அன்றொரு நாள் இதே நிலவில் 09: பிரசவ வலியை வாங்கிக்கொள்ளும் கயிறு

By பாரததேவி

அமுதா களைத்துப்போயிருந்தாள். நிறைமாத கர்ப்பிணியான அவள் சோர்வும் தாய்மையின் பொலிவுமாக அழகாயிருந்தாள். இன்றைய தினம் விடிந்ததிலிருந்தே இடுப்பு வலிக்கிறது. முகம் சிணுங்கிச் சிணுங்கி முனங்கிக்கொண்டிருந்தாள்.

பேறுகாலம் பார்க்கும் வைரத்தாவிலிருந்து பிள்ளைகள் பல பெற்றதோடு பிள்ளைப்பேறு பார்த்த அனுபவசாலிகளான 70 வயதுக்கு மேலான பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று நாலைந்து பெரிய மனுசிகள் அவளைச் சுற்றிலும் கூடியிருந்தார்கள். எல்லோருடைய கையிலும் வெற்றிலைப் பாக்கு இருக்க, அவர்கள் மடியில் போயிலைப் பட்டை ஒளிந்திருந்தது.

பிள்ளை வலியா, கள்ள வலியா?

அமுதாவின் பாட்டியான கருக்காணி, “ஏத்தா எல்லாரும் எதுக்குச் சும்மா அவளச் சுத்தி உக்காந்து கிடக்கீக. முதல்ல அமுதாவுக்கு வலிக்கது புள்ள வலியா இல்ல கள்ள வலியான்னு பாருங்க. ஏன்னா அமுதா தலப்புள்ளக்காரி. அவளுக்கு இதுக்கு முன்ன புள்ள பெத்து அனுபவம் இல்லையாங்காட்டி அவ வெறுமே வலிக்க வலிக்கெல்லாம் முக்கிக்கிட்டும் முனங்கிக்கிட்டுந்தேன் இருப்பா அவ முனங்கிறதப் பாத்து நம்ம அவளச் சுத்தி இப்படி உக்காந்து இருந்தமின்னா நம் வேலயும் வெட்டியுந்தேன் பிஞ்சயிலயும் நஞ்சயிலயும் கெடந்துபோகும்” என்று சொல்ல, “கருக்காணி சொல்லதும் நெசந்தேன்.

இருங்க நானு போயி மொளவ (மிளகு) முனுங்கிக்கிட்டு வாரேன்” என்று மாரிமுத்து எழுந்து போக, “நானு சிறுகீரயப் புடுங்கிக்கிட்டு வாரேன்” என்று மாரிமுத்து கூடவே எழுந்துபோனாள் ஆண்டாளு.

மிளகைப் பட்டாக அம்மியில் வைத்து முனுக்கி உள்ளங்கையில் வைத்து அதில் கொஞ்சம் விளக்கெண்ணெய்யை விட்டு நக்கிச் சாப்பிட்டால் வலி நின்றுபோகும். ஏனென்றால், சூட்டு வலி என்றாலும் அப்படித்தான் வலிக்கும். அதேபோல் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சிறுகீரையைப் பிடுங்கி வந்து கொஞ்சம் சீரகத்தைக் கசக்கிப் போட்டுக் கசிய வேகவைத்து ஒரு டம்ளர் இறுத்து அதைக் குடிக்கவைத்தால் சட்டென்று வலி நின்றுபோகும். அதுவே பிள்ளைவலியாக இருந்தால் தொடர்ந்து வலியெடுத்துக்கொண்டுதான் இருக்கும். அந்தக் காலத்தில் இப்படி வைத்தியம் செய்துதான் பிள்ளைப்பேறு வலியைக் கண்டுபிடிப்பார்கள்.

பிரசவ நேரத்து சத்தியம்

அமுதா நிலைகொள்ளாமல் தவித்தாள்.

இப்படி வலியும் சுமையுமாக அவளைப் படுத்தி எடுக்கும் வயிற்றைச் சட்டென்று பிடுங்கி எறிந்துவிட்டு எங்கேயாவது காலாற ஓடிப்போக வேண்டும் போலிருந்தது.

காலையிலிருந்தே அவளுக்குள் புயலைச் சுருட்டியதுபோல் அடிவயிற்றைச் சற்றைக் கொருதரம் வலி தாக்கிக்கொண்டிருந்தது. இந்த வலியால் அவள் வாழ்க்கையே வேண்டாமென்று வெறுத்துப் போயிருந்தாள். அதோடு, இனி புருசனோடு பேசவே கூடாதென்றும் பிள்ளையும் பெறக் கூடாதென்றும் மனத்துக்குள்ளாகவே சத்தியமும் செய்துகொண்டாள்.

அதிலும், உள்ளங்கையில் ஊற்றிய விளக்கெண் ணெய்யையும் அதில் கிடந்த மிளகையும் நக்க பட்டபாடு… தொண்டையை ஓங்கரித்த அவள், அதை நக்கிச் சாப்பிட முடியாமல் திண்டாடியபோது இந்தப் பெருசுகள் எல்லாம் சேர்ந்து கொஞ்சலும் அதட்டலுமாக அவளைப் பிடுங்கியெடுத்துவிட்டார்கள். சிறுகீரைத் தண்ணி வந்தது. அதையும் குடித்து முடித்தாள்.

ஆனாலும், வலி தொடர்ந்து அவளைச் சூறாவளிக் காற்றாகத் தாக்கிக்கொண்டிருந்தது. அவள் வலி பொறுக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே நாலு திக்கத்துக்கும் அலைமோதிக்கொண்டு வந்தாள்.

விளக்கெண்ணெய்யால் விளைந்த நன்மை

வைராத்தா, “இது புள்ள வலிதேன். சூட்டு வலின்னா இப்ப மிளக நக்குனதுக்கு வலி கப்புன்னுல்ல நின்னுருக்கணும்” என்றவள் அமுதா இடுப்பில் சுற்றியிருந்த சேலையைக் கொஞ்சமாய் இறக்கி அடி வயிற்றைக் காட்டச் சொன்னாள். அமுதாவுக்குக் கூச்சமாக இருந்தது. இத்தனை பேர் முன்னால் வயிற்றைக் காட்டுவதாவது.

“என்ன தாயீ  சீலய எறக்கச் சொன்னல்ல?” என்று வைராத்தா சீறினாள்.

“போ பாட்டி. இத்தனை பேரும் உக்காந்திருப்பீகளாக்கும். நானு பப்பரக் கான்னு வயித்தக் காட்டு வேணாக்கும்” என்று எரிந்துவிழுந்தாள். “பொண்ணா பொறந்த அன்னைக்கே அவ தொறந்த பொளப்புதேன். இதுல என்ன உனக்கு வெக்கமும் கூச்சமும் வேண்டிக் கெடக்கு” என்று சொல்லிக்கொண்டே பேத்தியின் சேலையை கருக்காணி ஒதுக்கவர, அமுதா அந்த வலியிலும் ஓரெட்டுத் துள்ளி விலகினாள்.

இங்க இருக்க யாரும் என்னத் தொட வேண்டாமென்று சொல்லிவிட்டு இடுப்புச் சேலையைக் கொஞ்சமாய் நகட்டினாள். அவள் நகட்டலுக்கு மலர்ந்திருந்த கொப்புழ் கூடத் தெரியவில்லை. “என்னத்தா நானு உன் அடி வயித்தப் பாக்கணுமிங்கேன். நீ சீலய ஒதுக்கவே மாட்டேங்கே” என்று கருக்காணி விருட்டென்று எழுந்து போய் அமுதாவின் இடுப்புச் சேலையை இறக்கிவிட்டாள்.

வெட்கத்திலும் கூச்சத்திலும் வெலவெலத்துப்போன அமுதா அப்படியே தன்னைக் குறுக்கிக்கொண்டாள். அவளின் நரம்புகளிலெல்லாம் கூச்சம் பிடுங்கியெடுத்தது. வைராத்தா போய் அமுதாவின் அடிவயிற்றை மொத்தமாகத் தடவிப் பார்த்தாள். ஏழு மாதத்திலிருந்து ஒரு கை விளக்கெண்ணெயைத் தடவி கொஞ்சம் சூடான வெந்நி விட்டுக் குளித்ததில் அவள் வயிறு இளக்கம் கண்டு வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை மிக லேசாக வெளிவருவதற்கு வாய்ப்பாக இருந்தது.

“தாயீ அமுதா… உனக்குக் கன்னிக்குடம் உடையதுதேன் தாமசம். பொக்குன்னு புள்ளயப் பெத்துருவே. வலி வாரையில அந்தாக்கட்டி தொங்க விட்டிருக்கும் கவுத்தப்புடிச்சித் தொங்கு. உன் வலிய கவுறு ஏத்துக்கிடும்” என்று வைராத்தா சொல்ல அமுதாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. (பிள்ளைப்பேறு நடக்கும் வீட்டில் நடுவீட்டில் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்).

ஆளைக் கொல்லும் வலி

“என்ன இது? நம்ம வலிய கவுறு ஏத்துக்கிடுமா?” என யோசித்த அவள், வயிற்றுக்குள் தீச்சொருகலாய்ச் சொருகிய வலியோடு விட்டத்திலிருந்த கயிற்றைப் போய்ப் பிடித்தாள். கயிற்றைப் பிடித்ததில் கூடத்தான் வலி எடுத்ததே தவிர, இன்று விடியக் காலையிலிருந்து அவளைப் பாய்ந்து பாய்ந்து அறைந்துகொண்டிருந்த வலி விடவே இல்லை.

அமுதாவுக்குத் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்க்கையில் எல்லோரும் எமகாதகர்களாய்த் தெரிந்தார்கள். இந்தச் சனியன்கள் எல்லாம் நம்மைவிட்டுப் போனால்  போதும். இந்தக் கயிற்றிலேயே கழுத்தைக் கொடுத்துச் செத்துப்போகலாம் போலிருந்தது. இல்லாவிட்டால் இரண்டு மாசத்துக்கு முன்னால் பிள்ளை வலி தாங்காமல் அவளின் பக்கத்திலிருந்தவர்களையெல்லாம் ஆவேசமாக இருகைகளாலும் தள்ளிவிட்டுக் கிணற்றில் போய் விழுந்து தற்கொலை பண்ணிக்கொண்டாளே தவசி அவளைப் போல் ஓடிப் போய் கிணற்றில் விழுந்து செத்துப் போகலாமா என்று அவளுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருந்தாள். ஏனென்றால், அவளின் வயிற்றுக்குள் ஆரம்பத்திலிருந்த வலி நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக்கொண்டே போனது.

கயிற்றைப் பிடித்துப் பார்த்தாள். வீடு முழுவதும் உருண்டு அம்மா, அப்பா என்று வாய்விட்டுக் கதறினாள். அவளுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை வேர்த்துக் கொட்டியது. தண்ணி தாகம் நாக்கைச் சுருட்டியது. ஆனால், தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. பசி சிறுகுடலையே பிசைந்தது. அதைவிட வலி அவளுடைய மொத்த உடலையும் பிசைந்தெடுத்தது. உடல் முழுவதும் நடுங்கியது. வலி தன் கோரமுகத்தைக் காட்டி அவளைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து எடுத்தது. இந்த வலியைத் தாங்குவதைவிட அவளுக்கு இப்போதே செத்துப்போக வேண்டும் போலிருந்தது.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்