பல பெண்கள் இப்படிச் சொல்லிக் கேட்டதுண்டு. “கடைகளில் பொம்பளைப் பிள்ளைகளுக்குப் போட்டிருக்கும் உடைகளைப் பார்த்தாலே அதுக்காகவே பொம்பளைப் பிள்ளை வேணும்னு தோணுது. எத்தனை டிசைன்கள்… அப்பப்பா”. இப்படி ஆசைகொள்ள வைக்கும் சிறுமியருக்கான உடைகள்தான் அவர்களை ஒடுக்கும் முதல் ஆயுதம் என்பதை உணர்த்துவது உண்மையிலேயே சவாலானது. பெண் உடல் மீது சமூகம் செலுத்தும் முதல் வன்முறை அவர்களுக்கு அளிக்கப்படும் உடைதான். ஆணும் பெண்ணும் இயற்கையில் வேறுபட்டவர்களாக இருப்பதற்கும் சமுதாயம் அவர்களை வேறுபட்ட இரு துருவங்களாக ஆக்கியிருப்பதற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. உடைதான் அதன் தொடக்கப் புள்ளி.
யாருக்கு எந்த உடை?
குழந்தைப் பருவத்திலிருந்து ஏன் வேறுபட்ட உடைகள் தரப்படுகின்றன? இந்தக் கேள்வி நம்மில் பலருக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியை ஒருமுறை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். என்ன விடை கிடைக்கிறது இந்தக் கேள்விக்கு? அந்தக் குழந்தைகள் இந்த வேறுபாட்டை அறிவார்களா? அவர்கள் சம்மதத்துடனா அவர்களை நாம் வேறுபடுத்தி இரு உலகங்களாகப் பிரிக்கிறோம்?
பெண்ணைக் காட்சிப் பொருளாக்குவது என்பது அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது. பெண் என்பவள் பிறர் பார்த்து ரசிக்கப்படுபவளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளுடைய அம்மா மற்றும் குடும்பத்துப் பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட மாதங்களோடு நின்று போகும் பவுடர் டப்பாவும் கண் மையும் பெண் குழந்தைகளுக்கு அத்தியாவசியத் தேவைகளாக்கப்படுகின்றன. அதிலும் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
இதனாலேயே அதிக சுதந்திரத்துடன் வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் பல பெண்கள் இளம் பருவத்தில் தங்களைக் காட்சிப் பொருளாக்கி மகிழ்வதையே தங்களின் உரிமை என்று புரிந்துகொள்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பேணுங்கள், சிறப்பு உரிமையோடு வளருங்கள் என்று இந்த காலம் விடுக்கும் கோரிக்கையின் உண்மையான பொருள் என்ன? முதலில் பெண் குழந்தைகளை உங்கள் அழகுபடுத்தும் வன்முறையிலிருந்து விடுவியுங்கள் என்பதுதான்.
தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ளும் இயல்பைக் குழந்தையிலிருந்து பெண்ணின் மீது திணித்துவிட்டு அவர்கள் மீது பாலியல் வன்முறை நடத்தப்படும் நேரங்களில் அவளின் உடையைக் காரணமாகச் சொல்வது எத்தகைய முரண்பாடு; எவ்வளவு வன்முறை!
இந்த அடிப்படையிலேயே பெண்ணுக்கும் ஆணுக்கும் அவர்களின் பால் வேறுபாடு வெளித் தெரியாத அளவில் ஒரே மாதிரியான உடைகள் வேண்டும் என்றார் பெரியார். உடைகளில் ஆடம்பரத்தைக் கடுமையாக மறுத்த அந்தத் தலைவர் எளிய மக்களின் உடையாகிய கைலியையே வழக்கமாக உடுத்திவந்தார். அந்தக் கைலியையே தனது வாழ்க்கைத் துணைவியார் அன்னை நாகம்மையாரும் உடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அவரும் சில காலம் அந்த உடையை ஏற்று அணிந்துகொண்டிருந்தார். பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் இவற்றை ஒழிப்பது பற்றிப் பேசும்போது, இன்னும்கூட நாம் பால் வேறுபாடு காட்டாத உடை என்பதைப் பற்றிச் சிந்திக்க மறுத்தே நிற்கிறோம்.
பலியாகும் தன்மானம்
அடுத்த நிலை பெண்ணுக்கு நகை அணிவிப்பதில் தொடங்குகிறது. ஐந்து வயது முடியும் முன்னரே காது குத்திவிடுகிறார்கள். ஆண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே அதனைத் தூர்த்துவிடுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு அது வாழ்நாள் சொந்தமாகவும் பிற்காலத்தில் பல பெண்களுக்கு நல்ல வாழ்க்கை என்றாலே நகை அணிந்து குடும்ப விழாக்களுக்குச் செல்வது என்பதாகவும் பொருள் கொள்ளுமளவுக்குச் சென்றுவிடுகிறது. உடை, நகை இரண்டுமே பெண்ணுக்கான சுயசிந்தனை தொடங்கும் முன்னராகவே அவள் மீது ஏற்றப்படும் அடிமை மகுடங்களாகவே நமது சமூகத்தில் நிலவுகின்றன.
இந்த இரண்டிலிருந்தும் விடுதலையடையப் பெண்ணே விரும்ப முடியாத அளவுக்கு அவளது மூளை மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது. இதில் காது குத்துவதற்கு விழா வேறு. இந்த விழாக்களின் அடிப்படையான நோக்கம் சாதி அமைப்பை உறுதி செய்துகொள்வதைத் தவிர வேறில்லை. சாதி ஒழிப்புக்கான போராளிகள், பொது உடைமைச் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்டவர்கள், சில இடங்களில் பெரியார் பற்றாளர்களும்கூட, “வீட்டில் பிள்ளைக்குக் காகு குத்து வைச்சிருக்கேன்” என்று சொல்லும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரிவதில்லை.
நகை என்பது பெண்களின் மிகப் பெரிய பிரச்சினை. முதலாவதாக நகைகளை வைத்தே ஒரு பெண் தன்னைத் தானே மதிப்பிடுகிறாள். எனவே, முதலாவதாக அவள் தன்மானம் பலியாகிவிடுகிறது. கவரிங் நகையாவது போடாமல் இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண் நடமாட முடியாது என்று நினைக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருக்கிறாள்.
சரி. நகை நிறைய இருக்கும் பெண்ணின் நிலை என்ன? நகை நிறைய இருப்பதாலேயே அவளுக்குப் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டு அவளும் வெளியே வரத் தயங்குகிறாள். இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்ணுக்குப் பிரச்சினையாக இந்த நகை இருக்கிறது. ‘பெண்ணுக்கு இவ்வளவு நகையை மாட்டி வைத்திருப்பதும் காதுகளை வளர்த்து தண்டட்டியெல்லாம் மாட்டி வைத்திருப்பதற்கான காரணம் ஆண் அடிக்கும்போது பெண் எதிர்த்து அடிப்பதில் தடைகளை ஏற்படுத்துவதுதான்’ என்கிறார் பெரியார். யோசித்துப் பாருங்கள் அதிலிருக்கும் உண்மை புரியும்.
இந்த நகைப் பழக்கத்தை ஒழிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. விடுதலை பற்றிச் சிந்திக்கும் பெண்கள் நகை போடுவது குற்றம் என்று நினைத்து வாழ்ந்து பழகுங்கள். நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக, ஆண்களின் சமுதாயச் செல்வாக்கைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளாக வாழ்வது அவமானம் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தாமல் பெண் விடுதலையும் மானுட விடுதலையும் சாத்தியமேயில்லை.
(இன்னும் தெறிவோம்)
கட்டுரையாளர்: பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago