முகங்கள்: ஐசிசி - முதல் பெண் நடுவர்

By எல்.ரேணுகா தேவி

ஆண் குழந்தைகள் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் மைதானத்தில் தற்போது பெண் குழந்தைகளையும் பார்க்க முடிகிறது. சச்சின், தோனி போன்றோரின் படங்கள் இடம்பிடித்திருந்த  சுவர்களில் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற கிரிக்கெட் வீராங்கனைகளும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

விளையாட்டு மைதானங்களிலும் சுவர்களிலும் நிகழும் இதுபோன்ற மாற்றங்கள் கிரிக்கெட் போட்டியின் நடுவர்கள் தேர்வுவரை நீண்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக சர்வதேசப் போட்டிகளுக்கான போட்டி நடுவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜி.எஸ். லட்சுமியைத் தேர்வுசெய்துள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில்கூட ஆண்களே நடுவர்களாகவும் போட்டி நடுவர்களாகவும் செயல்பட்டுவந்தனர். இதுவரை உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டி களுக்கு மட்டும்தான் பெண் நடுவர்கள் நியமிக்கப் பட்டுவந்தனர். இந்நிலையில் சர்வதேசப் போட்டிகளில் முதன் முறையாகப் போட்டி நடுவராக ஜி.எஸ். லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளை வீரர்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா எனக் கண்காணிப்பதுதான் போட்டி நடுவர்களின் முக்கியப் பணி. குறிப்பாக, வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது போட்டி நடுவர்களின் பணிகளில் ஒன்று. அதேபோல்  விளையாட்டின்போது வீரர்கள் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளை மீறாமல் விளையாடுவது உள்ளிட்ட விதிகளைக் கண்காணிப்பதும் போட்டி நடுவர்களின் முக்கியப் பணிகள்.

மாற்றத்தை ஏற்படுத்திய முதல் பந்து

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையாக இருந்தவர். இந்திய அளவில் நடைபெறும் மகளிருக்கான உள்ளூர் போட்டிகளுக்குப் போட்டி நடுவராகக் கடந்த பத்து ஆண்டு களாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது 51 வயதாகும் லட்சுமி, மூன்று மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கும் மூன்று டி-20 மகளிர் போட்டிகளுக்கும் போட்டி நடுவராகச் செயல்பட்டுள்ளார்.

விளையாட்டுப் பின்புலம் இல்லாத குடும்பத்தி லிருந்து வந்தவர் லட்சுமி. ஜாம்ஷெட்பூர் மகளிர் கல்லூரியில் படித்தபோதுதான் லட்சுமிக்கு கிரிக்கெட் அறிமுகமானது. “பள்ளியில்கூட எந்த விளையாட்டையும் விளையாடியதில்லை. பள்ளித் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் ஏதோவொரு படிப்பில் சேர்ந்தால் போதும் என்றுதான் விளையாட்டுப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது கல்லூரியில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த ஆசிரியர் என்னை கிரிக்கெட் விளையாடச் சொன்னார்.

எனக்காக வீசப்பட்ட முதல் பந்தை மைதானத்துக்கு வெளியே அடித்தேன். அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். பந்தை லாகவமாக அடிப்பதற்கு என்னுடைய உயரம் துணையாக இருந்தது. இப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டு எனக்கு அறிமுகமானது. கல்லூரிக் காலத்தில் பல போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன்” என்கிறார் லட்சுமி.

mugangal-2jpg

கிரிக்கெட்டுக்குத்தான் முதல் இடம்

கல்லூரிக் காலத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக வலம்வந்தார் லட்சுமி. கல்லூரி முடித்த பிறகு அவருக்குத் தெற்கு மத்திய ரயில்வேயில் வேலை கிடைத்தது. அங்கும் ரயில்வே துறைக்கான கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். 1989 முதல் 2004 வரை இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு உள்ளூர் போட்டிகளிலும் ரயில்வே அணியின ருக்கான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

1995-ல் நடைபெற்ற ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டிகளின்போது தெற்கு மத்திய ரயில்வே அணியில் இடம்பெற்றிருந்தார் லட்சுமி. “பலமுறை வெற்றிபெற்ற மேற்கு ரயில்வே அணியினரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டோம். எங்கள் அணியின் சிறப்பான ஆட்டத்தால் கோப்பையை வென்றோம். அப்போதெல்லாம் வீராங்கனைகளுக்குத் தனிக் கழிவறை, ஓய்வறை போன்றவை கிடையாது. 11 பேரும் ஒரே அறையைத்தான் பகிர்ந்துகொள்வோம்.

அடிப்படை வசதிகளில் பல பிரச்சினைகள் இருந்தாலும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் மட்டும்தான் எங்களை உற்சாகமாக வைத்திருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் கடுமையான பயிற்சிகளையும் சூழ்நிலைகளையும் கடந்து பெற்ற முதல் ரயில்வே கோப்பையை என் வாழ்நாளில் மறக்க முடியாது” எனப் பழைய நினைவுகளின் பசுமையைப் பகிர்ந்துகொண்டார் அவர்.

திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான விளை யாட்டு வீராங்கனைகள் களத்திலிருந்து காணாமல் போய்விடுகிறார்கள்.  அதனாலேயே திருமணத்தால் தன்னுடைய விளையாட்டு தடைப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டவர் லட்சுமி. “என்னைப் பெண் பார்க்க வரும்போதே என் நிபந்தனையைச் சொல்லிவிட்டேன்.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டவர் கணவராகக் கிடைத்ததால் தான் திருமணத்துக்குப் பிறகும் என்னால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிந்தது. அப்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்தேன். இதுபோன்ற நேரத்தில் என்னுடைய அம்மாதான் எனக்குத் துணையாக இருந்தார். குழந்தைகளை அவர் பார்த்துக் கொண்டதால் என்னால் விளை யாட்டில் கவனம் செலுத்த முடிந்தது” என்கிறார் லட்சுமி.

உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொறுப்பு

கிரிக்கெட்டில் இருந்து 2004-ல் ஓய்வுபெற்றார் ஜி.எஸ். லட்சுமி. அதன் பிறகு தெற்கு மத்திய ரயில்வே அணியின் பயிற்சியாளராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2008- 09 ஆண்டுக்கான உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்காக அறிவித்த ஐந்து பெண் போட்டி நடுவர்களில் ஜி.எஸ். லட்சுமியும் ஒருவர். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 போட்டிகளில் போட்டி நடுவராகவும் லட்சுமி செயல்பட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான உள்ளூர் போட்டிகள், பரிசுகள் எனப் பல அனுபவங்களைக் கொண்ட லட்சுமிக்குச் சர்வதேசப் போட்டிகளில் இடம்பெற்ற முதல் பெண் போட்டி நடுவர் என்ற பட்டம் மகுடமாக அமைந்துள்ளது. “சர்வதேச கிரிக்கெட் வாரியம் என்னைப் போட்டி நடுவராகத் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி. விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் இதுபோன்ற பணிகள் எங்களைப் போன்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன.

கிரிக்கெட் துறை இதுபோன்ற எண்ணற்ற பிரிவுகளில் பெண்களின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இளமை இருக்கும்வரைதான் போட்டிகளில் விளையாட முடியும். ஆனால், அதன்பிறகு நம்முடைய துறையிலிருந்து ஓய்வுபெற்று வீட்டில் முடங்கியிருப்பது விளையாட்டு வீரரை மனதளவில் முடக்கிவிடும். இனிவரும் காலத்தில் களத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையில் முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளிலும் அனுபவம் பெற்ற வீரங்கனைகளின் பங்கு அவசியம். இதுபோன்ற மாற்றங்கள்தாம் வீராங்கனைகளுக்குத் தேவை” என்கிறார்  லட்சுமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்