காலம் என்னும் நதி

By ஷங்கர்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடு பற்றிப் பேச்சளவில் பெருமை கொள்பவர்களாகவே இந்தியாவில் பெரும்பான்மை யானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அதன் உயிர் சான்றாக இருந்தவர் உருது பெண் எழுத்தாளர் குர்அதுல்ஐன் ஹைதர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தில் 1928-ல் ஜனவரி 20-ம் தேதி பிறந்த குர்அதுல்ஐன் ஹைதர், உருது இலக்கிய உலகில் புயல் போல நுழைந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள், பயண இலக்கியங்களை எழுதியவர்.

டெய்லி டெலிகிராப், பிபிசி ஆகிய செய்தி நிறுவனங்களில் நிருபராகப் பணியாற்றியவர். 1989-ல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது.

கல்வியில் சிறந்த ஹைதர்

படித்த இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த குர்அதுல்ஐன் ஹைதருக்கு இஸ்லாமியக் கல்வியுடன் சேர்ந்து தாராளவாத மேற்கத்திய பாணிக் கல்வியும் அளிக்கப்பட்டது.

இந்தியப் பண்பாடு, இஸ்லாமியக் கலாசார விழுமியங்கள் மற்றும் மேற்கத்தியப் பண்பாட்டின் சிறந்த அம்சங்களின் கலவையாக அவரது ஆளுமை உருவானதில் வியப்பேதும் இல்லை.

கவிஞர் முகமது இக்பால், ஜவகர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற பிரபலங்களும் கலைஞர்களும் இயல்பாக வந்து செல்லும் இடமாக அவர் வீடு இருந்தது.

எழுத்தும் ஊடகப் பணியும்

சிறு வயதிலேயே தந்தையை இழந்த குர்அதுல்ஐன், 1947-ல்இந்தியா சுதந்திரமடைந்த போது தன் தாய் மற்றும் சகோதரனுடன் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். அங்கேதான் அவரது முதல் நாவல் வெளியானது. ‘மேரே பி சனம்கானே’ (எனது கோயில்களும்தான்) என்ற அவரது முதல் படைப்பு வெளியானபோது ஹைதருக்கு வயது 19. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய துயரங்கள் குறித்த படைப்பு அது.

பிரிவினை அனுபவங்களை நேரில் பார்த்த அவர், தன் படைப்புகளிலும் அந்த துயர நிகழ்வுகளின் தடயங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.

லண்டனில் பிபிசி செய்தியாளராகப் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வரலாற்றின் கதை

1959-ல் அவர் எழுதிய அக்னி நதி (ஆக் கா தர்யா) நாவல்தான் அவருடைய மிகப் புகழ்பெற்ற படைப்பு. 3000 ஆண்டு கால இந்திய நாகரிகத்தின் வரலாற்றை ஒரு கதையாகச் சொல்லும் படைப்பு இது. வேத காலத்தில் தொடங்கி, பவுத்தம் இந்தியாவில் வேரூன்றிய காலகட்டம் வழியாக 1956-ல் முடியும் நாவல் இது.

பெரிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் மனிதர்களின் சிந்தனை, ஆசாபாசங்கள், மோதல்களைச் சித்தரிக்கும் படைப்பு இது.

அக்னி நதியில் வரும் சம்பா என்ற பெண் கதாபாத்திரம் இந்தியப் பெண்ணின் பிரதிநிதியாக இருக்கிறாள். ஆதியில் அவள் சம்பக்காக வருகிறாள். அவளது அறிவுக்கும், நுண்ணுணர்வுக்கும் பொருத்தமில்லாத ஒரு பிராமண இளைஞனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

இடைக்காலத்தில் சம்பாவதியாக, மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வரும் அபுல் மன்சூர் கமாலுதீன் மீது காதல் கொள்பவளாக வருகிறாள். அவளுக்கும் கடைசியில் தனிமையே மிஞ்சுகிறது.

நவீன காலத்திலும் சம்பா வருகிறாள். அவளும் புறக்கணிப்பையும் தனிமையையும்தான் கடைசியில் சந்திக்கிறாள். கைவிடுதல், தனிமை, அடிமைத்தனம் என ஆண்களின் கரங்களால் இந்தியப் பெண் வரலாறெங்கும் துயருறும் சித்திரத்தை சம்பாவின் வழியாக வரைகிறார் அக்னி நதியின் ஆசிரியர்.

அக்னி நதி நாவலில் நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள் தோன்றி மறதியில் மறைந்து போவார்கள். நாவலின் இறுதியில் ஒரே பின்னணியில் உள்ள இந்துக் குடும்பங்களும், முஸ்லிம் குடும்பங்களும் பிரிவினைக் காலகட்டத்தில் சிதறி ஓடும் அவலம்தான் மனதில் பதிகிறது.

சிலர் இங்கிலாந்துக்கும், சிலர் பாகிஸ்தானுக்கும் ஓடுகிறார்கள். சிலர் இந்தியாவிலேயே தங்குகின்றனர். மாறிய சூழலில் அவர்களால் முழுமையாக வேர்கொள்ளவே முடியவில்லை. ஒரு தேசம் கைவிட்ட நிலையில் இருக்கின்றனர். இதுதான்

அக்னி நதியின் ஒட்டுமொத்த வரைபடம்.சிறு வயதில் பாகிஸ்தானுக்கு அம்மாவுடன் சென்றாலும், லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய அவர், தனது மரணம் வரை இந்தியாவிலேயே இருந்தார். உருது இலக்கியத்தின் பெரும் இலக்கியகர்த்தாவான அவர் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி நுரையீரல் பாதிப்பால் காலமானார்.​

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE