பயணங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானவையா என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதிலைச் சொல்லும் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு. பொதுப் போக்குவரத்தோ தனியார் நிறுவனங்களின் போக்குவரத்து சேவையோ எதுவாக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு உணர்வுடனும் ஆசுவாசத்துடனும் பயணம் செய்ய முடிவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகளும் ரயிலில் மகளிர் மட்டும் பெட்டிகளும் பெண்களுக்கு ஓரளவு கைகொடுக்கின்றன.
பயணங்களில் தொந்தரவு இருக்கிறது என்பதற்காகப் பெண்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிக் கிடக்க முடியாது. படிக்கவோ வேலை நிமித்தமாகவோ அவர்கள் பயணப்பட வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகனப் பயணம், குடும்ப உறுப்பினருடனான பயணம் போன்றவை எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. இப்படியான சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்களின் தேவையை உணர்ந்து மகளிர் மட்டும் டாக்ஸி சேவைகளைச் சில நிறுவனங்கள் அறிமுகப் படுத்திவருகின்றன. கோவையில் ‘ரெட் டாக்ஸி’ நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் டாக்ஸி’ சேவையும் அப்படியொரு நோக்கம் கொண்டதுதான். பெண்கள் இயக்கும் இந்த டாக்ஸியில் ஆண்கள் பயணிக்க அனுமதி இல்லை. பெண்களும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணிவரை பயணிக்கலாம். இரண்டு மாத சோதனை ஓட்டத்துக்குப் பெண்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து ஜூன் 6 முதல் கோவையில் முழுமையாக இந்த சேவையை ‘ரெட் டாக்ஸி’ நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.
தற்போது ஏழு ‘பிங்க் டாக்ஸி’கள் கோவை மாநகரில் இயங்கிவருகின்றன. இதற்கென ஏழு பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்காகச் செயல்படுத்தப்படும் இந்த முயற்சிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாக ரெட் டாக்ஸி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். அதற்குக் காரணம் ஓட்டுநர்கள்.
பயணிகளின் மன நிறைவு
மூத்த ஓட்டுநரான சிவராணிக்கு 47 வயது. துடிப்புடன் பேசுகிறார். “நாங்க டாக்ஸிய ஓட்டிட்டுப் போறதப் பாத்துட்டுப் பலரும் ஆச்சரியப்படறாங்க. பயணம் பண்ற பொண்ணுங்க குடும்ப உறவுபோல எங்ககிட்ட பேசிக்கிட்டு வருவாங்க. சில நேரம் அவங்களோட பிரச்சினை களைக்கூட சொல்லிப் புலம்புவாங்க. எங்களோட செல்பி எடுத்துக்கறாங்க. பஸ்ல நெரிசல்ல ஆண்களோட பயணம் செய்யறதைவிட இப்படி என்னை மாதிரி பெண் டிரைவர் ஓட்டுற கால் டாக்ஸியில போறது அவங்களுக்குப் பிடிச்சிருக்கு” என்கிறார் சிவராணி.
சக டாக்ஸி ஓட்டுநர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் கேட்டதற்கு, “நெரிசல் அதிகமா இருக்குற இடத்துல எங்களைப் பார்க்குற டாக்ஸி டிரைவர்களும் ஆட்டோ டிரைவர்களும், ‘அக்கா நீங்க முதல்ல போங்க’ன்னு வழிவிடறாங்க. தெரியாத இடங்களுக்கு வழிகேட்கும்போது, ‘நீங்க எங்க தொழிலுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். எந்த உதவி வேணும்னாலும் கூப்பிடுங்க’ன்னு சொல்லி ரொம்ப ஆதரவா இருக்காங்க. சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலை செய்யற பெண்கள், ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து தனியா வர்ற பெண்கள், ‘நாங்க இப்போ எந்தச் சிரமமும் இல்லாம நிம்மதியா வீட்டுக்குப் போறோம்’னு எங்ககிட்ட சொல்லறது மனசுக்கு நிறைவா இருக்கு” என்றார் உற்சாகத்துடன்.
முன் இருக்கைச் சுதந்திரம்
தனது சொந்த மாருதி ஆம்னி வாகனத்தில் 2013 முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுவந்த துடியலூரைச் சேர்ந்த நித்ய புவனேஸ்வரி (37) கடந்த ஒரு மாதமாக ‘பிங்க் டாக்ஸி’யை இயக்கிவருகிறார். “ஆண்கள் ஓட்டுநரா இருக்குற டாக்ஸியில சில பொண்ணுங்க முன்பக்க இருக்கைல உட்காரத் தயங்குவாங்க. ஆனா, இப்போ எங்ககூட முன்பக்க இருக்கைல உட்கார்ந்து பெண்கள் மனம்விட்டுப் பேசிட்டு வர்றாங்க” என்கிறார் அவர்.
பாதுகாப்பு அம்சம்
‘பிங்க் டாக்ஸி’ பயணத்தின்போது எங்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க ‘பேனிக் பட்டன்’ வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அந்த பட்டனை அழுத்தியவுடன் டாக்ஸி நிறுவனத்தின் கால் சென்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். உடனே ஜிபிஎஸ் வசதியுடன் கார் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அருகிலுள்ள டாக்ஸி ஓட்டுநரையும் மெக்கானிக்கையும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘பிங்க் டாக்ஸி’ நிறுவனர்களில் ஒருவரான தீபக் கூறும்போது, “பெண் ஓட்டுநர்கள் தேவை என வாட்ஸ் அப், ஃபேஸ்புக், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தோம். ஆனால், டாக்ஸி ஓட்டுநராக வர பலருக்கும் முதலில் தயக்கம் இருந்தது. அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, பாதுகாப்பு அம்சங்களை விளக்கிய பிறகு விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டனர்.
பெண்களின் பாதுகாப்பு கருதியும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும்தான் பெண்களுக்கான இந்த டாக்ஸி சேவையைத் தொடங்கவிருக்கிறோம். பெண் ஓட்டுநர்களுக்கு எந்த நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அவர்கள் விருப்பப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் பணிபுரியலாம். எங்களின் சேவையைப் பயன்படுத்திய பல வாடிக்கையாளர்கள், ‘அதே ஓட்டுநரையே மீண்டும் அனுப்புங்கள்’ எனக் கேட்கும் அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றுவருகிறோம்” என்றார்.
சொந்த காலில் நிற்கணும்
டாக்ஸி ஓட்டுநராகப் பணியில் சேர பலரும் முதலில் தயக்கம் காட்டிய நிலையில் முதல் நபராகப் பணியில் சேர்ந்தவர் ரமாதேவி (30). இவர் கடந்த 12 ஆண்டுகளாகக் கனரக வாகனங்களை இயக்கிவருகிறார். “நான் ஓட்டாத வண்டியே இல்ல. பஸ்ல இருந்து ஜேசிபிவரை எல்லா வண்டியையும் ஓட்டி இருக்கேன். கடைசியா ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன். எனக்குக் கல்யாணமாகி ஒரு வருஷத்துல கணவர் தவறிட்டாரு. ஒரு பொண்ணு இருக்கா. அதனால, யார் தயவும் இல்லாம சொந்தக் கால்ல நிக்கணும்னு நெனச்சேன். முதல்ல நான் வண்டி ஓட்டுறதைப் பார்த்துட்டு சொந்தக்காரங்க எதிர்த்தாங்க. இதையெல்லாம் மீறித்தான் ஜெயிக்க முடிஞ்சுது. கணவர் இல்லைனா வாழ முடியாதுங்கறத என்னால ஏத்துக்கவே முடியாது. தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தா நிச்சயம் பெண்கள் சொந்தக் கால்ல நிக்க முடியும். யாராவது பெண் டிரைவர்கள்தான் வேணும்னு வேலைக்கு எடுக்கமாட்டாங்களானு பல வருஷம் நினைச்சிருக்கேன். ஆனால், இதுக்கு முன்னாடி வரைக்கும் அப்படி யாரும் எந்த முயற்சியும் எடுக்கல. இங்க ஆண்களுக்கு இணையா சம்பளமும் சலுகைகளையும் கொடுக்குறாங்க. இதுக்காக ‘பிங்க் டாக்ஸி’யைத் தொடங்குனவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார் ரமாதேவி. டாக்ஸியில் பயணம் செய்கிற பெண்களுக்கு மட்டுமல்ல; அதை ஓட்டுகிறவர்களுக்கும் நிம்மதி தருகிறது ‘பிங்க் டாக்ஸி’.
படங்கள்: ஜெ.மனோகரன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago