்மால் அணிய முடியுமா என்ற கேள்வி பலரது மனங்களிலும் எழும். ராம்ப் வாக்கில் நடந்துவரும் மாடல்கள் அணிந்திருக்கும் ஆடைகள் சராசரி புழக்கத்திற்கு வருவதில்லை என்றாலும், அந்த ஆடைகளில் உள்ள நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றை நாம் அன்றாடம் உடுத்தும் ஆடைகளில் உபயோகிக்கிறோம். ரேம்ப் வாக்கில் விசித்திரமான டிசைன்கள் காட்சிப்படுத்தப்படும். ஆனால் அந்த டிசைன்கள் அப்படியே சந்தைக்கு வருவதில்லை. அதில் ஏதேனும் ஒரு அம்சமோ சில அம்சங்களோ உள்வாங்கப்பட்டு புதிய டிசைன்கள் செய்யப்படுகின்றன” என்று சென்னையைச் சேர்ந்த ஸ்டைல் கன்சல்டண்ட் தபு கூறுகிறார்.

வரவேற்கும் வாய்ப்புகள்

ஃபேஷன் உலகைப் பார்த்துவந்த பார்வை மாறியிருப்பதன் விளைவாக ஃபேஷன் உலகை நல்லதொரு தொழில்வாய்ப்பாகக் கருதும் போக்கும் வளர்ந்துவருகிறது. ஃபேஷன் துறையின் வசீகரம், அதில் கிடைக்கும் பணம், கவனம் ஆகியவை பல இளைஞர்களை இந்தத் துறைக்குள் ஈர்க்கின்றன.

“ஃபேஷன் வேர்ல்ட் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணின ஃபீல்ட். இதில கிடைக்கிற அட்டென்ஷன், இன்கம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு” என்று வெளிப்படையாகப் பேசுகிறார் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கும் இளம் மாடல் ஐஸ்வர்யா.

“ஃபேஷன் மாடல்கள் உண்மையிலேயே ரோல் மாடல்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் முன்னிறுத்தும் பிராண்ட்கள், டிசைன்கள் பொதுமக்களிடையே மதிப்பைப் பெறுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவரப்படுகிறார்கள்” என்கிறார் மாடல் ஆர்த்தி வெங்கடேஷ்.

ஃபேஷன் துறைக்குத் தேவைப்படும் பிராண்ட் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களின் விலை குறைந்திருப்பதாலும், அப்பொருட்கள் மாதத் தவணையில் கிடைப்பதாலும் பலரும் இத்துறையில் நுழைய ஆர்வம் காட்டுகிறார்கள்.

“முன்பெல்லாம் ஃபேஷன் ஃபீல்டில் நுழைய நிறைய பணம் தேவை என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. எனக்குத் தெரிந்து மிடில் கிளாஸைச் சேர்ந்த பலர் இதில் இப்போது ஈடுபடுகிறார்கள்” என்கிறார் தபு.

முன்பு மாடலிங் துறையில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட உயரம், வடிவம், நிறத்தில் இருக்க வேண்டுமென்ற தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், தற்போது இதுபோன்ற எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்றும் தபு கூறுகிறார்.

“முன்பு மாடல்களின் உயரம் 5.5 அடிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது 10 அங்குலம் வரை காலணிகள் கிடைப்பதால் அத்தகைய விதிகள் அவசியம் இல்லை’’ என்கிறார் அவர்.

மாடலிங் செய்வதைத் தாண்டி, ஃபேஷன் ஷோவின் பின்னணியில் டிசைனர், தையல் கலை நிபுணர், ஒலி - ஒளி அமைப்பாளர், நிகழ்ச்சி அமைப்பாளர், தொகுப்பாளர், சிகை அலங்கார நிபுணர் மற்ற பிரிவுகளிலும் கவனம் செலுத்தலாம். இக்கடின உழைப்பிற்கு ஏற்ப, வருமானமும் அதிகம் ஈட்டக்கூடிய துறையாகவே இது விளங்குகிறது. ஃபேஷன் ஷோவில் பங்கேற்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும். புதிய டிசைன்களை அறிமுகப்படுத்துவதற்கான சிறிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒரு மாடலுக்கு ஒரு ஷோவுக்கு 5000 ரூபாய் வரையிலும் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். அதுவும் அதிக பிரபலமில்லாத மாடலுக்கு இந்தத் தொகை. இதே மிகவும் பிரபலமான மாடலாகவோ முன்னணி நடிகையாகவோ இருந்தால் சம்பளம் லட்சங்களைத் தொடும் என்கிறார்கள். இதில் ஷோ கோஆர்டினேட்டர்கள், அரங்க அமைப்பாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் வருமானம் இருக்கிறது.

ஆபத்தும் உண்டு

பெண்களுக்குத் தன்னம்பிக்கை, பணம், புகழ், சுதந்திரம் என அள்ளித்தரும் இத்துறையில் ஆபத்துகளும் அதிகம். ’’சிலர் வேண்டாத சகவாசம், அரைகுறை ஆடைகள், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், போதை பொருள் போன்ற தீயப் பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர்” என்றும் தபு சுட்டிக்காட்டுகிறார்.

“இத்துறையில் நுழைய தங்களை தயார் படுத்திக்கொள்ளும் பெண்கள் ஏமாற்று .கும்பல்களிடம் சிக்கிக்கொள்ளாமல் கவனத்துடன் செயல்படுவது முக்கியம்’’ என்று கூறுகிறார் மாடல் துறையைச் சேர்ந்த கே.ஆர். ஸ்வேதா.

எவ்வளவோ வாய்ப்புகளுக்கு மத்தியில் ஆபத்துகள் இருந்தாலும் இந்தத் துறையைப் பலரும் விரும்பி ஏற்கும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது. எனினும் மாடலிங் துறையை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. காரணம் இது தற்காலிகத்தன்மை உடைய தொழில். தொடர்ந்து உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டும். வயது ஏற ஏற, வாய்ப்புகள் குறையவும்கூடும்.

காட்சிப் பொருளா பெண்கள்?

பெண்களின் முன்னேற்றத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படும் இந்த ஃபேஷன் துறை, அவர்களை அலங்கார பொம்மைகளாகவும், காட்சிப் பொருளாகவும், அவர்களது அழகை விற்பனைப் பண்டமாகவும் பயன்படுத்துக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இதைப் பற்றிக் கவலைப்பட்டால் எதுவுமே செய்ய முடியாது என்பதே இந்தத் துறையில் இருப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. “என்னைப் போன்ற ஒரு பெண் கவர்ச்சியான உடை அணிய மறுத்தால், அதே உடையை அணிந்து நடிக்கவும் ஷோவில் கலந்துகொள்ளவும் பல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்கும் நிலை இருக்கிறது” என்று கூறுகிறார் மாடல் ரேஷு.

இவை அனைத்தையும் தாண்டிப் பாதுகாப்போடு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவது சுவாரஸ்யமான சவால்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்