விவாதம்: அழகு மட்டுமே அடையாளமல்ல!

By பிருந்தா சீனிவாசன்

நிலவிலும் மலரிலும் தொடங்கியது இன்று தர்பூசணிவரை நீண்டிருக்கிறது. பெண்களை இன்னும் எவற்றோடு எல்லாம் ஒப்பிட்டு வர்ணித்துக்கொண்டிருக்கப்போகிறோமோ தெரியவில்லை. பொதுவாகப் பலரது அகராதியிலும் பெண் என்றால் அழகு மட்டும்தான் என்று பதிவாகியிருக்கிறது போல.

அதனால்தான் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்கும் பெண் நிருபரைப் பார்த்து அமைச்சர் ஒருவரால், “உங்க கண்ணாடி அழகா இருக்கு, நீங்க அழகா இருக்கீங்க” என்று சொல்ல முடிகிறது. அதைக் கண்டித்துப் பேசியவர்களைப் பார்த்து, “அழகைப் புகழ்ந்தால் ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று சிலர் கருத்து சொன்னது அமைச்சர் பேசியதைவிடக் கொடுமை. அமைச்சர் பேசியதில் தவறில்லை என்று பெண்கள் சிலரே சொல்லியிருப்பது, காலங்காலமாகப் பெண்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் கற்பிதத்தின் வெளிப்பாடு.

அடங்கிப்போவது நல்லது?

ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் பெயரால் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கர்நாடக முன்னாள் காவல்துறை அதிகாரி சங்கிலியானா பேசியிருப்பது அநாகரிகத்தின் உச்சம். நிர்பயாவின் அம்மாவைப் பார்த்து அவர் இப்படிச் சொல்கிறார்:

“அவருக்கு நல்ல உடல்வாகு இருக்கிறது. அதை வைத்தே நிர்பயா எப்படி இருந்திருப்பார் என்பதை என்னால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறது”. அதோடு மட்டும் அவர் தன் அறிவு வீச்சை நிறுத்தவில்லை. “பெண்கள் பலவீனமாக உணரும்போது எதிர்த்துப் போராடாமல் அந்தச் சூழலுக்கு அடிபணிந்துவிட வேண்டும். உயிரைக் காத்துக்கொண்ட பிறகு மற்றவற்றை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பேராசிரியரின் ‘பார்வை’

சங்கிலியானாவின் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரித்துப் பேசியிருக்கிறார். “பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்து தங்கள் அழகை வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் மார்பு ஆண்களைக் கவர்கிறது என்று தெரிந்தால் அதை மறைக்கும்படி மேலங்கி அணியாமல் முகத்தை மட்டும் மறைத்துக்கொள்கின்றனர்” என்று சொன்னதோடு பெண்களின் மார்பகங்களைத் தர்பூசணிப் பழத்தோடு ஒப்பிட்டுத் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருக்கிறார். பெண்கள் விஷயத்தில் பெரும்பாலான ஆண்கள் கலாச்சாரக் காவலர்களாக மாறுவதன் தொடர்ச்சிதான் பேராசிரியரின் இந்தப் பேச்சு.

அழகென்னும் சிறை

பெண்களின் அழகு குறித்தோ பெண்களை வெறும் அழகுப் பண்டமாகச் சித்தரித்தோ ஆண்கள் பேசுவது நம் சமூகத்துக்குப் புதிதல்ல என்றாலும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போக்கு வரவேற்கத்தக்கது அல்ல. கீழ் மட்டத்தில் தொடங்கி, படித்துப் பொறுப்பான பதவிகளில் இருக்கிற ஆண்கள்வரை பெண்களை மட்டம் தட்டியோ கீழ்த்தரமாகவோ பேசிவருவது பெண்கள் அழகுச் சிறைக்குள் மட்டுமே அடங்கிக் கிடக்க வேண்டியவர்கள் என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது.

ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிற சமூகத்தின் குரலாகவும் இப்படியான கருத்துகளைப் பார்க்கலாம். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆண்களாலோ ஆண்மயச் சிந்தனை கொண்டவர்களாலோ வரையறுக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும்போது இவை போன்ற கருத்துகள்தாமே வெளிப்படும்? இவை சில ஆண்களின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமல்லாமல் மக்களோடு தொடர்புடைய ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படும்.

திரைப்படமாகவோ பத்திரிகைச் செய்தியாகவோ பெண்ணுக்கு எதிரான சிந்தனைகள் அனைவரையும் போய்ச் சேரும். பிறகு அவையே நியாயம் எனக் கற்பிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும்.

சிந்தனையில் வேண்டும் மாற்றம்

ஆணாதிக்கச் சிந்தனையே இவற்றுக்கெல்லாம் மூல காரணங்களில் ஒன்று என்று சொன்னால், “ஆண்களைக் குறை சொல்வதே பெண்களுக்கு வாடிக்கையாகிவிட்டது” எனச் சிலர் அலுத்துக்கொள்ளலாம். சிலர் கோபமோ எரிச்சலோ படலாம். சிலர் கேலி பேசிச் சிரிக்கலாம். இன்னும் சிலர் புறக்கணித்துவிட்டுச் செல்லலாம். ஆனால், எப்படி எதிர்வினையாற்றினாலும் இதுதான் உண்மை.

ஆணைப் பொறுத்தவரை பெண் என்றால் முதலில் அழகு, பிறகுதான் எல்லாமே என்றாகிவிட்டது. ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. பெண்களை அழகுப் பொருட்களாக மட்டுமே பாவிப்பதும் நடத்துவதும் நாமே உருவாக்கிக்கொண்டவை என்பது பலருக்கும் தெரியும். தெரிந்தும் அவற்றிலிருந்து விடுபட நினைப்பதேயில்லை. பெண்களையும் அதற்குள் சிறைப்படுத்தவே முயல்கிறோம்.

கற்பிக்கப்படும் அடையாளம்

குழந்தை பிறந்ததும் ஆணாக இருந்தால் கம்பீரத்தைக் கற்பிக்கிறோம். பெண்ணாக இருந்தால் அடக்க ஒடுக்கத்தைக் கற்பிக்கிறோம். பெண் குழந்தையை விதவிதமாக அலங்கரித்து ரசிக்கிறோம்; அழகைப் புகழ்கிறோம். குழந்தையும் வளர வளர, அழகாக இருப்பது மட்டுமே பெண்ணுக்கு இலக்கணம் என்ற நினைப்பை இறுகப் பற்றிக்கொள்கிறது. இப்படி வளர்க்கப்படுகிற பெண்கள்தான், “அழகைப் புகழ்ந்தால் மகிழ வேண்டியதுதானே” எனப் பின்னாளில் கேள்வி கேட்பார்கள். சக பெண்ணை அழகு சார்ந்து ஒப்பிட்டு எதிரியாகப் பாவிப்பார்கள். தன்னை அலங்கரித்துக்கொள்வதே பெண்ணாகப் பிறந்ததன் பெரும்பயனாக நினைத்து வாழ்வார்கள்.

ஆண் என்றால் கம்பீரம் எனக் கற்பிக்கப்பட்டு வளரும் ஆண்கள், வளர்ந்த பிறகு பெண்ணை அடிமைப்படுத்தி அடக்கியாள்வதே ஆண்மை எனச் செயல்படுத்துவார்கள். “நீ ரொம்ப அழகா இருக்கே” என்ற புகழ்ச்சொல்லில் மயங்கிப் பெண் தன்னிடம் வீழ்ந்துவிடுவாள் என்ற நினைப்புக்கும் இதுவே காரணம்.

அதனால்தான் பதில் சொல்லவோ மறுத்துவிட்டோ கடந்துபோக வேண்டிய இடத்தில்கூட அந்த அமைச்சரால், “நீங்க அழகா இருக்கீங்க” எனச் சொல்ல முடிகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடி மாண்டுபோன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தெரிந்தும் அப்படியான கொடுமையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும்படி பெண்களுக்கு ஒரு காவல்துறை அதிகாரியால் ஆலோசனை வழங்க முடிகிறது.

பெண் மீது பாயும் அம்பு

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு காட்டக் கூடாது, பள்ளிகளில் சமத்துவத்தைக் கற்றுத்தருவோம், பெண்களை மதிக்கப் பழகுவோம் என எத்தனையோ தீர்வு முறைகளைச் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் பெண்கள் குறித்த ஆண்களின் பார்வை அப்படியேதான் இருக்கிறது என்பதைத்தான் இப்படியான சம்பவங்கள் சொல்கின்றன.

ஒரு பெண் தனக்குப் பிடித்த வகையில் ஆடை அணிந்தால், பொதுவெளியில் துணிச்சலோடு செயல்பட்டால், கொடுமைகளை எதிர்த்துக் குரல்கொடுத்தால் ஏன் சில ஆண்களுக்குக் கோபம் வருகிறது? ஏன் எப்போதும் பெண்களைப் பண்டமாகவே கையாள நினைக்கிறார்கள்?

சமையலறையையும் படுக்கையறையையும் தாண்டிப் பெண்கள் புழங்கவே கூடாது எனச் சொல்வது எதனால்? அப்படிச் செயல்படுகிற பெண்களை ஒழுக்கம் சார்ந்து கேள்விக்குள்ளாக்கி வதைப்பது ஏன்? கர்நாடகக் காவல்துறை அதிகாரியின் பேச்சுக்கு நிர்பயாவின் அம்மா சொன்ன பதில்தான் நினைவுக்கு வருகிறது. “எல்லையில் எதிரிகளோடு போராடும் ராணுவ வீரர்களைப் பார்த்து, ‘அடி பணிந்துவிடு’ என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று அவர் கேட்டிருக்கிறார். பெண்ணைப் பார்த்து நீள்கிற கேள்விக் கணைகளில் ஏன் ஒன்றுகூட ஆணின் பக்கம் திரும்புவதேயில்லை?

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகிகளே, பெண் என்றால் அழகு மட்டுமா? ஆண்களிடம் மட்டுமல்ல, சில பெண்களிடமும் ஊறிக் கிடக்கிற இந்த நினைப்பை எப்படி மாற்றுவது? உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்