அமுதாவுக்கு வலி உயிர்போகும் போலிருந்தது. “அய்யோ அம்மா எனக்குப் பொறுக்க முடியலையே” என்று அலறியவள் எந்தத் திசையிலிருந்தாவது தனக்குச் சாவு வாராதா என்று ஏங்கினாள். இவள் அலறலைக் கேட்டதும் அவள் பெரியம்மா வீரமணி, “உனக்கு ஒண்ணும் இல்ல.
இந்தா இப்ப சத்தோடத்தில முத்துக் கணக்கா ஒரு புள்ளய பெத்து எடுக்கப்போறே” என்றாள் தன்னோடு அணைத்தவாறு. இன்னொரு சின்னம்மா அவள் தலையை அன்போடு தடவிக்கொண்டு, “கொஞ்சம் பொறுத்துக்கோ. உனக்கு வீமன், அர்ச்சுனன் கணக்கா ஆம்பளப்புள்ள பொறக்கப் போறான்” என்றாள்.
அமுதாவுக்கு இருந்த இருப்பில் வீமனோ அர்ச்சுனனோ ஏதோ ஒன்று வயிற்றை விட்டுக் கழிந்தால் போதுமென்று அலைமோதிக்கொண்டு வந்தாள்.
“பிள்ளைப்பேறு வீட்டுல எல்லா வசதியும் செஞ்சிட்டீகல்ல. மெல்ல அணவா ரெண்டு பேரு அமுதாவ கூட்டிக்கிட்டு ராக்கி வீட்டுக்கு வந்துருங்க. நானு செத்த முந்திப் போறேன்” என்ற வைரத்தா வெற்றிலைக்குச் சுண்ணாம்புத் தடவியவாறே முன்னால் நடந்தாள்.
சத்தத்தால் நிறையும் வீடு
கிராமங்களுக்கென்று ஒரு பழக்கம் இருந்தது. ஊருக்குள்ளிருக்கும் அவரவர் வீட்டில் எப்போதும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில்லை. பிள்ளை பெறுவதற்கென்று ராசியான வீடென்று அவர்கள் இரண்டு வீடுகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள்.
200 வீடுகளே நிறைந்த சிறிய கிராமமாயிருந்தாலும் அப்போது கர்ப்பத்தடை என்பது இல்லாததால் மாதத்துக்கு இரண்டு போ் பிள்ளை பெற்றுக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த இரண்டு வீடுகளில் பிள்ளைப் பெறுகிறவர்கள் முதன் முதலாக எந்தச் சேதமுமில்லாமல் பிள்ளைகளைப் பெற்றதினால் அந்த வீடுகள் ராசியான வீடுகளாகிவிட்டன.
அதிலிருந்து யார் பிள்ளைப் பெறுவதாக இருந்தாலும் நெறி பிரியாய் வலிக்கையில் அந்த வீடுகளுக்குக் கையணைவாக பய்ய பய்ய நடத்திக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அது பகைவர்கள் வீடாயிருந்தாலும்கூட அவர்கள் இந்தப் பிள்ளைப் பேற்றுக்கு மட்டும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இதனால், எப்போதும் அந்த வீட்டருகில் சென்றால் கவிச்சிவாசம் காற்றோடு வந்து முகத்தில் போதும். பிள்ளையின் அழுகுரலும் அடிக்கடி நேரங்காலமில்லாமல் குலவைச் சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருக்கும்.
எவ்வளவோ விஞ்ஞானமும் நாகரிகமும் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்திலேயே ஆணாதிக்கம் ஓங்கி வளர்ந்து சிறுமிகளை வல்லுறவு செய்யவும் தன்னை விரும்பாத பெண்ணை நாலு பேர் முன்னிலையில் பட்டபகலில் வெட்டிச் சாய்க்கவுமாக இருக்கும் ஆண்கள், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்? நிசமாகவே பெண்களை ஒடுக்கித்தான் வைத்திருந்தார்கள்.
அடிமைப்படுத்தும் கயிறு
ஒருவனுக்கு மனைவியாக வந்தபின் அவனுக்கு மட்டும் சேவை செய்யாமல் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பெண்கள் சேவை செய்தார்கள். நாள் முழுக்க வீட்டு வேலை செய்து புருசன் சொன்னபடி கேட்டு வருசம் ஒரு பிள்ளை பெற்றெடுத்ததோடு அல்லாமல் காடுகளிலும் போய் வேலை செய்தார்கள். ஆனாலும், பெண்களுக்கு இதெல்லாம் கொடுமையாகத் தெரியவில்லை. தாங்கள் இப்படி ஆணாதிக்கத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். ஏனென்றால், அன்பு, பண்பு, மரியாதை, கடமை என ஏதோவொரு பாசக் கயிறு யார் கண்ணுக்கும் தெரியாமலே அவர்களைக் குடும்பத்துடன் ஒன்றுசேர்த்துக் கட்டிப்போட்டிருந்தது.
அமுதாவுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னவாறு கையோடு அணைத்தபடி அந்த ராசியான வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். அமுதாவுக்கோ நடக்கவே முடியாமல் கால் நடுங்கியது. தெருவில் விழுந்து, கத்திப் புரண்டு அழ வேண்டுமென்றிருந்தது. எப்போது இந்த வலியிலிருந்து தப்பிக்கப் போகிறோம், அப்படித் தப்பிக்க முடியாமல் இந்த ரண வேதனையிலேயே செத்துப் போவோமோ என்று நினைக்கையில் அவளுக்குப் பயமாகவும் இருந்தது.
“அய்யோ அம்மா, அய்யய்யோ அம்மா” என்று அழுதவளை அவளின் சின்னம்மா அதட்டினாள். “இந்தா அமுதா உனக்கும் சின்னப் புள்ளைக எல்லாம் அடுத்த வீட்டுக்குத் தெரியாம என்னப் போல உண்டான்னு புள்ளப் பெத்துத் தூக்கி வச்சிக்கிட்டு அலயுதுக. நீ என்னன்னா ஊரே கேளு நாடே கேளுன்னு இப்படி அவயம் போட்டுக்கிட்டு அலயுதே” என்று கொஞ்சம் அதட்டியவாறு அந்த ராசியான வீட்டுக்குள் கூட்டிப்போனார்.
பிறந்தது குழந்தை
கன்னிக்குடம் உடைந்ததும் விரல் விட்டுப் பார்த்த வைராத்தா, “புள்ள தல திரும்பி படிக்கட்டுல நிக்கி. இந்தா சத்தோடத்தில பொறந்திரும். அமுதா கெட்டிகாரில்ல. எங்க செத்த முக்கு” என்று செல்லவும் இதற்காகவே காத்திருந்தவள்போல் அமுதா தம்கட்டி முக்கினாள். முக்கியதாக நினைத்தாளே தவிர அவளால் ஒரு பெருமூச்சைக்கூட விட முடியவில்லை.
அவள் உடம்பே அவள் வசத்தில் இல்லை. உடல் முழுக்கப் புரண்ட வலியில் தான் தக்கையாய் மிதப்பதுபோல் தோன்றியது. ஆளாளுக்கு அவளைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் கொஞ்சம் முக்கு. இந்தா வந்திருச்சி புள்ள; அந்தா வந்திருச்சி புள்ள” என்று அவளைப் படுத்தியெடுக்க, அவளோ வலியில் பல்லைக் கடித்தாள். கண்களில் இருட்டு வந்து தழுவியது. சகலமும் ஒடுங்கிப்போக தான் ஒரு பிணமாகப் போயிவிட்டோமோ என்று எண்ணியவாறு கரிய இருட்டிலும் வலியிலுமாக அவள் நழுவிப் போகையில், வயிற்றிலிருந்த சுமை நழுவியதுபோல் சளக்கென்று கேட்க அமுதா மயங்கிப்போனாள்.
பேறுகாலம் பார்த்த வைரத்தாளுக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. கையிலிருந்த வெற்றிலையை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தவாறே, “நானு அப்பவே சொன்னேன்ல. இந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவோமின்னு. என் பேச்ச யாருமே கேட்கல. என் பேச்சுக் கேட்டு வெள்ளனத் திலேயே இங்க கூட்டிட்டு வந்திருந்தமின்னா அப்பவே அமுதா புள்ளயப் பெத்திருப்பா. இம்புட்டுத் தூரத்துக்கு வலியில அவ அவத்தப்பட்டுருக்க வேண்டாம்” என்று அங்கலாய்ப்பாகச் சொன்னபோது வீரமணிக்குக் கோபம் கடுகடுவென வந்தது.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago