சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் என்று மல்யுத்தத்தில் சாதிக்கும் வீராங்கனைகளுக்கு இந்தியாவில் இன்று பஞ்சமில்லை. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் பெயருக்குக்கூட மல்யுத்த வீராங்கனை யாரும் இல்லை. அந்தக் குறையைத் தீர்த்துவைத்தவர் கீதிகா ஜஹார். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.
ஹரியாணாவில் உள்ள ஹிசார் நகரின் விளையாட்டு அலுவலராக இருந்தார் கீதிகாவின் அப்பா சத்யவிர் சிங் ஜஹார். மல்யுத்த வீரரான அவர் மூலமே கீதிகாவுக்கு மல்யுத்த விளையாட்டு அறிமுகமானது. வீரர்களும் வீராங்கனைகளும் முட்டி, மோதி, புரண்டு விளையாடுவதைப் பார்த்ததுமே கீதிகாவுக்கு அந்த விளையாட்டு பிடித்துப்போனது.
அதை அவர் ஆர்வமாக விளையாடத் தொடங்கியபோது அவருக்கு 13 வயதுதான் ஆகியிருந்தது. தந்தையே பயிற்சியாளராக இருந்து கீதிகாவுக்கு மல்யுத்தத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மல்யுத்தப் போட்டிகளில் களமிறங்கும் அளவுக்கு முன்னேறினார் கீதிகா. 1999-ல் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எடுத்தவுடனே இந்தப் போட்டியில் ஹரியாணா வீராங்கனையாகக் களமிறங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 56 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற அவர், நான்காமிடத்தைப் பெற்றார். ஆனால், ஹரியாணா மாநில அளவில் சிறந்த மல்யுத்த வீராங்கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது.
பாரத் கேசரி
ஹரியாணாவில் ‘பாரத் கேசரி’ என்ற பெயரில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கான மல்யுத்தப் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் முதன்முறையாக கீதிகா பங்கேற்றார். அந்தப் போட்டியில் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சந்த்ஜி ராமின் மகளை கீதிகா தோற்கடித்தார். 2000-ல் நடைபெற்ற தொடர் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி ‘பாரத் கேசரி’ என்ற பட்டத்தைப் பெற்றார் கீதிகா. இதன் பிறகு அடுத்த ஒன்பது ஆண்டுகளும் தொடர்ச்சியாக ‘பாரத் கேசரி’ விருதை கீதா வென்றது வரலாறு.
‘பாரத் கேசரி’ விளையாட்டின் மூலம் பெற்ற புகழ் வெளிச்சம், கீதிகாவுக்கு மல்யுத்த விளையாட்டில் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் மல்யுத்தத்தில் முன்னேறினார். 2001-ல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக அவர் பங்கேற்றார்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என எல்லாப் பிரிவுகளிலும் பங்கேற்ற கீதிகா, அனைத்திலுமே தங்கப் பதக்கங்களை அள்ளினார். இன்றுவரை யாருமே முறியடிக்க முடியாத தேசிய சாதனை இது. அனைத்துவகையான பிரிவுகளிலும் பங்கேற்று எல்லாப் பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கும் இவர் சொந்தக்காரர். அதனால்தான் இவரை ‘கோல்டன் குவார்டட்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
சர்வதேசப் பயணம்
தேசிய அளவில் மல்யுத்தத்தில் அதிரடியாக முன்னேறிக்கொண்டிருந்த கீதிகாவின் சர்வதேசப் பயணம் 2002-ல்தான் தொடங்கியது. அமெரிக்காவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். இந்தப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். பதக்கம் வெல்லாவிட்டாலும் அதில் கிடைத்த அனுபவம் அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல அவருக்கு உதவியது.
இடையிடையே தேசிய அளவிலும் பங்கேற்றார். 2002-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வெல்வதில் வேகம் காட்டினார். ஓராண்டு கழித்து கிரீஸில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, காலிறுதிவரை முன்னேறினார்.
அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அதே ஆண்டில் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. ஏனென்றால், கீதிகா பெற்ற முதல் சர்வதேசப் பதக்கம் இதுதான்.
2005-ல் சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் கீதிகா. அதே ஆண்டில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதால், தொடரின் சிறந்த மல்யுத்த வீராங்கனையாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். காமன்வெல்த் தொடரில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை கீதிகாதான்.
முத்திரை பதித்த பதக்கம்
இவற்றோடு கீதிகாவின் பயணம் முடிந்துவிடவில்லை. 2006-ல் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் பொட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். இந்திய மல்யுத்தத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய விளை யாட்டு மல்யுத்தப் பிரிவில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், இந்திய மல்யுத்தக் களம் பூரித்துப்போனது. அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்லும்வரை கீதிகா வென்ற வெள்ளிப் பதக்கமே மிகப் பெரிய சாதனையாக இருந்தது.
தற்காலிக ஓய்வு
2007-ல் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற கீதிகா, தேசிய அளவிலும் முத்தாய்ப்பாக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். 1999 முதல் 2007வரை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுவந்த கீதிகா, 2008 தொடங்கி 2012 வரை சில காரணங்களால் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
மீண்டும் சாதனை
நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012-ல் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். இடைவெளி விட்டுக் களத்துக்கு வந்தபோதும் பதக்கத்தை வெல்ல அவர் தவறவில்லை. தங்கப் பதக்கம் வென்றுகாட்டினார். அதன் பிறகு மீண்டும் துடிப்போடு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
2013-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர், 2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். அதே ஆண்டில் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மல்யுத்த வழிகாட்டி
கீதிகாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஹரியாணா அரசு அவரைத் துணைக் காவல் கண்காணிப்பாளராக 2008-ல் நியமித்தது. மல்யுத்தத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கீதிகாவுக்கு 2006-ல் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மல்யுத்தப் பிரிவில் அர்ஜுனா விருது பெற்ற முதல் வீராங்கனையும் இவரே. 2009-ம் ஆண்டில் கல்பனா சாவ்லா விருதையும் பெற்றார்.
தவிர, ஹரியாணா மாநில அரசின் சிறந்த வீராங்கனைக்கான ‘பீம்’ விருதையும் கீதிகா பெற்றிருக்கிறார். 2016-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது 33 வயதாகும் கீதிகா, கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறார்.
முழுக்க முழுக்க ஆண்மயமான மல்யுத்த விளையாட்டைப் பெண்களுக்குமான விளையாட்டாக அறியவைத்தவர் கீதிகாதான். அவருக்கு முன்புவரை மல்யுத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெண்கள் யாருமே கோலோச்சவில்லை. மல்யுத்தத்தில் கீதிகா பெற்ற வெற்றிகளால் உற்சாகமான பெண்கள், அவரைப் பின்பற்றி மல்யுத்தத்தில் காலடி எடுத்துவைத்தனர். அந்த வகையில் பெண்கள் மல்யுத்தத்தின் முகவரி அவர்!
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago