அலசல்: பக்தியில் புதைக்கப்படும் வன்முறை

By முகமது ஹுசைன்

பெண்ணைப் போகப் பொருளாகவும் உடைமையாகவும் கருதும் போக்கு நம் சமூகத்தில் காலகாலமாக இருந்துவருகிறது. அதுவே சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான தொடக்கப்புள்ளி.

குடும்பம், பொதுவெளி, பணியிடம், வழிபாட்டுத் தலம் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. சமீப காலமாக மத வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகள்  அதிர்ச்சிதருபவையாக உள்ளன.

பாவமன்னிப்பின் பெயரால் பாவம்

கேரளாவின் மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணத்துக்கு முன் தனது உறவினரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.  அதன் பின் ஸ்டெல்லாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். திருமணத்துக்கு முன் நடந்த அந்தச் சம்பவம் ஸ்டெல்லாவுக்கு உறுத்தலாக இருந்துள்ளது.

ஆறுதல் தேடியும் மன அமைதி வேண்டியும் மல்லப்பள்ளி தேவாலயத்துக்குச் சென்று பாவமன்னிப்பு வேண்டியுள்ளார். பாவ மன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரோ, ‘உனது கணவரிடம் கூறிவிடுவேன்’ என மிரட்டி அவரை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார். பின்பு அதைத் தெரிந்துகொண்ட மற்ற நான்கு பாதிரியார்களும் அவரை மிரட்டி வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இறுதியாகத் தைரியத்தை வரவழைத்து, கணவரிடம் இந்தச் சம்பவத்தை ஸ்டெல்லா தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தின் காயம் ஆறும் முன்னே, அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை குற்றம் சாட்டியவர் கன்னியாஸ்திரி. குற்றம் சாட்டப்பட்டவர் பிராங்கோ முள்ளக்கல் எனும் பிஷப். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகச் சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் இல்லை என்று பிஷப் மறுத்தார். பின்பு அது ஆன்மிகத்தில் ஒரு நிலை என்று சமாளித்தார். பின் அந்தக் கன்னியாஸ்திரியின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினார்.

சில அரசியல் கட்சிகளும் இயேசு சபையும் அவருக்கு ஆதரவாகப் பேசின. இறுதியாக கேரள அரசு அவர் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. வாடிகனும் அவரை பிஷப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த பிஷப் விவகாரம் கேரளாவை மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

alasaljpg

தேவாலயங்களில் அரங்கேறும் வன்முறை

கேரளாவின் கண்ணூருக்கு அருகில் இருக்கும் செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த 48 வயது ராபின் வடக்குஞ்சேரி மீது கடந்த வருடம் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டது. வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர் 16 வயதுச் சிறுமி. பாதிரியார், 2016-ல் அந்தப் பள்ளிச் சிறுமியைத் தொடர்ந்து வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். அந்தச் சிறுமி கருவுற்றார். தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அந்தச் சிறுமியைச் சேர்த்துள்ளார். அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. இந்த விவகாரம் கடந்த ஆண்டில் வெளியுலகுக்குத் தெரியவந்தது. பாதிரியார் கைதுசெய்யப்பட்டார்.

முதலில் மறுத்தவர், டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தலசேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுவந்தது. தற்போது அந்தச் சிறுமி, தனது சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்தது என்றும் தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் தான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும்  நீதிமன்றத்தில் கூறி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் வன்முறைகள் அதிகரித்தபடி உள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992-ல் கோட்டயத்தில் சிஸ்டர் அபயா கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது.

“கேரளத்தில் மதகுருமார்களால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தேவாலய நிர்வாகங்கள் அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார் புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாகப்  பாலியல் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர்.

மடங்கள்தோறும் மடமை

தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்ற இஸ்லாமிய தலைவரும் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ அமைப்பை நிறுவியவருமான பி. ஜெயினுலாபுதீன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தன்னைச் சந்திக்க வந்த பெண்ணுடன்  தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர் தோற்றுவித்த அந்த அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரது செயலை மூடிமறைக்காமல், அதைத் தாங்களே வெளிக்கொணர்ந்து நடவடிக்கை எடுத்ததே  ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

“1992-ம் ஆண்டு மடத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் மடத்துக்குச் சென்றோம். அந்தச் சாமியார் ஆன்மிகம் பற்றிப் பேசினார். நான் தலைகுனிந்து எழுதிக்கொண்டு இருந்தேன். ஆன்மிகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்னுடன் வந்திருந்த பெண் அந்தச் சாமியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம் மிக ஆபாசமாகப் பேசினார்.

அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்று பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அளித்த குற்றச்சாட்டு, கால ஓட்டத்தில் நீர்த்துப் போனதையும் இந்தச் சமூகம் அறியும். சமூகத்தின் மேல் இத்தகைய சாமியார்களுக்கு இருக்கும் ஆதிக்கத்துக்கும் அவர்களின் பணபலத்துக்கும் அதிகார அரவணைப்புக்கும் இவற்றைவிடப் பெரிய சான்று தேவையில்லை.

நீளும் போலிப் பட்டியல்

சிவ்முரத் திவிவேதி எனும் சாமியார் சாய்பாபாவின் சீடன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவர். அவரின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய்க்கும் மேல். கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோயில் கட்டியுள்ளார். டெல்லியில் புகழ்மிக்க சாமியாராக வலம்வந்தார். இந்நிலையில் சாமியார் சிவ்முரத் திவிவேதி, மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திவருவதாகப் புகார்கள் வந்தன.

போலீசார் சிவ்முரத் திவிவேதியின் கோயிலில் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலி சாமியார் சிவ்முரத் திவிவேதி கைது செய்யப்பட்டார். ஆசாராம் பாபு, பிரம்மரிஷி சுபாஷ் பத்திரி, ரஜினீஷ் குரோவா, சாமி அமிர்த் சைதன்யா, ஸ்ரீஹரி கணேஸானந்தா தீர்த்தபதா சாமியார் என நீளும் இவர்களின் பட்டியல் முடிவற்றது.

சாயும் தோளாகவும் வீழும்போது பிடித்துக்கொள்ளும் கரமாகவும் நாளை குறித்த நம்பிக்கையாகவும் இருப்பதால், மனிதனின் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக மதங்கள் உள்ளன. மதங்களில் புழங்கும் பெரியவர்களும்  மனிதர்களே என்பதை மறந்து சாமானிய மனிதர்கள் அவர்களைத் தெய்வத்துக்கு நிகராகக் கருதுகின்றனர். கட்டற்ற சுதந்திரம் அந்தச் சிலரது தன்னிலையைக் குலைத்து, அவர்களுக்குள் இருக்கும் விகாரத்தை வெளிவரச் செய்கிறது.

அப்படிப்பட்டவர்கள் காலங்காலமாக எல்லா மதங்களிலும் இருந்துவருகின்றனர். பக்தியின் போர்வையில் அவர்கள் நடத்தும் அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் சொல்லில் அடங்காதவை. மக்கள் விழிக்காவிட்டால், சட்டம் அவர்களைத் திருத்தாவிட்டால், தந்தை பெரியார் கேட்ட “சாமியாரில் என்னடா போலிச் சாமியார்?” என்ற கேள்வியை ஒட்டுமொத்தச் சமூகமும் கேட்கும் நிலை உருவாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்