எசப்பாட்டு 51: இணைந்தால்தான் மாற்றம் சாத்தியம்

By ச.தமிழ்ச்செல்வன்

எங்கள் எதிர் வீட்டில் ஒருவர் இருந்தார். பயங்கரக் குடிகாரர். ரொம்ப நல்லவர், பகலில். ராத்திரி 12 மணிக்கு மேல் வந்து சலம்பல் பண்ணுவதும் தன் மனைவியைக் கதறக் கதற அடிப்பதும் மிதிப்பதும் பக்கத்து வீட்டாரின் ஈரக்குலை பதறும் அளவுக்கு அந்தப் பெண் கூப்பாடு போடுவதும் அன்றாட நிகழ்வுகள். அக்கம் பக்கமுள்ள நாலைந்து வீட்டார் இவர்களால் தூக்கம் கெட்டு, நடுச்சாமத்தில் போய் பஞ்சாயத்துப் பண்ண வேண்டிய துயரம் நீடித்தது.

ஒரு நாள் பொறுமையிழந்த அவர்கள் எல்லோரும் பகலில் அவர்கள் வீட்டுக்குப் போய், “நீங்க வீட்டைக் காலி பண்ணிட்டு வேறே எங்காச்சும் போயிடுங்க. நாங்க யாரும் தூங்க முடியலே. இல்லாட்டி போலீஸ்ல புகார் கொடுக்கப்போறோம்” என்று கறாராகச் சொல்லிவிட்டனர். அந்தக் குடிகார அண்ணாச்சி, “சரி இனிமே எந்தச் சண்டை சத்தமும் இருக்காது” என்று சத்தியம் பண்ணி அனுப்பினார். குடிகாரர் பேச்சை நம்ப முடியாமல்தான் எல்லோரும் திரும்பினோம்.

ஆனால், அன்று இரவு எந்தச் சத்தமும் இல்லை. அந்த வீட்டுப் பெண்ணின் கதறல் கேட்கவில்லை. அப்படியே ஒரு வாரம் அமைதியான இரவுகளாகக் கழிந்தன. எல்லோருக்கும் நிம்மதியானது. அமைதி தவழும் குடும்பமாக அது மாறிவிட்டது என்று எல்லோரும் நம்பத் தொடங்கினோம். கொஞ்ச நாள் கழித்துத்தான் உண்மை மெல்ல வெளிவந்தது. கதவைப் பூட்டிக்கொண்டு பொண்டாட்டியின் வாயில் துணியைத் திணித்துவிட்டு அடிக்கிறானாம். அதனால் எந்தச் சத்தமும் வெளியே வருவதில்லை.

வாயை அடைக்கும் பண்பாடு

இது ஒரு குறியீட்டுக் கதை போல எனக்குப் படுகிறது. எல்லா வீடுகளுமே தம் வீட்டுப் பெண்களின் வாயில் துணியைக் கவ்வக் கொடுத்துவிட்டு அடிக்கிற மாதிரி தோன்றுகிறது. துணி என்பது ஒரு குறியீடு. வெளிப் பார்வைக்கு அமைதிப் பூங்காவாகத் திகழும் வீட்டுப் பெண்கள், தாங்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதை ‘உணராமல் இருப்பது’ ஒரு துணி. உணர்ந்தாலும், ‘இது நம்ம குடும்ப விஷயம்’ என்ற துணியை வாயில் கவ்வியிருப்பார்கள்.

ஏராளமான பெண்கள், ‘நான் நல்லாத்தானே இருக்கேன்’ என்ற அறியாமை அல்லது பொய்யைத் துணியாக வாயில் அடைத்திருப்பார்கள். இன்னும் சில பெண்கள், ‘எங்க சார் அப்படியெல்லாம் கிடையாது. ரொம்ப நல்லவங்க’ என்ற  மூட நம்பிக்கையைத் துணியாகக் கவ்வியிருப்பார்கள். ‘நானே விரும்பித்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்’ என்பது  இன்னும் ஒரு துணி.

 ‘இது ஆண்டவன் எழுதிய தலைஎழுத்து’ என்பது  பொதுவான ஒரு  துணி. ஒட்டுமொத்தப் பண்பாடும் ஒரு துணிப்பந்தாகச் சுருண்டு போய்ப் பெண்ணின் வாயை அடைத்துக்கொண்டிருக்கிறது.

ஆணின் வரலாற்றுக் கடமை

வரலாற்றின் பாதையில் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை உருவாக்கி வைத்துவிட்டோம். பத்தாயிரம் ஆண்டுகளாகப் பழகிவிட்டதால் இந்த பேதம் இயல்பானது போலவும் அதற்கு எதிராகப் பேசுவது குற்றம் போலவும் உணரத் தலைப்பட்டுவிட்டோம். அதை ஆண்களும் பெண்களும் இணைந்துதான் மீண்டும் சரிசெய்ய முடியும். அதில் ஆண் தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொள்வது முதற்படியாக இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடல் மூலம் விவாதம் நடக்க வேண்டும்.

அது இன்னும் தொடங்கப்படவே இல்லை. ஆணுக்கு நீண்ட காலச் சாதகங்கள் இருந்த காரணத்தால் ஆண்தான் இதில் முன்கை எடுக்க வேண்டும். எனக்கு எதிராக என் மனைவியையும் மகளையும் தாயையும் நான் தயார்படுத்த வேண்டும். பெண்களின் வாயில் உள்ள துணிப்பந்தைப் பிடுங்கி, தூர எறிந்து விட்டு, “பேசு பெண்ணே  பேசு… எனக்கு எதிராகப் பேசு” என்று உற்சாகப்படுத்த வேண்டியது ஆணின் வரலாற்றுக் கடமை. அதைச் செய்யாத ஆண் நான் என்றால், நான் காலத்தின் முன் குற்றவாளிதான்.

தொடர்ந்து பேசுவோம்

‘தி கிரேட்  டிக்டேட்டர்’ ஆங்கிலத் திரைப்படத்தில் சர்வாதிகாரியின் வேடத்திலிருக்கும் அப்பாவி சாப்ளின்,  வானொலியில் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையைக் கேட்கும்போதோ அந்த உரையின் பிரதியை வாசிக்கும்போதும் எனக்கு  ஒரு கற்பனை மனத்தில் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்திய நாட்டின் பெண்களையெல்லாம் ஒரு பெரிய மைதானத்தில் அமரவைத்து அல்லது தேசத்தையே மைதானமாக்கிப் பெண்களைக் கூட்டிவைத்து, என்னை மேடையேற்றி மைக் முன்னால் நிறுத்தி ஆண்களின் பிரதிநிதியாகப் பெண்களை நோக்கி உரையாற்றச் சொன்னால் நான் என்ன பேசுவேன்? கோடான கோடி வார்த்தைகள் நெஞ்சில் அலையடித்து மோதுகின்றன. அந்த உரையின் ஆரம்ப வார்த்தைகளை மட்டும் இங்கே தந்து இந்தத் தொடரை நிறைவுசெய்வோம்:

“முதலில் மன்னியுங்கள். ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை. காலத்தின் கைதியாக நான் இப்படி ஆகிவிட்டேன். மன்னியுங்கள். அன்பின் பேரால், காதலின் பேரால், கடமை என்னும் பேரால் உங்கள் சுயத்தை அழித்த குற்றவாளியாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த ஊர்களுக்கும் நகரங்களுக்கும் வருவதற்கு முன்னால் நாம் ஒருவருக்கொருவர் அன்பாகவும் அனுசரணையாகவும்தான் இருந்தோம்.

அப்போது நாம் ஆண்களாகவும் பெண்களாகவும் இல்லை. மனிதர்களாக இருந்தோம். வரும் வழியில் எங்கோ அந்த வாழ்வின் சமன்பாட்டைத் தொலைத்துவிட்டோம். தனிச்சொத்தை நான் கைக்கொண்டேன். கற்பெனும் சிறைக்குள் உங்களைத் தள்ளினேன். குடும்பம் என்பது ஆண்களுக்கான சேவை மையம் என்றாக்கினேன். சேவகர்களாக நீங்களே இருக்கச் செய்தேன். மன்னிப்பீர்களா?

தொலைத்தவற்றை மீட்போம்

உங்களை முகமற்றவர்களாக்கி வெறும் உடல்களாகப் பாவிக்கத் தொடங்கினேன். எனக்குப் பாலூட்டிச் சீராட்டும் உடல். என் தலைகோதி உணவூட்டும் உடல். என் இச்சைகளைத் தணிக்கும் உடல்.

மன்னியுங்கள். நீங்கள் புழங்கும் ஒவ்வொரு வெளியையும் நீங்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றிக்கொண்டே வந்தேன். சதுரங்கப் பலகையில் நீங்கள் அன்பெனும் காயை வைத்தபோது நான் துரோகத்தைக் கூசாமல் வைத்தாடினேன். நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள்.

அப்பா என்று மடிமீது செல்லமாய் வந்தமர்ந்த உங்களைப் பாலியல் வன்கொடுமை செய்தேன். எட்டு வயது நிரம்பாத உங்களை நான் என்னவெல்லாம் செய்துவிட்டேன்? மன்னிப்பு உண்டா இந்தப் பாதகங்களுக்கு? என் கைகளால் என் முகத்திலறைந்து கதறி, கண்ணீரால் கழுவுகிறேன் உங்கள் மீது படிந்துள்ள ரத்தக்கறையை.

ஆனால், இப்படி வாழப் படைக்கப்பட்டவர்களல்ல நாம். என் தலை கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து வரலாற்றின் வாளெடுத்து வந்து என் தலையை வெட்டி வீழ்த்துங்கள். தேசம் நெடுகிலும் வெட்டி வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் ஒடுக்கப்பட்ட ஒரு சகோதரரின் தலையை என் உடம்பில் பொருத்துங்கள். இது இதிகாச காலம் தொட்டு நம் நாட்டில் இயல்பாக நடப்பதுதானே. அந்தப் புதிய தலையுடன் நாம் இருவரும் கரம்கோத்துக் கால இயந்திரத்தில் ஏறி வரலாற்றில் பயணிப்போம், நாம் தொலைத்தவற்றை எல்லாம் மீட்டுவர…”

ஆம், நாம் தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும், வீடுகளிலும் வெளிகளிலும் அரச அவைகளிலும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்