சுற்றுச்சூழல் சீரழிவு: தண்ணீர் கண்ணீர்

By பிருந்தா சீனிவாசன்

காலையில் தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டு ஜமுனா என்ற பெண் கண் விழிப்பதாகத் தொடங்குகிறது அசோகமித்திரன் எழுதிய, ‘தண்ணீர்’ நாவல். 70-களில் சென்னை நகரில் நிலவிய தண்ணீர் பஞ்சம் குறித்த சித்திரம் நாவலில் ஊடுபாவாகக் கலந்திருக்கும். நாவல் வெளிவந்து 46 ஆண்டுகள் கழித்தும் அதே நிலை நீடிப்பது, அரசின் நீர் மேலாண்மையின் லட்சணத்தை உணர்த்துகிறது.

தண்ணீர் லாரிகள், அவற்றைச் சூழ்ந்து கொள்ளும் மக்கள், குழாய் உடைப்புகளால் வீணாகும் தண்ணீர், கழிவுநீருடன் கலந்துவரும் தண்ணீர் என்று அன்று இருந்த நிலை பல்வேறு பிரச்சினைகளுடன் இன்றும் தொடரத்தான் செய்கிறது.

பெண்களைச் சூழும் சிக்கல்

தண்ணீர் எப்போதும் பெண்களை மையப்படுத்திய பிரச்சினையாகவே இருக்கிறது. சமைப்பது, துவைப்பது, சுத்தம்செய்வது எனத் தண்ணீர் தேவைப்படுகிற பெரும்பாலான வேலைகளைப் பெண்களே செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பதாலேயே தண்ணீரைத் தேடி அலையும் வேலையும் பெண்களின் தலையிலேயே விடிகிறது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாவதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். தண்ணீர் எப்போது வரும் என்ற உறுதியற்ற நிலையில் இரவெல்லாம் பெண்கள் கண்விழித்துத் தவம் கிடக்கிறார்கள்.

நள்ளிரவுக்கு மேல் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரைப் பிடிப்பதிலும் பிரச்சினைதான். தண்ணீர் பிடிப்பதில் ஏற்படும் சண்டை, வாய் வார்த்தைகளில் ஆரம்பித்து அடிதடிவரை நீண்டுவிடுகிறது. தண்ணீர் தகராறு காரணமாக சென்னையில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பிரச்சினையின் வீரியத்தைச் சொல்லும் ஒரு சோற்றுப் பதம்.

இரவு, பகல் என எல்லா நேரமும் குடங்களுடன் தண்ணீர் பிடிக்கக் காத்திருக்கும் பெண்களைப் பார்த்த பிறகும், “தண்ணீர் தட்டுப்பாடு என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்தி” என அமைச்சர் ஒருவர் சொல்வது, மக்களின் மீது அரசு கொண்டுள்ள அக்கறைக்குச் சான்று.

ஓயாத தண்ணீர் தேடல்

வாரத்துக்கு ஒரு முறையோ பத்து நாட்களுக்கு ஒரு முறையோ லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரை நம்பித்தான் பெரும்பாலான சென்னை மக்கள் வாழவேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு குடம் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய்வரை விற்கப்படுகிறது.

பணத்தைக் கொடுத்தால் லாரித் தண்ணீர் கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் உயர்தட்டு மக்களும், இப்போது தண்ணீருக்காகத் தனியாக அதிக தொகையைச் செலவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

நீர் விநியோகக் கட்டமைப்பு சீராக  இருக்கிறது எனப் பொதுவாக நம்பப்படும் நகரங்களிலேயே இந்த நிலை என்றால், கிராமப்புறப் பெண்களின் நிலையோ வேதனைகள் மட்டுமே நிறைந்தது. கிணறு, கண்மாய், குளம், ஏரி போன்ற நீர் ஆதாரங்களை நம்பித்தான் கிராம மக்கள் வாழ்கிறார்கள். அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் தண்ணீரைத் தேடி காடு மேடெங்கும் அலைகிறார்கள். 

ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கிராமப்புறப் பெண்கள் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்கிறது தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம். இது ஒரு வேளை தண்ணீர் பிடிப்பதற்கு மட்டுமே. இப்படி ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறையாவது அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் நடக்கிறார்கள்.

அப்படியும் போதுமான அளவுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அடிகுழாய்களை அடித்து அடித்து ஓய்ந்துபோகிற, ஆற்றங்கரைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கி நிற்கும் கலங்கிய நீரை அகப்பையில் அள்ளியெடுத்து வடிகட்டுகிற, கிணறுகளின் அடியாழம்வரை கயிறை இறக்கித் தண்ணீரைத் தேடுகிற, தண்ணீர் லாரிகளுக்காகக் காத்துக்கிடக்கிற பெண்களின் சித்திரம் மனத்தை அறுக்கிறது. தண்ணீரைக் கொண்டுவருவதிலேயே பெண்களின் பெரும்பாலான நேரம் கழிந்துவிடுகிறது.

கொல்லும் அவலம்

இப்படித் தண்ணீருக்காக அலைவது உடலைப் பாதிப்பது ஒருபுறம் என்றால், இருக்கிற சிறிதளவு நீரை வைத்துக்கொண்டு எப்படி எல்லா வேலைகளையும் முடிப்பது என்பது பெண்களை மனத்தளவில் அதிகமாகப் பாதிக்கிறது. அது அதீத மன அழுத்தத்துக்கும் அவர்களை  இட்டுச் செல்கிறது.

குடிக்கவும் சமைக்கவுமே தண்ணீர் இல்லாத போது, குளிப்பதற்கு என்ன செய்வது? மாதவிடாய் நேரத்தில் போதுமான தண்ணீர் இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது.

“எங்க வீட்ல வேலை செய்யற அம்மா வழக்கமா சாயந்திரம்தான் வருவாங்க. ஒருநாள் மதியானமே வந்தாங்க. ‘எங்க ஏரியாவுல சுத்தமா தண்ணியே இல்லை. காலைல இருந்து பாத்ரூம்கூட போகல. கொஞ்சம் உங்க பாத்ரூமைப் பயன்படுத்திக்கட்டுமா?’ன்னு அவங்க தயங்கித் தயங்கி கேட்டப்ப மனசே உடைஞ்சுபோச்சு.

மக்களோட அடிப்படைத் தேவைகளை நிறைவேத்தி வைக்கறதைவிட அரசாங்கத்துக்கு வேற என்ன முக்கியமான வேலை இருக்கு?” என ஆதங்கப்படுகிறார் சென்னையைச் சேர்ந்த நித்யா. கேட்கிறவர்களுக்கு இது சாதாரணச் சம்பவமாகத் தோன்றலாம். தினம் தினம் தண்ணீர் இல்லாமல் தவித்துக் கிடக்கிற பெண்கள், இதைப் போன்ற பெரும் அவலங்களை அன்றாடம் எதிர்கொண்டுவருகிறார்கள்.

பாதிப்புக்குள்ளாகும் கல்வி

தண்ணீர் தட்டுப்பாட்டின் நீட்சியாகச் சிறுமிகளும் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் 23 சதவீதப் பெண்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதற்குத் தண்ணீர்த் தட்டுப்பாடும் பள்ளிகளில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் மாதவிடாய் நாட்களைச் சமாளிப்பதில் உள்ள சிக்கலுமே முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இப்படிப் பள்ளியைவிட்டுப் பாதியில் நிறுத்தப்படும் சிறுமிகள் தங்கள் பெரும்பாலான நேரத்தைத் தண்ணீரைப் பிடித்து வருவதிலேயே செலவிடுகின்றனர். 

தப்பித்துக்கொள்வது அழகா?

சமூகப் பிரச்சினைகளைத் தனிமனித பிரச்சினையாகக் குறுக்கித் தப்பித்துக்கொள்வதும் அரசுத் தரப்பில் நடக்கிறது. லாரிகளில் விநியோகிக்கப்படும் நீரை குளிக்கவும் துவைக்கவும் மக்கள் பயன்படுத்துவதுதான் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனத் தமிழக முதல்வர் சொல்லியிருப்பதும் அந்த வகையிலானதுதான்.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும்படியும் அவர் அறிவுறுத்துகிறார். நிலத்தடி நீர் இல்லாததால்தான் மக்கள் லாரித் தண்ணீருக்காகக் காத்திருக்கிறார்கள். தண்ணீரைச் சிக்கமானச் செலவழியுங்கள்; குழாயைத் திறந்துவைத்தபடியே வேலைகளைச் செய்யாதீர்கள் என இப்படிப்பட்ட நெருக்கடியான தருணத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்குவது அறிவுள்ள செயலா?

குழாயில் தண்ணீரே வராதபோது அவர்கள் எப்படி அதைத் திறந்துவைத்து வேலைசெய்ய முடியும்? பொய்த்துப்போன மழையைக் காரணம் காட்டியும் அரசு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. முக்கிய நீராதாரங் களைப் பராமரிக்காதது, ஆக்கிரமிப்புகளையும் மணல் திருட்டையும்  தடுக்காதது, தண்ணீரை உறிஞ்சி விற்பதற்குத் தனியாரை அனுமதித்தது, பெருநிறுவனங்களுக்கு அதிக அளவிலான தண்ணீரைத் தாரைவார்த்தது, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைச் சரிவரக் கண்காணிக்காதது, போதுமான அளவில் நீர்த்தேக்கங்களை உருவாக்காதது எனப் பல இடங்களிலும் கோட்டைவிட்டுவிட்டு கடைசியில் மக்களுக்கு ஆலோசனை மட்டும் வழங்குவதால் என்ன பயன்?

நமக்கும் பங்கு உண்டு

நிதி ஆயோக் அண்மையில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமே மாநில-மத்திய அரசுகளின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் சாகிறார்கள் என்றும் 60 கோடிப் பேர் கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்றும் நிதி ஆயோக் தெரிவித்திருக்கிறது.

தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் வீரியம் பெற்றுவருகின்றன, காலிக் குடங்களுடன் பெண்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

அதேநேரம் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் நமக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என மக்கள் ஒதுங்கிக்கொள்ளவும் முடியாது. மழைநீர் சேகரிப்புக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்கவும் நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வ முயற்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையென்றால், ஆண்டுதோறும் தண்ணீருக்குத் தவம் கிடப்பதும் தண்ணீரைத் தேடி அலைவதும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி பெண்களைத் தண்ணீர்ச் சுழலுக்குள் சிக்கவைத்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்