இசையின் அழகிய முகம்
தனித்துவம் மிக்க இனிமையான குரலும் நளினம் மிகுந்த நடிப்பாற்றலும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர்கள் அரிதிலும் அரிது. ருமேனியாவில் 1913 செப்டம்பர் 25-ல் பிறந்த மரியா டனாசே, அந்த அரிதானவர்களில் ஒருவர். பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு அவருடையது. ருமேனியாவில், அவர் அளவுக்குக் கொண்டாடப்பட்ட பாடகரும் இல்லை; நடிகரும் இல்லை.
isaiyinjpgrightஅவருடைய தந்தைக்குச் சொந்தமான நாற்றுப்பண்ணையில் பணிப் பெண்கள் பாடிய பாடல்களே மரியாவின் கலைத்திறனுக்கான விதைகள். நாட்டுப்புற இசையிலும் பாரம்பரிய இசையிலும் இயல்பிலேயே திறன்மிக்கவராக மரியா இருந்தார். கல்லுக்குள்ளும் கசியும் ஈரத்தைப் போல அவரது பாடல்களில் காதல் வழிந்தோடியது. இரண்டாம் உலகப் போரில் காயமடைந்த வீரர்களின் வேதனையைக் களையும்விதமாகப் போர்க்களத்துக்கே சென்று பாடினார்.
லியோ டால்ஸ்டாயின் நாடகங்களில் நடித்துள்ளார். ருமேனியாவில் இசையின் அரசியாகவும் நடிப்பின் அரசியாகவும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 1963 மே1 அன்று பாதியிலேயே நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சியே அவரது கடைசி நிகழ்ச்சி. 50-வது பிறந்த நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இவ்வுலகை விட்டுச் சென்றார். அவரது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 25 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
பெண்ணுக்கு மட்டுமே வேதனையா?
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்க நீதிபதி பிரெட் கவனாவுக்கு ஆதரவாக, ‘அந்தப் பெண்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே காவல்துறையை அணுகியிருக்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்து பெரும் அதிர்ச்சியை அளித்தார். இதற்கு எதிர்வினையாக அமெரிக்கத் தொலைக்காட்சியின் பிரபல முகமான பத்மலக்ஷ்மி இப்படி எழுதியிருக்கிறார்: “எனக்கு அப்போது 16 வயது.
pennukkujpgஎனது 23 வயது நண்பருடன் புத்தாண்டு பார்ட்டிகளுக்குச் சென்றேன். பின் களைப்பில் அவரது வீட்டிலேயே தூங்கிவிட்டேன். திடீரென்று என் கால்களுக்கு இடையே கத்தியால் கிழிப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. வேதனையில் திடுக்கிட்டு விழித்தேன். வலியால் அழுதேன். என்னை அழைத்துச் சென்று என் வீட்டில் விட்டார். அன்று நான் குடித்திருந்தேனா என நீங்கள் கேட்கலாம். குடிப்பதோ குடிக்காமல் இருப்பதோ அங்கு விஷயமல்ல.
ஆனால், அன்று மது அருந்தியிருக்கவில்லை. விளைவை எதிர்கொள்ளும் துணிவு இல்லாததால் இதை அப்போது நான் யாரிடமும் சொல்லவில்லை. பதின்பருவத்தில் ஒருவர் செய்த தவறுக்காக இப்போது ஒரு ஆண் தண்டனை அனுபவிக்க வேண்டுமா என நீங்கள் கேட்கலாம். அந்தத் தவறுக்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண் மட்டும் அனுபவிக்க வேண்டுமா? பாலியல் தாக்குதல் குறித்த உண்மையை எப்போது சொல்ல வேண்டும் என வரையறுப்பது நமக்குதான் நஷ்டத்தை ஏற்படுத்தும்”.
ஆணவத்தின் அபத்த குரல்
அதிகார மமதையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிப் பிரச்சினையில் சிக்கிக்கொள்வது அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் எனப் பேசிப் பெரும் சர்ச்சையை ஒடிசா மாநில வேளாண் துறை அமைச்சர் பிரதீப் மஹரதி ஏற்படுத்தியுள்ளார். அவரது இந்தச் சர்ச்சை பேச்சு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சரின் வீட்டின் முன் பல பெண்ணிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆவேசமடைந்த சிலர் அமைச்சரின் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இந்த நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதீப், “பெண்கள் மனம் புண்படும்படியாக நான் பேசியதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சில் அதிகார மமதை மட்டுமல்லாமல் ஆணாதிக்கத் திமிரும் சேர்ந்தே ஒலிக்கிறது.
பழைய சட்டத்துக்கு புதிய தீர்ப்பு
இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தின்படி, திருமணத்தைத் தாண்டிய பாலியல் உறவில் ஈடுபடும் ஆணுக்கு அபராதமும் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் உண்டு.
இந்த நிலையில், இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் 2017-ல் உச்ச நீதிமன்றத்தில் 497-வது சட்டப்பிரிவை இருபாலருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் எனப் பொது நல வழக்கு தொடர்ந்தார். 497-ல் மாற்றங்களைச் செய்தால் அது சட்டத்தை மட்டுமல்லாமல் சமூகத்தின் ஒழுக்க விதிகளையும் நீர்த்துப்போகச் செய்துவிடும் என மத்திய அரசு வாதாடியது.
கடந்த வியாழன் அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘திருமணமான ஓர் ஆண், திருமணமான வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல’ என நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கிறோம் என கடந்த ஜூலை 18-ல் கேரள அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கடந்த மாதம் மழை வெள்ளத்தால் கேரளா இயற்கைப் பேரிடரைச் சந்தித்தது.
அந்தப் பேரிடருக்கும் கேரள அரசின் பதில் மனுவுக்கும் சம்பந்தம் இருக்கக் கூடும் என ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘சபரிமலை கோயிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம்’ என அவர்கள் கூறியுள்ளனர். இந்த அமர்வில் இருக்கும் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago