வைராத்தா எதுவுமே சொல்லவில்லை. ஆளோடு ஆளாகக் கும்மியடித்துவிட்டு இப்போது பேச்சை மாத்திப் பேசுகிறாள். எல்லாம் எண்ணெய்க் கருப்பட்டியோடு நெல்லுச் சோறும் ஒரு புதுச் சீலையும் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் தன்னைத் தானே உசத்திக்கொண்டு பேசுகிறாள் என்று வைராத்தாளை மனசுக்குள்ளேயே கடுகடுத்தாள் வீரமணி.
அந்தக் காலத்தில் பிள்ளைப்பேறு பார்க்கிறவர்களுக்கு நல்ல மதிப்பு, மரியாதை இருந்தது. ஏனென்றால், சில பெண்களுக்குக் குழந்தை வயிற்றுக்குள்ளேயே கொடி சுற்றிக்கொள்ளும். பிள்ளைகள் வயிற்றுக்குள் சுத்தி வரும்போது தலைதான் முன்னால் வர வேண்டும்.
அப்போதுதான் பிரசவம் லேசாய் இருக்கும். ஆனால், சில பெண்களுக்குக் குழந்தையின் தலை திரும்பாது. கால்கள் வந்து முன்னால் நிற்கும். இது கொஞ்சம் சிக்கலான பிரசவமாகிவிடும். அப்போது குழந்தைப் பிறக்கும் வழியில் கையாடித்தான் எடுக்க வேண்டும். இதில் கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் தாய் இறந்துவிடும் அபாயம் உண்டு.
ஆபத்தான அரை குறை அறிவு
சிலர் பேறுகாலம் பார்க்கிறேன் என்று அரையும் குறையுமாகப் பார்த்துத் தாயையும் பிள்ளையையும் கொன்றுவிடுவார்கள். அப்போது மருத்துவமனைகள் இல்லை. அப்படியே போவதென்றாலும் வண்டி கட்டி மூணு மைல் தொலைவுக்குப் போகவேண்டும். குண்டும் குழியுமான மண்சாலைதான்.
அந்த மண்சாலையில் வயிற்றுப் பிள்ளைக்காரியை எப்படிக் கொண்டுபோவது? அதனால், வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்கள். பேறுகாலம் பார்க்கிறவர்கள் ரொம்ப திறமைசாலிகளாக இருந்தார்கள்.
கர்ப்பிணிகள் உட்காரும் விதத்தையும் அவர்கள் வயிற்றுச் சரிவையும் கண்டு வயிற்றுக்குள் என்ன பிள்ளை இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் ஒன்றிரண்டு இறப்புகளைத் தவிர்க்க முடியாது.
சில நேரம் பிறப்பதற்கு நேரமானால் அந்தக் குழந்தைகள் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் நீரைக் குடித்து விடுவதுண்டு. இதனால் பிறந்தவுடன் மூச்சுத் திணறலுடன் இருப்பது போதாதென்று நாலஞ்சி வருசத்துக்கு அந்த மூச்சுத் திணறல் இருக்கும்.
இதை அறியாதவர்கள், “என்ன இந்தப் பிள்ளைக்கு இப்படி மூச்சுத் திணறல் இருக்கு?” என்று கேட்டால், “அவன் ‘அய்ய’ (கெட்ட நீர்) நீரைக் குடிச்சிட்டான்” என்று சொல்வார்கள். இந்த மூச்சுத் திணறல் நாலு வருசத்துக்குப் பிறகு சரியாகிவிடும். ஒவ்வொரு பெண்ணும் வருசத்துக்கு ஒன்றாகப் பத்துப் பிள்ளைகள்வரை பெறுவதால் பிள்ளை இறந்ததற்காக இரண்டு நாள் அழுதுவிட்டுப் பிறகு தங்களின் வேலைகளில் ஆழ்ந்துவிடுவார்கள். எப்போதும் துக்கங்கள் நிலைத்து நிற்பதில்லை.
விளக்கெண்ணெய் மகிமை
பிள்ளை பிறந்ததும் குலவை போட்டு, கொடி அறுத்துத் தாயையும் தாயின் பக்கத்தில் பிள்ளையையும் படுக்கவைப்பார்கள். கூளத்தைத் தரையில் பரப்பி அதன் மீது வண்ணார்கள் வெள்ளாவியில் அவித்து நன்றாகத் துவைத்த வேட்டியையோ சேலையையோ விரித்துப் படுக்கவைப் பார்கள். பிறகு ஊருக்குள் கெட்டிக்காரனாக இருப்பவன், நாலு பேருக்கு நல்லது செய்பவனைக் கூப்பிட்டு கருப்பட்டிப் பால் கலந்த சேனையைத் தொட்டு
வைக்கச் சொல்வார்கள். அதேபோல் பெண்களில் சமர்த்தாகக் காட்டு வேலை செய்பவள் மாமன், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோருடன் ஒற்றுமையாக இருந்து குடும்பம் நடத்துகிறவளைச் சேனைத் தொட்டு வைக்கச்சொல்வார்கள்.
அப்போது எல்லோருடைய வீட்டிலுமே செக்கிலிட்டு ஆட்டிய எண்ணெய் இருக்கும். முக்கால்வாசி நல்லெண்ணெய்க்கும் விளக்கெண்ணெய்க்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடலை எண்ணெய்க்கும், தேங்காய் எண்ணெய்க்கும் முக்கியத்துவம் கிடையாது.
ஆண்களும் பெண்களும் காடுகளில் நாள் முழுக்க வேலை செய்வதாலும், சிறுபிள்ளைகள் தெருவிலும் மந்தையிலும் புழுதியிலும் விளையாடிக் கொண்டு இருப்பதாலும் எல்லோரும் விளக்கெண்ணெய்தான் தேய்ப்பார்கள். அது சூட்டைக் குறைத்து உடம்பைக் குளிர்ச்சிப்படுத்தும்; கண்களுக்கும் நல்லது.
கோயில் குளங்களுக்குப் போகும்போது, கல்யாணம், பொங்கல், பூசை என்றால் மட்டுமே தலைக்குத் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக்கொள்வார்கள். இந்த எல்லா எண்ணெய்களையும் விட நல்லெண்ணெய்க்கு இருக்கும் பவுசு சொல்ல முடியாது. யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்துவிட்டால் நல்லெண்ணெய்யைக் கைநிறைய ஊற்றித்தான் அவர்களுக்குச் சோறு போட வேண்டும்.
அதுவும் நெல்லுச் சோறு. கூடவே கருப்பட்டியையும் தட்டிப்போட வேண்டும். ரொம்ப வேண்டிய சம்பந்தக்காரர்கள், சம்பந்தக்காரர் வழியில் வரும் விருந்தாளியென்றால் கோழி அடித்துச் சோறு போட வேண்டும். அப்படிப் போடத் தவறிவிட்டால் அவ்வளவுதான். சொந்தம் என்றுகூடப் பார்க்காமல் ‘ஊரே கேளு, நாடே கேளு’ என்று ஊரெங்கும் ஆத்தி தூத்தி அம்பலத்தில் கடையேத்திவிடுவார்கள்.
கணவனைத் தேடும் கண்கள்
அதிலேயும் பிள்ளைப் பெற்ற வளுக்கு இந்தக் கோழிக்கறியும் நல்லெண்ணெய்யும் தாம் உடம்பின் பலத்தைக் கூட்டும். பிள்ளைப் பெற்ற அன்றே சூடாகப் பசும்பால் காய்ச்சிக் கொடுத்து வீட்டுக்கு மெல்ல நடத்திக் கூட்டி வந்துவிடுவார்கள்.
அப்போதெல்லாம் நாட்டுப் பசுதான் இருந்தது. மற்ற கலப்பினங்கள் கிடையாது. நோயாளிகளுக்கும் இந்தப் பசும்பாலில் பனங்கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிக் கொடுத்துவிட்டால் போதும்; ஒருவேளை பசி தாங்கும்.
வீட்டுக்கு வந்ததும் ஆசுவாசமாகப் பிள்ளையோடு படுத்த அமுதாவுக்குத் தன் பக்கத்தில் தன் கணவனின் முகச்சாயலோடு இளங்கன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் மகனைப் பார்க்கையில் ஆசையும் அன்பும் பெருக்கெடுத்து ஓடியது. சற்றுமுன் வேதனையில் துடித்ததும் செத்துப்போக வேண்டுமென்று நினைத்ததையும் எண்ணிப் பார்க்கையில் அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. அப்படி நான் செத்திருந்தால் இப்படியொரு அழகான பிள்ளையைப் பாத்திருக்க முடியுமா என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
சேனை தொட்டு வைத்த பிள்ளையைச் சற்று நேரத்தில் இவள் மடி மீது வைத்துப் பால் குடிக்க வைத்தார்கள். அவளுக்கு அத்தனை பேர் முன்பும் பால் கொடுக்கக் கூச்சமாயிருந்தது. தன் பாட்டியை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் போகச் சொல்லிவிட்டுப் பால் கொடுத்தாள்.
முதன்முதலாகப் பால் கொடுக்கையில் உடம்பு புல்லரித்துச் சுகம் கண்டது. ஏனோ அப்போதே காட்டில் கமலை இறைத்துக்கொண்டிருந்த கணவனைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அதை நினைத்து அவளுக்கே வெட்கமாகவும் இருந்தது.
ஆனால், அவள் பாட்டி கெட்டிக்காரி இவளது மனத்தை அறிந்தவள்போல், “என்ன தாயீ உன் புருசனப் பாக்கணும் போல இருக்கா?” என்று கேட்கவும் வெட்கிச் சிவந்தாள். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடனைப் போல் விழித்தாள். “எனக்குத் தெரியும் தாயீ. புள்ளயப் பெத்த மனசு முதல்ல புருசனத் தேடும். உன் புருசனுக்குத் தாக்கல் சொல்லி விட்டுருக்கு. இப்ப சத்தோடத்தில வந்துருவான்” என்றாள் அவள் பாட்டி கருக்காணி.
இதற்குள் மையாகக் குழைத்த சோறும் பாசிப் பருப்பும் பூண்டும் மிளகும் சேர்த்த ரசத்தைப் பெருங்காய வாசத்தோடு அவளுக்குச் சாப்பிடக் கொடுத்தாள் அவள் அம்மா முத்தாயி.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago