ஐரோப்பியக் கண்டத்தின் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு. ஆனால், அதே கண்டத்தில் பிரான்ஸில் மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெற்றுவருவது எத்தனை பேருக்குத் தெரியும்? எட்டாம் முறையாக நடைபெறும் மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி இது. மகளிர் உலகக் கோப்பைத் தொடங்கியதன் பின்னணியில் அழுத்தமான வரலாறு உண்டு.
ஆண்கள் பங்கேற்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் வயது 90. ஆனால், மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்கி 28 ஆண்டுகளே ஆகின்றன.
பாகுபாட்டால் விளைந்த தாமதம்
இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் இந்த வித்தியாசத்துக்குக் காரணம் வழக்கமான பாகுபாடுகள்தாம்.
1970-க்கு முன்புவரை பல நாட்டு அணிகள் பங்கேற்கும் மகளிர் கால்பந்துத் தொடரை நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே போயின. மகளிருக்காக ஒரு சர்வதேசத் தொடரை நடத்த அப்போது கஷ்டப்பட வேண்டியிருந்தது. அப்படியே போட்டிகள் நடத்தப்பட்டாலும் அவை அதிகாரபூர்வமற்ற போட்டிகளாகவே இருந்தன.
ஏனென்றால், 1970-க்கு முன்புவரை பெண்கள் கால்பந்து விளையாட பல நாடுகள் தடை விதித்திருந்தன. 70-களின் தொடக்கத்தில்தான் தடைகளை விலக்கிக் கொள்ளப் பல நாடுகளும் முன்வந்தன. விளைவு, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல நாட்டு மகளிர் அணிகள் உருவாயின.
1975-ல்தான் முதன்முதலாக மகளிர் அணிகள் பங்கேற்ற சர்வதேசத் தொடர் நடைபெற்றது. ஆசியாவில்தான் அந்தத் தொடர் நடைபெற்றது. இதன்பிறகு ஐரோப்பாவில் மகளிர் கால்பந்துத் தொடர்கள் துளிர்விட்டன. இதன் தொடர்ச்சியாகக் கால்பந்து விளையாட வரும் அணிகளும் அதிகரித்தன; வீராங்கனைகளும் அதிகரித்தனர்.
ஒரு பெண்ணின் குரல்
மகளிருக்கென உலகக் கோப்பைத் தொடர் நடத்த வேண்டும் என முன்னுரை எழுதியவர் ஒரு பெண்தான். நார்வேயைச் சேர்ந்த எலன் வில்லே என்பவர் அதற்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்தார். 1986-ல் ஃபிபா (சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு) கூட்டம் நடந்தபோது, பெண்கள் விளையாட முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மகளிர் உலகக் கோப்பை நடத்தப்பட வேண்டும் என்று அவர் குரல் எழுப்பினார்.
இதை அரை மனத்துடன் ஏற்றுக்கொண்ட ஃபிபா, 1988-ல் சீனாவில் ஃபிபா மகளிர் அழைப்புத் தொடரை நடத்தியது. 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்தே அதிகாரப்பூர்வமாக மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த ஃபிபா அனுமதி வழங்கியது.
முதல் மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி 1991-ல் சீனாவில் நடைபெற்றது. அமெரிக்க அணி முதல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதுவரை ஏழு உலகக் கோப்பைத் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. அமெரிக்கா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை ருசித்துள்ளது. ஜெர்மனி இரண்டு முறை வெற்றியை வசப்படுத்தியுள்ளது. நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் தலா ஒரு முறை சாம்பியன் ஆகியிருக்கின்றன.
எட்டாவது உலகக் கோப்பை
தற்போது எட்டாம் மகளிர் உலகக் கோப்பைப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. பிரான்ஸ் நடத்தும் முதல் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இது. ஜூன் 7 அன்று தொடங்கி ஜூலை 7வரை தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸில் உள்ள ஒன்பது நகரங்களில் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. கோப்பையைக் கைப்பற்ற 24 அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
ஆசிய - பசிபிக்கிலிருந்து ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய அணிகளும் ஆப்பிரிக்காவிலிருந்து கேமரூன், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும் வட அமெரிக்காவிலிருந்து கனடா, ஜமைக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் தென் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா, பிரேசில், சிலி ஆகிய அணிகளும் ஒசியானா நாடுகளிலிருந்து நியூசிலாந்து அணியும் இத்தொடரில் பங்கேற்றுள்ளன.
24 அணிகளும் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் உள்ளன. சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் பங்கேற்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என 12 அணிகள் ‘ரவுண்ட் 16’ என்ற சுற்றுக்குத் தகுதி பெறும்.
இதேபோல ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகளில் அதிகப் புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் ‘ரவுண்ட் 16’ என்ற சுற்றுக்குத் தகுதி பெறும். நாக் அவுட் போட்டியாக நடைபெறும் இந்தச் சுற்றிலிருந்து எட்டு அணிகள் காலிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். பிறகு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
கோப்பையை வெல்ல ஒவ்வொரு நாட்டு வீராங்கனைகளும் சீறிப் பாய்ந்து கால்பந்தை உதைத்துவருகிறார்கள். அடுத்த சாம்பியன் யார் என்பது ஜூலை 7 அன்று தெரிந்துவிடும்.
உலகக் கோப்பைத் துளிகள்
#இத்தொடரில் முதன்முறையாக ‘வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரரி’ (விஏஆர்) முறையை ஃபிபா அறிமுகம் செய்துள்ளது. கிரிக்கெட்டில் ‘டிஆர்எஸ்’ முறையைப் போல கால்பந்தில் ‘விஏஆர்’ முறை. கள நடுவர்கள் வீடியோ காட்சிகளைப் பார்த்து தலைமை நடுவருடன் இணைந்து முடிவுகளை அறிவிக்கும் முறை இது.
# உலகக் கோப்பையைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் ஜூன் 7 அன்று வண்ணமயமான கால்பந்து டூடுலை வெளியிட்டது.
# இந்த உலகக் கோப்பையின் சின்னம் ‘மஸ்காட் எட்டி’ என்ற கோழிக்குஞ்சு. 1998-ல் பிரான்ஸில் ஆண்கள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அப்போது ‘மஸ்காட் ஃபுட்டீஸ்’ என்ற பெயரில் கோழி சின்னமாக இருந்தது. தற்போதைய உலகக் கோப்பையில் இதன் மகளாக ‘மஸ்காட் எட்டி’ நினைவுகூரப்பட்டுள்ளது.
# 2015-ல் கனடாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி, அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி டிக்கெட்டுகள் இரண்டு நாட்களில் விற்றுத் தீர்ந்தன. அப்போது 76.4 கோடிப் பேர் தொலைக்காட்சி மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளைக் கண்டுகளித்தனர். இணையதளம், மொபைல் மூலம் 8.6 கோடிப் பேர் பார்த்தார்கள்.
# இந்த உலகக் கோப்பையில் சிலி, ஜமைக்கா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளும் அறிமுகமாகி உள்ளன.
# 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2020-ல் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago