முகங்கள்: இது பெண்களின் பிரச்சினையும்தான்

By நந்தினி வெள்ளைச்சாமி

இன்று நாம் சந்திக்கும் இயற்கைப் பேரிடர்களுக்கு ஆணாதிக்க வளர்ச்சித் திட்டங்களும் பெண்களை இயற்கையிலிருந்து விலக்கியதுமே காரணம் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா.

சூழலியல் போராளியான வந்தனா சிவா, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சூழலியல் தொடர்பான களச் செயல்பாடுகளில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இவரது ‘நவதானியா’ அமைப்பு, பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதுடன் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்துவருகிறது.

மக்களுக்கும் சூழலியலுக்கும் எதிரான திட்டங்கள் எல்லாமே வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையில் நியாயப்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் வந்தனா சிவா, நம் சுற்றுச்சூழல் குறித்த பார்வையில் ஒரு குருட்டுத்தன்மை உள்ளது எனச் சொல்கிறார்.

mugangal 2jpgவந்தனா சிவா

“சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களின்  பிரச்சினையாக மட்டும் நினைக்காமல் நம் எல்லோருடைய பிரச்சினையாகவும் கருதி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சூழலியல் பிரச்சினைகள் நம் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

அரசின் வன்முறை, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் மக்கள் போராட்டங்களை முற்றிலும் ஒடுக்கிவிட முடியுமா? அவர்களின் குரல்களை நசுக்கிவிட முடியுமா? தங்களின் உரிமைகளுக்காகவும் இயற்கையின் உரிமைகளுக்காகவும் போராடும் மக்கள், இயற்கை மீது என்ன மாதிரியான வன்முறை தொடுக்கப்படுகிறதோ அதே வன்முறையை எதிர்கொள்கின்றனர். ஆனால், இயற்கையின் குரலோ மக்களின் குரலோ ஒருபோதும் அமைதியாகிவிடுவதில்லை” என்கிறார் வந்தனா சிவா.

பெண்களுக்கே பாதிப்பு அதிகம்

மக்கள் சந்திக்கும் சுகாதாரம், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளை சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் நாம் இணைக்க வேண்டும் என்று சொல்லும் வந்தனா சிவா, சூழலியல் பிரச்சினைகளால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் அதன் ஆபத்துகளுக்கு அதிக விலை கொடுப்பவர்களாக பெண்களே இருக்கின்றனர் என்கிறார்.

“உணவு, குடிநீர், காற்று என வாழ்வாதாரப் பொருளாதாரத்துக்கு ஆதாரமே பெண்கள்தாம். வேளாண் நிலங்கள், உணவு, நீர் போன்றவை அழிக்கப்படும்போதோ மாசுபடுத்தப்படும்போதோ பெண்கள் எழுச்சியுடன் போராடுகின்றனர். காரணம் அந்த அழிவைச் சுமப்பவர்களாகப் பெண்களே இருக்கின்றனர்” என்று சொல்லும் வந்தனா சிவா, அரசின் பல வளர்ச்சித் திட்டங்களைத் தன்னுடைய Staying Alive புத்தகத்தில், ‘ஆண்களுக்கான வளர்ச்சி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஆணாதிக்கம் கொண்டவையாகவும் அழிவை நோக்கியதாகவும் உள்ளன. இயற்கையிலிருந்து மனிதர்களைப் பிரிக்கும் இயந்திரத்தனமான, தொழில்மயப் புத்தியிலிருந்து நாம் வெளியேவர வேண்டும். நாம் இயற்கையின் அங்கம், இயற்கைக்கு வெளியே நாம் இருக்கவில்லை. வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஒவ்வொருவரும் இயற்கையைத்தான் சார்ந்திருக்கிறோம்.

அனைவரின் தேவைக்கும் இந்தப் பூமி போதுமானதாக இருக்கிறது; ஆனால், சிலரின் பேராசைக்கு அதனால் ஈடுகொடுக்க முடியாது என காந்தி கூறியிருக்கிறார். இயற்கை மீதும் மக்கள் மீதும் தொடுக்கப்படும் போர் பேராசை கொண்டவர்களாலும் அவர்களுக்கு உதவும் அரசுகளாலும் ஏவப்படுகிறது. வர்க்கம், இனம், மதம், சாதி, பாலினம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் இயற்கையின் உரிமைகளையும் அடிப்படையாகக்கொண்ட ஜனநாயகத்தைச் சார்ந்துதான் நமது எதிர்காலம் இருக்கிறது” என்று தீர்மானமாகச் சொல்கிறார் வந்தனா சிவா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்