தமிழில் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்கூட மற்ற மொழி, உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைக்காது. அதிலும் அந்த மொழிபெயர்ப்பாளர் பெண்ணாக இருந்துவிட்டால்… அவர் அங்கீகாரம் பெறுவது உலக அதிசயமாகவே இருக்கும்.
ஆனால், இந்த அங்கீகாரத்தைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் பணிகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டவர் சரஸ்வதி ராம்நாத். தமிழ் மொழிபெயர்ப்பாளர் வரலாற்றில் முன்னணி பெண் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர் அவர்.
வாசிப்பு ஏற்படுத்திய திருப்பம்
கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த அவர் 1925, செப்டம்பர் 7-ம் தேதி பிறந்தார். காந்தியவாதியான அவருடைய தந்தையின் சேகரத்தில் இருந்து பல நூல்களைச் சிறு வயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்தார். அது அவருடைய எழுத்து ஆர்வத்தைக் கிளறியது. ஆரம்பக் காலத்தில் சில சிறுகதைகளை எழுதினார்.
1950-களில் பிரேம்சந்த், வி.எஸ். காண்டேகர், பங்கிம்சந்திரர், சரத்சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பிற மொழி எழுத்தாளர்கள் தமிழில் நேரடியாக எழுதியதுபோல அறியப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய நூல்களைத் தமிழில் வாசித்த பிறகு, மொழிபெயர்ப்பின் மீது சரஸ்வதிக்கும் ஆர்வம் துளிர்த்தது. ஏற்கெனவே, இந்தியில் வித்வான் பட்டம் பெற்றிருந்ததுடன், பன்மொழி அறிஞராகவும் இருந்தார்.
அர்ப்பணிப்பு மிக்க பணி
சரஸ்வதியின் மொழிபெயர்ப்புப் பணியைத் தினமணி கதிரின் அன்றைய ஆசிரியர் துமிலன் ஊக்குவித்தார். ‘ராஜநர்த்தகி' என்ற நாவலின் மொழிபெயர்ப்புதான் சரஸ்வதியின் முதல் தொடர். தொடர்ந்து சுதேசமித்திரன், தீபம், தாமரை, கலைமகள் எனப் பல இதழ்களிலும் அவருடைய மொழிபெயர்ப்புகள் வெளியாகத் தொடங்கின. தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து இந்திக்கும் இலக்கியச் செல்வங்களைப் பரிமாற்றம் செய்யும் பணிக்காக அர்ப்பணித்துக்கொண்டார்.
இரு மொழிப் பாலம்
அம்ரிதா பிரீதம் பஞ்சாபியில் எழுதிய ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை', ஸ்ரீலால் சுக்ல இந்தியில் எழுதிய ‘தர்பாரி ராகம்', தாராசங்கர் பானர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘சப்தபதி', கே.எம். முன்ஷி இந்தியில் எழுதிய ஜெயதேவன் அல்லது கூர்ஜரத்தின் செல்வன், கடைசி நூலாகப் பிரேம்சந்தின் ‘கோதான்' உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் சரஸ்வதி ராம்நாத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான படைப்புகளை இந்திக்குக் கொண்டு சென்ற ஒரே எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்தான். ‘ஜெயகாந்தன் கதைகள்’, ‘பாரதி லலித் நிபந்த்’ என்ற பெயரில் பாரதி படைப்புகள், ‘பவ்பதகி’ என்ற பெயரில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் போன்றவை இந்திக்கு அவர் கொண்டு சேர்த்த முக்கியத் தமிழ்ப் படைப்புகள்.
அகாடமி அங்கீகாரம்
சர்வதேசப் பெண்கள் ஆண்டையொட்டி ‘இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' என்ற மொழிபெயர்ப்பு நூலை அக்கறையுடன் தொகுத்து அளித்தார். ‘இளைஞர் மகாபாரதம்', ‘மலைநாட்டு நாடோடிக் கதைகள்' உள்ளிட்ட கதைகள், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற நதிகளைப் பற்றி தனித்தனி நூல்களைக் குழந்தைகளுக்கு எழுதியுள்ளார். பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த நாடகங்கள் அடங்கிய ‘இந்திய மொழி நாடகங்கள்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 1993-ம் ஆண்டில் பெற்றார். அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்துக் காலமானார்.
ஒரே பெண்
‘மொழிபெயர்ப்புகளுக்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் கிடைப்பதில்லை. ஆனால், மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பாக்கம்தான்’ என்பதை வெறுமனே சொல்லாக அல்லாமல், செயலால் நிரூபித்துக் காட்டியவர் சரஸ்வதி.வடஇந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ., த.நா. குமாரசாமி, த.நா.சேநாபதி எனப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் 45 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிய ஒரே பெண்ணாகச் சரஸ்வதி ராம்நாத் மிளிர்கிறார்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago