இயேசு கிறிஸ்து தன் சீடர்களுடன் படகில் சென்றுகொண்டிருந்தார். கடலில் பெருங்காற்று வீசியது. அலையின் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் கொந்தளிப்பு படகைத் தலைகுப்புறக் கவிழ்த்துவிடுமோ எனப் பயப்பட்டார்கள் சீடர்கள். இயேசுவோ நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். உயிருக்குப் பயந்த சீடர்கள் படபடப்புடன் இயேசுவை எழுப்பினார்கள்.
நிலைமையை அறிந்த இயேசு, சீடர்களின் விசுவாசமற்ற தன்மையை உணர்ந்து வேதனை அடைந்தார். தான் உடனிருந்தும் சீடர்கள் பயப்படுகிறார்களே என்ற எண்ணம் அவருக்கு. அவர் சத்தம் போட்டுக் கடலை அடக்கினார். படகு சீராகச் சென்றது என்பதெல்லாம் இயேசு குறித்துச் சொல்லப்படும் கதை.
கடவுள் தன்மை கொண்டவர் என்று அறியப்படுபவர் மீதான நம்பிக்கையே சிலவேளைகளில் தகர்ந்துவிடும்போது, சாமானிய மனிதர்கள் மீதான நம்பிக்கை எவ்வளவு தூரம் தாங்கும்? ஆனால், சிலருக்குச் சிலர் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையைக் குலைக்கவோ சிதைக்கவோ முடியாது. அவர்களாக மாற்றிக்கொள்ளாதவரை அந்த நம்பிக்கையை வெளியிலிருக்கும் ஒருவரால் மாற்ற முடியாது. அப்படியான அசைக்க முடியாத நம்பிக்கையை கிட்டா(ன்) மீது பொட்டுக்கன்னி வைத்திருந்தார். காதலின் வேரைப் பற்றிப் பிணைத்திருந்தது அந்த நம்பிக்கை.
பண்ணையாளின் விசுவாசம்
சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ (1996) திரைப்படத்தில் பொட்டுக்கன்னியை மதுபாலாவின் உருவத்தில் பார்த்திருக்கிறோம். பொட்டுக்கன்னி, கிட்டா மீது உயிரையே வைத்திருந்தாள். பொட்டுக்கன்னியின் தந்தை ஒரு கீதாரி. கிடைபோட்டுக் கிடைத்த வருமானத்தில் அவரும் பொட்டுக்கன்னியும் பிழைத்துவந்தார்கள். தனக்கு ஆதரவாக இருந்த தந்தையின் மீது பொட்டுக்கன்னி எவ்வளவு பாசம் வைத்திருந்தாளோ அதற்கீடான பிரியத்தை கிட்டா மீதும் வைத்திருந்தாள்.
ஆனால், கிட்டாவுக்கோ அந்த ஊர் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே முதன்மையாகப் பட்டது. தன் தாயை இழந்துநின்ற நேரத்தில் ஆறுதலும் தேறுதலும் தந்த அய்யாவின் கௌரவத்தையும் அந்த ஊர்ப் பெண்களின் மானத்தையும் காப்பதே தனது தலையாய கடமை என்று எண்ணி வாழ்கிறான். அய்யாவின் மீது அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
இவ்வளவுக்கும் அவன் அய்யா வீட்டின் பண்ணையாள்தான். நிஜத்தில் பண்ணையாளை முதுகொடிய வேலை வாங்குவதுதான் பண்ணையார்களின் செயல். ஆனால், திரைப்படத்தில் சாந்தசொரூபியாக வாராதுவந்த மாமணியாக பண்ணையார் தோற்றம்கொள்கிறார்.
அந்த ஊரின் எந்தப் பெண்ணையும் காதலியாகப் பார்ப்பதே தவறு என்று கிட்டா நினைக்கிறான். அவனை நம்பி பொண்ணுபுள்ளைகளை அனுப்பும் ஊருக்குச் செய்யும் துரோகம் அது என்று நம்புகிறான்.
அது ஒருவகையில் அறியாமைதான். ஆனால், அவனது நினைப்பை அவனால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவன் என்பதால்தான் பொட்டுக்கன்னியும் அவனை விரும்புகிறாள். தன் காதலை பொட்டுக்கன்னி சொன்னபோது, கிட்டா அதை மறுத்துவிட்டான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை; அது உணர்வுபூர்வமானது. அந்தக் காரணத்தைக் கேட்ட பிறகு, பொட்டுக்கன்னியாலும் அவனை வற்புறுத்த இயலவில்லை.
கசிந்துருகும் காதல்
யதார்த்தத்தில் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் கிட்டா. அப்படியொருவர் இருக்கப்போவதுமில்லை. எனவே, அவனையே நினைத்து அவள் வாழ்கிறாள். அவன் குறித்தான கற்பனைகளிலும் ஆசைகளிலும் நாட்களை நகர்த்திவந்தாள். பொய்யாய்ப்போன காதலின் கதகதப்பில் காலங்கடத்துகிறாள். துணையாக இருந்த தகப்பனையும் அவன் ஆசையாக வளர்த்த கால்நடைகளையும் ஊரின் பகை தின்று செரித்துவிடுகிறது. பொட்டுக்கன்னி அந்த ஊரில் தனியாகவே வாழ்ந்துவருகிறாள்.
அவள் மனம் மயங்கும் பொழுதுகளில் கிட்டாவின் அரூபத் தோளில் சாய்ந்துகொண்டு ஆறுதலடைகிறாள். கிட்டாவைத் தவிர வேறு யாரையும் மணமுடிக்க அவளுக்கு மனமில்லை. ஆகவே, அய்யா அவளது திருமணம் தொடர்பாக எடுத்த முயற்சிகளும் அவளுக்குப் பெரிய அளவில் உவப்பளிக்கவில்லை.
இப்படியான அபத்தமான விளையாட்டுகளில் நிஜ வாழ்வில் பெண்கள் ஈடுபடுவது அரிதிலும் அரிது. ஆனால், புனிதமான கதாபாத்திரங்களைப் பார்த்து ரசிப்பதில் பார்வையாளர்களுக்கு ஒரு பிரியம் எப்போதுமே இருக்கிறது. காண முடியாதவற்றைக் காணவைக்கும் சினிமாவைத்தானே ரசிக்க முடியும்.
அய்யா என்னதான் நல்ல மனிதராக இருந்தாலும் அவருக்கும் பகை இருக்கும்தானே? அவருடைய உறவுக்கார காளிச்சாமிதான் அவருக்குப் பகை மனிதன். அவன் பிறவியெடுத்ததன் நோக்கமே அய்யாவை வெற்றிகொள்ளத்தான். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவன் அவன். அய்யாவின் செல்ல மகள் அலமேலு நாச்சியார். அவளுடைய காதலும் பொட்டுக்கன்னியின் காதலைப் போலவே நம்பிக்கையெனும் நரம்பில் கோக்கப்பட்டது. எல்லோருடைய நம்பிக்கைகளும் பலிப்பதில்லையே.
இதிலென்ன பண்பாடு?
காளிச்சாமியின் தமையன் மலைச்சாமியைக் காதலிக்கிறாள் அலமேலு. பகைவர் மீது பருவப் பெண்கள் காதல் கொள்வது ஒன்றும் புதிதில்லையே. அலமேலுவின் நம்பிக்கையைக் கானல் நீராக்கிவிடுகிறான் அவன். காதலின் சுகம், விபரீத எல்லையைக் கடக்க தாய்மையின் நுழைவாயிலில் நிற்கிறாள் அலமேலு. மலைச்சாமியோ அவளைக் கரம்பற்றத் தயங்குகிறான். இது எதுவும் அறியாத குடும்பத்தினர் அலமேலுவுக்கு மற்றொருவருடன் மண ஏற்பாட்டை நடத்துகிறார்கள். விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி உயிரைப் போக்கிக்கொள்ள விழைகிறாள் அலமேலு.
திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் கருத்தரித்தால் ஊரார் வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள்; குடும்ப மானம் போய்விடுமென்று எந்த கோமகன் சொன்னாரோ தெரியவில்லை. திருமணத்துக்கு முன்னர் பெண் கருத்தரித்தாலும் ஊர்பேசும்; திருமணத்துக்குப் பின்னர் பெண் கருத்தரிக்காவிட்டாலும் ஊர்பேசும் என்றால் சிக்கல் ஊராரிடம்தானே? கருத்தரித்தல் வெறும் அறிவியல்சார் உடல்ரீதியான நிகழ்வு எனும்போது, அதை ஏன் பண்பாட்டுடன் முடிச்சிட்டு வைத்திருக்கிறார்கள்?
விஷயம் கிட்டாவுக்குத் தெரியவருகிறது. அய்யாவுடைய கௌரவம் சந்தி சிரித்துவிடுமே எனப் பயப்படுகிறான். சண்டைக்காரரின் காலில் விழுகிறான். அய்யாவுக்குத் தெரியாமலேயே அய்யாவுடைய பிரிய மகளின் சிக்கலைத் தீர்க்க முயல்கிறான். ஆனால், அதில் அவனே சிக்கிக்கொள்கிறான். அலமேலுவின் நிலைமைக்குக் கிட்டாதான் காரணமென அய்யா புரிந்துகொள்கிறார். அவனை எல்லோரும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குகிறார்கள். அந்த ஊரில் அவனை நம்ப ஒருவருமே இல்லாத சூழலில் கிட்டா இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டான் என பொட்டுக்கன்னி மட்டுமே நம்புகிறாள். அவனுக்குப் பக்கத்துணையாக நிற்கிறாள்.
உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஊருக்குப் புரியவைத்துவிடுகிறான் கிட்டா. தன் தவற்றை நினைத்து வருந்துகிறார் அய்யா. ஆனால், தெய்வம்போல் நம்பிக்கை வைத்திருந்த அய்யா தன்னைச் சந்தேகப்பட்டதைத் தாங்கிக்கொள்ள கிட்டாவால் இயலவில்லை. இனியும் அந்த ஊரில் இருக்க அவன் மனம் ஒப்பவில்லை. தன்னை வாழவைத்த அந்த ஊரைவிட்டுத் தன்னைக் காதலித்த பொட்டுக்கன்னியின் கரம்பற்றி வெளியேறுகிறான். அய்யா மீது கிட்டா கொண்டிருந்த நம்பிக்கை அவனுக்குக் கைகொடுக்கவில்லை; ஆனால், கிட்டாமீது பொட்டுக்கன்னி கொண்டிருந்த நம்பிக்கை அவளைக்
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago