பக்கத்து வீடு: மரணப் பிடியிலிருந்து மீண்டவர்

By எஸ். சுஜாதா

“கடிதங்களைப் படித்து அழுது கொண்டிருந்தேன். ஆனால், இந்த அழுகையில் வருத்தமோ கவலையோ இல்லை. முன்பின் தெரியாதவர்கள்கூட எனக்காகப் பிரார்த்தனை செய்து, நலம்பெற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். இந்த அன்பைத் தாங்கும் சக்தி என் இதயத்துக்கு இல்லை. செவிலி என்பது என்னுடைய பணி. நான் என் வேலையைத்தான் செய்தேன்”

                                                                        - பாலின்.

2014-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி, வெகு வேகமாக உயிர்களைப் பறித்து, உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தேவைப்பட்டனர். செவிலியர் பணியில் 18 ஆண்டுகள் அனுபவம்கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பாலின் காஃபர்கியால் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

மனிதாபிமானத்தின் வெளிப்பாடு

சியாரா லியோன் நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டவர்களுடன் பணியாற்ற பாலின் முடிவுசெய்தார். குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  மனிதாபிமானம் குறைந்துவரும் காலகட்டத்தில் தன்னால் இந்தப் பணிக்குச் செல்லாமல் இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார் பாலின்.

ஏற்கெனவே சூடான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மோசமான சூழ்நிலையில் பணியாற்றியிருக்கும் பாலினின் முடிவை மாற்ற முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி, பாதுகாப்பை வலியுறுத்தி அனுப்பிவைத்தனர்.

சர்வதேச மருத்துவக் குழுக்களுடன் சேர்ந்து, மூன்று வாரங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் பாலின். திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட, உடனே இங்கிலாந்துக்குத் திரும்பினார். விமான நிலையத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடலில் வெப்பம் அதிகரித்தது. தனியாக வைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எபோலா வைரஸ் பாலினையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்தது.

எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பாலினிடம் சொன்ன மருத்துவர்கள், குடும்பத்தினரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களில் மரணத்தைத் தழுவிவிடுவோம் என்பதைப் புரிந்துகொண்ட பாலினுக்கு யாரிடமும் பேசுவதற்குத் தைரியமில்லை. மருத்துவர்களையே தகவல் தெரிவித்து விடும்படி கேட்டுக்கொண்டார்.

நோயின் தீவிரம்

தனியறையில் வைக்கப்பட்டு, சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது. மருத்துவர்கள் ஆறுதல் அளித்தாலும் நோயின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதும் ஏராளமான உயிர்கள் அவர் கண் முன்னே பறிபோனது பற்றியும் பாலினுக்குத் தெரிந்திருந்ததால், ஒவ்வொரு நொடியும் தாங்க முடியாத வேதனையுடன் கழிந்தது.

நிலைமை மோசமாக இருந்தது. லண்டன் ராயல் ஃப்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பாலின். இங்கிலாந்தில் எபோலா பாதிக்கப்பட்ட ஒரு பெண் என்ற செய்தி, மீடியாக்களுக்குத் தீனி போடுவதாக இருந்தது. கேமராக்களுடன் வாகனத்தைத் தொடரும் மனிதர்களை விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பாலின்.

மருத்துவமனை மாற்றம் இன்னும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது. முதலில் வாய் வீங்கி, பயங்கர வலியைக் கொடுத்தது. பிறகு உடலும் வீங்க ஆரம்பித்தது. உள் உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டதாக நினைத்தார் பாலின். மருத்துவர்களும் மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

எபோலாவுக்கான மருந்துகளுடன் பரிசோதனை மருந்துகளும் பாலினுக்குக் கொடுக்கப்பட்டன. ஏற்கெனவே எபோலா பாதிக்கப்பட்ட இங்கிலாந்து செவிலியர் ஒருவருக்கு ரத்த பிளாஸ்மாவை மாற்றியதுபோல் பாலினுக்கும் மாற்றினர்.

உயிர் பிழைத்த மகிழ்ச்சி

மூன்று வாரங்களுக்குப் பிறகு யாரும் நம்ப முடியாத அளவுக்கு அந்த அதிசயம் நிகழ்ந்தது. பாலினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது கூடாரத்துக்கு வெளியே ஒரு பெட்டி நிறைய கடிதங்கள் வைக்கப்பட்டிருந்தன.

“கடிதங்களைப் படித்து நான் அழுதுகொண்டிருந்தேன். ஆனால், இந்த அழுகையில் வருத்தமோ கவலையோ இல்லை. முன்பின் தெரியாதவர்கள்கூட எனக்காகப் பிரார்த்தனை செய்து, நலம் பெற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். இந்த அன்பைத் தாங்கும் சக்தி என் இதயத்துக்கு இல்லை.

செவிலி என்பது என்னுடைய பணி. நான் என் வேலையைத்தான் செய்தேன். அதில் துரதிர்ஷ்டவசமாக வைரஸால் பாதிக்கப்பட்டேன். ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களில் நானும் ஒருத்தி, அவ்வளவுதான்” என்றார் பாலின்.

மீண்டும் எபோலா

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, குணமாகி வீட்டுக்கும் பணிக்கும் திரும்பினார். ‘பிரைடு ஆஃப் பிரிட்டன்’ என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 2015 அக்டோபர் மாதம் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக் காய்ச்சலாக இருக்கும் என்றும் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்றும் நினைத்தனர்.

ராயல் ஃப்ரீ மருத்துவமனை. தனி கூடாரத்தில் வைக்கப்பட்டார் பாலின். முதன்முறையாக எபோலா தாக்கி, பத்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல். முன்பைவிட இன்னும் வீரியமாக இருந்தது. உடல்நிலை மோசமடைந்தது. மூளை வீக்கத்தைச் சரிசெய்வதற்குத் தலையில் துளை போடலாமா என்று மருத்துவர் கேட்டவுடன் பாலினால் தாங்க முடியவில்லை. சிகிச்சை ஆரம்பமானது.

மயக்கத்தில் இருந்த பாலின், சியாரா லியோன் நாட்டில் இருப்பதுபோல் எண்ணிக்கொண்டார். “ஐயோ, எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை முதலில் காப்பாற்றுங்கள். தயவுசெய்து எனக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் செய்வதை நிறுத்துங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று புலம்பினார்.

இரண்டாவது முறையாக

மரணத்தின் விளிம்புக்குச் சென்றார். மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து, சிகிச்சை அளித்தனர். முன்பு கொடுத்த மருந்துகளைச் செலுத்தினர். ஆனால், இந்த முறை மிக மெதுவாகவே முன்னேற்றம் ஏற்பட்டது. ஞாபக மறதியும்  முதுகுத்தண்டில் வலியும் ஏற்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, குணமாகி வீடு திரும்பினார்.

2016-ல் நோய்த் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, எபோலா வைரஸ் தொற்றிலிருந்து பாலின் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை கொடுத்தது.

ஆயிரத்தில் ஒருவர்

சியாரா லியோனுக்குச் சென்று எபோலாவில் இருந்து மீண்டவர்களுக்கும் நோயின் காரணமாக ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கும் நிதி திரட்டப் போவதாக, 2017-ல் அறிவித்தார் பாலின். தற்போது 43 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பிரசவித்திருக்கிறார். தாய்க்கும் குழந்தை களுக்கும் எபோலா பாதிப்பு இல்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

2014-ல் சுமார் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எபோலா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானார்கள். அவர்களில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிர் பிழைத்த பாலின், ஆயிரத்தில் ஒருவர்! தற்போதும் ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் எபோலா பாதிப்புக்கு இதுவரை சுமார் 600 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்