அப்போது வறுமை மிகுந்த காலமாக இருந்ததால் பிள்ளை பெற்றவள் மூன்று மாதம்வரை வீட்டிலிருப்பதே பெரிய விஷயம். இப்போது பெற்றிருக்கும் பிள்ளைக்கு மூத்த பிள்ளைகளான அக்காவோ அண்ணனோ இருந்தால் அவர்கள் மரத்துத் தொட்டிலில் படுத்து இருக்கும் தம்பியையோ தங்கையையோ பார்த்துக்கொள்ள வேண்டும்.
அழும்போது காட்டு வேலைகளில் ஆழ்ந்திருக்கும் அம்மாவைக் கூப்பிட வேண்டும் அந்தத் தாய் வந்து பால் கொடுத்துவிட்டு, கொஞ்ச நேரம் கை, காலை உதறியவாறு நம்பிள்ளை படுத்திருக்கட்டுமென்று தரையில் கிழிந்த சேலையையோ வேட்டியையோ விரித்துப் படுக்க வைத்துவிட்டு மூத்த பிள்ளைகளிடம் பூச்சி, பொட்டு, எறும்பு என்று எதுவும் அண்டிவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போவாள். இவர்களும் சிறுபிள்ளைகள்தானே. சில நேரம் விளையாட்டு மும்முரத்திலிருக்க, தரையில் விரித்த சேலையில் படுத்திருக்கும் பிள்ளைகள் சிறு சிறு குதியாகக் குதித்தும் நகன்றும் வெறும் தரிசு நிலத்துக்கு வந்துவிடும். அவற்றின் மென்மையும் வெறுமையும் கொண்ட முதுகில் புல்லும் சில நேரம் முள்ளும்கூடக் குத்த அவை அந்தக் காடே அலறும்படி கூப்பாடு போட, பெற்றவள் ஓடிவருவாள். இந்தப் பச்சைப் பிள்ளைகளுக்காக மூத்த பிள்ளைகள் அடிவாங்குவதும் உண்டு.
பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கை
தவழும் பிள்ளைகளைக் காட்டுக்குக் கொண்டுவந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். எத்தனையோ பிள்ளைகள் வாய்க்கால் தண்ணியில் மூழ்கிக் கிடப்பதும் உண்டு. இதுவே கொஞ்சம் பெரிய வாய்க்காலாயிருந்தால் பிள்ளை தண்ணியோடு தண்ணியாகப் போய் பாத்திகளில் சில நேரம் பிழைத்தோ செத்தோ கிடப்பதும் உண்டு. ஆக, அந்தக் காலத்தில் கர்ப்பத்தடை இல்லாததால் ஒவ்வொரு பெண்ணும் பத்துப் பிள்ளைகள்வரை பெத்து அந்தப் பிள்ளைகளாலேயே வாழ்க்கை என்பது என்னவென்று தெரியாமல் ‘உழைப்பது மட்டும் சுகமான வாழ்க்கை’ என்று நினைத்தார்கள்.
இப்படி வீட்டில் மூத்த பிள்ளைகள் இல்லாமல் தலைப்பிள்ளைக்காரிகளாக இருந்தால் ஒரு செறட்டை நிறையப் பாலைக் கறந்து அதில் பச்சை நெல்லைப் போட்டுவிட்டுக் காட்டு வேலைக்குப் போய்விடுவார்கள். வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தைகள் பசியில் அழுவதைப் பார்த்து, செறட்டையிலிருக்கும் பாலை ஒரு துணியில் வடிகட்டி பிள்ளைக்குப் புகட்டுவார்கள். பாலுக்குள் இருக்கும் பச்சை நெல் வந்துவிடக் கூடாதல்லவா. குழந்தையின் தொண்டைக்குள் ஒரு நெல் போனால்கூட அதன் உயிர் போய்விடும். அதனால்தான் வடிகட்டிப் புகட்டுவார்கள்.
ஆணாகப் பிறந்தால் குலவை
இப்படிப் பெண்கள் காடுகளிலும் வீடுகளிலும் கஷ்டப்பட்டு அந்தக் கஷ்டத்தோடு கஷ்டமாய்ப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும் ஆண் பிள்ளை பெறுகிறவர்களுக்குத்தான் ஊருக்குள் மதிப்பிருந்தது. இரவு, பகலென்று எந்த நேரமானாலும் சரி ஆண் குழந்தை பிறந்துவிட்டால் ஊரே வந்து கூடிவிடும். எல்லாப் பெண்களும் சேர்ந்து ஊர் முழுக்கக் கேட்கும்படியாக மூணு குலவையிட்டு தொப்புள்கொடி அறுத்து அங்கே இருப்பவர்களுக்கெல்லாம் வெற்றிலை, பாக்கு, கருப்பட்டி எனக் கொடுத்து சந்தோசமாக வழி அனுப்பிவைப்பார்கள். ஊருக்குள் பெரிய ஆட்களாக, சிறந்தவர்களாக இருப்பவர்களைப் பார்த்துக் கூட்டிவந்து சேனை தொட்டு வைக்கச் சொல்வார்கள்.
மறுநாள் காடு, கரைகளிலெல்லாம் இதே பேச்சுதான். ‘செல்லத்துக்கு நேத்து ஆம்பளப்புள்ள பொறந்துருக்காக்கும். கொடுத்து வச்சவ. நாள அவன் ஆத்தா, அய்யா துவண்டு நிக்கும்போது தோள் கொடுத்து அவுகளைக் காப்பாத்துவான்ல’ என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண்பிள்ளை பிறந்துவிட்டாலோ, ‘அந்தச் செல்லம் பாவம். அரவமில்லாம பொம்பளப் புள்ளயைப் பெத்துப் போட்டுருக்கா. இன்னும் பத்து வருசத்தில அதுக்கு நகை, நட்டு செய்யணும், சீர்வரிசைக்குத் துட்டுச் சேர்க்கணும். மாப்பிள்ளை இவ மவ வளர வளர இவ சீரளிஞ்சி, சீப்பட்டுல்ல போவா’ என்று பேசிப் பேசியே அவளை அரைச்சீவனாக ஆக்கிவிடுவார்கள்.
சங்கினியின் ஆணவம்
இப்படித்தான் பூவம்மாவுக்கும் சங்கினிக்கும் எப்போதும் ஆகாது. இத்தனைக்கும் அவர்கள் எதிரெதிர் வீட்டில்தான் இருந்தார்கள். முதலில் கோழி போனது, குஞ்சு போனது என்றுதான் சண்டையை ஆரம்பித்தார்கள். பிறகு ஒன்றைத் தொட்டு ஒன்றாகப் பெரிய சண்டையாகிவிட்டது. இந்தச் சண்டை ஒரு பக்கம் நடக்க பூவம்மாவுக்கு அடுத்தடுத்து ஐந்தும் பெண் குழந்தைகள். அதேபோல் சங்கினிக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் பிறக்க, சங்கினிக்குப் பவுசு பொறுக்க முடியவில்லை. ஏற்கெனவே அவளுக்கு வாய் அதிகம். இப்போது ஆண் பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் குலவைச் சத்தமும் கொண்டாட்டமாயிருக்க சங்கினி இதையே சாக்காக வைத்து பூவம்மாளை எப்போதும் எல்லோரிடமும் கேவலமாகப் பேசுவாள். “ம்… இத்தன பொட்டப்புள்ளைகளைப் பெத்து வச்சிருக்காளே. இவ வீட்டுக்கு யாரு சம்மந்தத்துக்கு வருவா? வார அஞ்சு மருமவனுக்கு இவ என்னத்த சோறு ஆக்கிப் போடுவா? வெறும் கூழு அதுவும் வெஞ்சனமில்லாத கூழத்தானே ஊத்துவா” என்று இன்னும் கேவலமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினாள்.
பூவம்மாவுக்கு யாரையும் அதிகமாகத் திட்டியும் பழக்கம் இல்லை. சங்கினியின் வசவையெல்லாம் வாங்கிக்கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவள் ஒருநாள் பொறுமையிழந்தவளாக, “அடியே சங்கினி… நம்ம ஆம்பளப்புள்ளயா பெத்து வச்சிருக்கோமின்னு ஒரேடியா ஆடாத. இதுக்கெல்லாம் உனக்குக் கடவுளு கூலி கொடுப்பாரு. ஏன்னா ஆணு பொறந்த வாசல்ல ஆனை வரும், குருத வரும், அவிசாரி தண்டம் வரும். பொண்ணு பொறந்த வாசல்ல போள (மங்களப் பொருட்கள் வைக்கும் பெட்டி) வரும், சீலை வரும், பொன்னாலான தாலி வரும்” என்றாள்.
அற்புதமான அஞ்சு பெண்கள்
அதேபோல் பத்து இருபது வருசம் கழிந்தது. பூவம்மா வீட்டுச் சிறுபெண்கள் எல்லாம் குமரிகளாக, சங்கினி வீட்டுச் சிறுவர்கள் எல்லாம் தடித்தடியான இளவட்டங்களாக ஆகிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்குள் எப்போதும் சொத்துச் சண்டைதான். எனக்கு அந்தச் சொத்து, உனக்கு இந்தச் சொத்து என்று தினமும் ஒருவருக்கொருவர் அடித்து மல்லுக்கட்டி ரத்தக் களரியானார்கள். ஊருக்குள்ளிருந்து ஒவ்வொரு நாளும் அந்தப் பொண்ணைப் பார்த்தான், இந்தப் பொண்ணைக் கையப் புடிச்சி இழுத்தானென்று தினமும் பஞ்சாயத்தும் கூட்டமுமாக ஊரே சிரித்தது.
பூவம்மா வீட்டிலோ தங்கச்சிக்குக் கல்யாணம், அக்கா மகனுக்கு முடி எடுக்க, இளைய மகளுக்குச் சடங்கு எனத் தினமும் ஒரே விசேஷம்தான்; கலகலப்புத்தான்; மகிழ்ச்சிதான். இந்த அஞ்சுப் பெண்களும் தங்கள் அம்மாவை உட்காரவைத்து அழகு பார்த்தார்கள். வீட்டுக்கு ஒரு மாதமென்று கூட்டிப்போய் விருந்து வைத்தார்கள். தன் பெண்களால் பூவம்மா ஒரு சுற்றுப் பருத்தேவிட்டாள். ஆனால், சங்கினியோ தினமும் அழுகையும் கண்ணீருமாக மகன்கள் செய்த குத்தத்துக்காக ஊர் பஞ்சாயத்து காலில் விழுந்துகொண்டிருந்தாள்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago