பார்வையற்றவர்களின் ஒளி
டோரினா நோவில்ஸ், பிரேசிலின் புகழ்பெற்ற கல்வியாளர் வழக்கறிஞரர். பார்வைக் குறைபாடு கொண்டவர்களின் தேவைகளுக்குச் செவிசாய்க்கும் நாடாக பிரேசில் மாறியதற்கு இவரது ஓய்வற்ற முனைப்பே காரணம். 17 வயதில் எதிர்பாராதவிதமாக நோயின் தாக்குதலால் பார்வையை இழந்தார். பார்வையை முற்றிலும் இழந்த நிலையிலும் வழக்கமான பள்ளியிலேயே தொடர்ந்து படித்தார். புத்தகங்களைப் பெறுவதற்கு மிகுந் சிரமப்பட்டார் ். கலை, கலாச்சாரம் போன்றவை தொடர்பான புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பெரும் போராட்டத்தை மாணவப் பருவத்திலேயே முன்னெடுத்தார். படிப்பு முடிந்ததும் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பார்வைக் குறைபாடு கொண்டவர்களின் கற்றலுக்குப் புது உத்திகளை அறிமுகப்படுத்தினார்.
1946-ல் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, பிரேசிலின் முதலாவது பிரெயில் அச்சகத்தைத் தொடங்கினார். இதுவே பிரேசிலின் மிகப் பெரிய பிரெயில் அச்சகம். தன்னார்வலர்களின் உதவியுடன் எண்ணற்ற புத்தகங்களை பிரெயில் வடிவில் மாற்றினார். பார்வையற்றவர்களின் கல்வி உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார். அதன் பலனாக, பிரேசிலில் அதற்குச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. 1979-ல் உலகப் பார்வையற்றவர்கள் அமைப்பின் தலைவரானார். எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள அவரின் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மே 28 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
இது பெண்களின் ராஜ்ஜியம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 66 பெண்களே நாடாளுமன்றம் சென்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 716 பெண் வேட்பாளர்களில் 78 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பிபைப் பெற்றுள்ளனர். 17-வது மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட 47 பெண்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 54 பெண் வேட்பாளர்களில், இருவர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிட்ட 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக சார்பில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், அந்த ஒதுக்கீட்டை அளித்த மாநிலங்கள் என்ற சாதனையை மேற்கு வங்கமும் ஒடிஷாவும் படைத்துள்ளன. மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு 41 சதவீத இட இதுக்கீடு வழங்கப்பட ஒடிஷாவில் 33 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம் சார்பில் தற்போது ஐவர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், பா.ஜ.க.வின் சார்பில் இரண்டு பெண்கள் வென்றுள்ளனர். இதனால், ஒடிஷாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் ஏழு பேர் பெண்கள். நவீன் பட்நாயக்கின் தந்தை காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு நவீன் பட்நாயக் ஆட்சிக்கு வந்ததும் 2012-ல் அந்த ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். அதேபோல், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீதப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார். ‘மிஷன் சக்தி’ மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பல நலத்திட்டங்களை நவீன் செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதித்த இளம் பெண்
மிக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான பெண் என்ற பெருமையை சந்திராணி முர்மு (25) பெற்றுள்ளார். ஒடிஷாவின் கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த சந்திராணி, பிடெக் பட்டதாரி. படிப்பை முடித்ததும் அரசு வேலை தேர்வுக்குத் தயாராகிவந்தார். சந்திராணியின் தந்தை சமூக சேவையில் ஆர்வம் உடையவர். சிறு வயது முதலே தந்தையின் தாக்கத்தால் சந்திராணியும் சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் உறவினரின் அறிவுறுத்தலின் பேரில் பிஜு ஜனதா தளம் சார்பில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டார் சந்திராணி.
அவரை எதிர்த்து நின்றவர் பாஜகவின் ஆனந்த நாயக். இருமுறை எம்.பி.யாகப் பதவிவகித்த ஆனந்த நாயக்குக்கு சந்திராணி முர்மு கடுமையான போட்டி்யாளராக இருந்தார். இறுதியில் 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திராணி வெற்றி பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திராணி, “மக்கள் பிரதிநிதியாக நான் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன என்பதுகூட எனக்குத் தெரியாது. கியோஞ்சர் பகுதியின் மூலை, முடுக்கெல்லாம் சென்று மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் என் முதல் வேலை” என்று கூறியிருக்கிறார்.
புறணி பேசுவதில் ஆண்களே முதலிடம்
பெண்கள் மட்டும்தாம் புறணி பேசுவார்கள் என்று பல காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், உண்மையில் ஆண்கள்தாம் புறணிக்குப் பெண்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது லண்டனைச் சேர்ந்த டேவிட் சேல்ஸ் என்பவர் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின்படி, ஆண்களில் சராசரியாக ஐவரில் ஒருவர் ஒரு நாளைக்கு சுமாராக மூன்று மணி நேரம்வரை புறணி பேச மட்டும் எடுத்துக் கொள்கிறார். அதுவும் வேலை நேரத்தில் பெண் ஊழியர்களைப் பற்றிப் பேசுவது, பதவி உயர்வில் தனக்கு எதிராக இருப்பவர் பற்றிப் பேசுவது போன்றவற்றின் மீது ஆண்களுக்கு அலாதிப் பிரியமாம். பத்துப் பேரில் ஒரு ஆண் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி மிகக் கீழ்த்தரமாகப் பேசுவது, அவரைப் பற்றி தவறான விஷயங்களைப் பரப்புவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார். வேலை நேரத்தில் புறணி பேசுபவர்களில் ஆண்கள் 55 சதவீதமாகவும் பெண்கள் 46 சதவீதமாகவும் உள்ளனர். அந்த 46 சதவீதப் பெண்களும் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினை, சீரியல் கதைகள், பழைய தோழிகளைப் பற்றிய கதைகள், அழகுக் குறிப்புகள் போன்றவற்றைத்தான் அதிகம் பேசுவார்களாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago