சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையிலிருந்தே பெண்களின் பணியிடப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் குரல் எழுந்திருக்கிறது.
காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர், தன் மேலதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னதையடுத்து, பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விசாரிப்பதற்கான புகார் குழு தமிழகக் காவல்துறையில் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் புகாராகப் பெண் காவல் கண்காணிப்பாளரின் புகார் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
காவல்துறையிலேயே இந்த நிலை என்றால் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கில் செயல்பட்டுவரும் அரசு, தனியார் நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை விசாரிக்கும் வகையில் புகார் குழு அமைக்கப் பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.
அது விசாகா குழு அல்ல
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற சமூக சேவகர், குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதற்காக உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த சிலரால் 1992-ல் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பன்வாரிக்கு நீதி கேட்டு விசாகா மற்றும் சில பெண்கள் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்ட வரைவு எதுவும் அதுவரை இல்லாத நிலையில் அதற்காகச் சில நெறிமுறைகளை 1997-ல் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
பத்துப் பெண்களுக்கு மேல் பணிபுரியும் அலுவலகங்களிலும் பிற நிறுவனங்களிலும் (அனைத்து வகையான பணியிடங்களும் இதில் அடங்கும்) பாலியல் புகார்களைக் குறித்து விசாரிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விசாகா நெறிமுறையில் குறிப்பிடப்பட்டது. பிறகு அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ‘பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் (தடுத்தல், தடைசெய்தல் மற்றும் குறைதீர்த்தல்) சட்டம்’ 2013-ல் அமல்படுத்தப்பட்டது.
அது, பெண்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களிலும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் ஐசிசி குழுவை (Internal Complaints Committee) உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
யாரெல்லாம் ஐசிசி குழுவில் இருக்கலாம்?
அந்தந்த நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த பெண் அதிகாரி ஒருவர் தலைவர் பொறுப்பில் இருக்கலாம். குழு உறுப்பி னர்களில் ஐம்பது சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டியது அவசியம். உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்துப் புகாரை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடும் என்பதால், இந்தக் குழுவில் நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத மூன்றாவது நபர் ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும்.
அவர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெண்ணுரிமை குறித்த புரிதல் உள்ளவராகவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம், அவர்களை அதிகாரப்படுத்துதல், அவர்களுக்குச் சாதகமான சமூகச் சூழலை உருவாக்குதல் போன்றவற்றில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
சிவில் அல்லது கிரிமினல் சட்டம் அல்லது தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்து அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தக் குழு, தன் செயல்பாடுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு ஒவ்வோர் ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குழுவில் நடைபெறும் விசாரனை குறித்து வெளியே சொல்லக் கூடாது; ரகசியம் காக்கப்பட்ட வேண்டும். புகார் வந்ததுமே குறுகிய கால அளவில் (மூன்று மாதங்கள்) விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு இல்லை
பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எத்தனை நிறுவனங்கள் அதைக் கடைப்பிடித்திருக்கின்றன எனத் தெரியவில்லை. ஐசிசி புகார் குழுவை அமைக்க வேண்டும் என்பதில் எத்தனை நிறுவனங்கள் அக்கறையோடு செயல் படுகின்றன என்பதும் விடையில்லாக் கேள்வியே. 2013-ல் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்படி தங்கள் நிறுவனத்தில் ஐசிசி குழுவை அமைக்காத நிறுவனங்கள் மீது 50 ஆயிரம் ரூபாய்வரை அபராதம் விதிக்கலாம்.
சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தும் புகார் குழுவை அமைக்காத நிறுவனங்கள் மீது இரு மடங்கு அபராதம் விதிக்கவோ, நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவோ சட்டத்தில் வழியுண்டு. ஆனால், இதையெல்லாம் யார் கண்காணிக்கிறார்கள்?
“அப்படியொரு மேல்மட்டக் கண்காணிப்புக் குழு இல்லாதது பின்னடைவே. 2013 சட்டத்துக்கு முன்புவரை விசாகா குழுவாக இருந்தது, அதன் பிறகு ஐசிசியாக மாற்றப்பட்டிருக்கிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும். மாநில அளவில் பெண்கள், குழந்தைகள் நலத்துக்கெனத் தனி அமைச்சகம் இல்லாத நிலையில் சமூக நலத்துறையின் கீழ் இது வரும். தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் ஐசிசி குழுவை அமைத்திருக்கின்றன, அவை சரியான முறையில் செயல்படுகின்றனவா என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரம் ஏதுமில்லை” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.
ஐசிசி குழுவில் மூன்றாம் நபரைச் சேர்ப்பதில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதும் அவசியம் என்கிறார் அஜிதா.
நிறுவனங்களின் பங்கு
ஐசிசி புகார் குழு அமைப்பது இருக்கட்டும். முதலில் எவையெல்லாம் பணியிடப் பாலியல் வன்முறையில் சேரும், எதற்கெல்லாம் நாம் புகார் கொடுக்கலாம் என்பது குறித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா?
பெண்களை வேலைக்கு அமர்த்தும் எந்தவொரு நிறுவனமும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். எவையெல்லாம் பாலியல் வன்முறை, அதற்குரிய தண்டனை என்ன என்பது போன்றவற்றை ஊழியர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அலுலவ அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்க வேண்டும். எத்தனை நிறுவனங்கள் இதைக் கடைப்பிடிக்கின்றன?
எதெல்லாம் பாலியல் வன்முறை?
1. உடன் பணிபுரியும் பெண் ஊழியரைப் பாலியல் விருப்பத்துடன் தொடுவது அல்லது அப்படியான வாய்ப்பை உருவாக்குவது.
2. பாலியல் விருப்பத்தை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துவது, கோரிக்கை விடுப்பது.
3. பாலியல் தொடர்பான சைகைகளை வெளிப் படுத்துவது
4. பாலியல் படங்களைக் காட்டுவது
5. உடல்ரீதியான, வார்த்தைரீதியான, வார்த்தை களற்ற பாலியல் செய்கை அனைத்தும்
- இவையெல்லாமே பணியிடப் பாலியல் குற்றத்தில் அடங்கும். இவற்றில் தனக்கு எது நேர்ந்தாலும் பாதிக்கப்பட்ட பெண், ஐசிசி குழுவை அணுகலாம். சம்பவம் நடந்து 30 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம். விசாரணை காலத்தில் சமரசப் பேச்சுவார்த்தை, பண இழப்பீடு போன்றவற்றுக்குப் பெண் ஊழியர் ஆளாக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் மூன்றாம் நபர் தேவைப்படுகிறார்.
ஆனால், ஒரு புகாருக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் செய்தவர் தண்டனை பெற வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்தச் சட்டம் பெண்களுக்கு உண்மையாகவே பாதுகாப்பு அளிக்கும். அப்படியில்லாமல் கண் துடைப்புக்கோ பெயரளவுக்கோ சம்பிரதாயத்துக்கோ மட்டுமே புகார் குழு அமைக்கப்பட்டால், அதில் புகார் செய்தும் பயனில்லை.
அப்படியொரு சூழலில் ஒரு பெண் தனக்கு நேரும் கொடுமையைச் சகித்துக்கொள்வார் அல்லது வேலையை விட்டு விலகுவார்.
புகார் குழு இல்லையென்றால்…
பணியிடத்தில் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் புகார் தர விரும்புகிறார். ஆனால், அவர் பணிபுரியும் நிறுவனத்தில் ஐசிசி குழு இல்லாத சூழலில் மாநில மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்லலாம் அல்லது நீதிமன்றத்தின் துணையை நாடலாம். ஆனால், வீட்டின் தாங்க முடியாத பொருளாதாரச் சுமையால்தான் பல பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் அவர்களால் எப்படி நீதிமன்றத்துக்கும் மற்ற இடத்துக்கும் சென்று புகார் அளித்துவிட்டு அதே இடத்தில் வேலையைத் தொடர முடியும்? “நேத்து அந்த ஆளு நேரடியாவே கேட்டுட்டான். என்ன பண்றதுன்னே தெரியல. அம்மாகிட்ட சொன்னா அழுவும், வேலைக்குப் போகாதேன்னு சொல்லும். அக்கா கல்யாணத்துக்கு வாங்குன கடனே இன்னும் அடையல. இதுல எங்கேருந்து வேலைய விடுறது?” எனத் தன் தோழியிடம் புலம்பிவிட்டு அன்றைய பொழுதைப் பயத்துடன் எதிர்கொள்வதைத் தவிர அந்தப் பெண்களுக்கு வேறு வழியிருக்காது.
சட்டம் என்பது அதைச் செயல்படுத்துகிறவர்களின் கைகளிலும் இருக்கிறது. அதுதான் பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்யவோ மறுக்கவோ செய்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago