வான் மண் பெண் 45: கூர்மையான பசுமை பேனா

By ந.வினோத் குமார்

த்திரிகைகளில் காடுகள், மலைகள், விலங்குகள் போன்றவை குறித்து பயணக் கட்டுரையாக மட்டுமே எழுதப்பட்டு வந்த நிலை 1984-ல் போபால் விஷ வாயு விபத்துக்குப் பிறகு தலைகீழாக மாறியது. சுற்றுச்சூழல் குறித்து வெளியான கட்டுரைகள் அது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தின. அப்படி தொன்னூறுகளின் மத்தியில் சுற்றுச்சூழல் செய்திகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தவர்களில் கேயா ஆச்சார்யா முக்கியமானவர்.

ஆரம்பத்தில் ‘டவுன் டு எர்த்’ சுற்றுச்சூழல் பத்திரிகையில் எழுதியவர், பின்னர் சுயாதீனப் பத்திரிகையாளராகப் பல பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தார். தற்போது சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களுக்கென ஓர் அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். கேயாவை பெங்களூரூவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம்.

பிறப்பிடம் தந்த ஆர்வம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள தராய் எனும் பகுதியில் கேயா ஆச்சார்யா பிறந்தார். அப்பா, தேயிலைத் தோட்டக்காரர். அம்மா, இல்லத்தரசி.

சுற்றிலும் பனி மலைகள், தேயிலைத் தோட்டங்கள், காடுகள், நதிகள் என இயற்கை சூழ வளர்ந்தார் கேயா. “அப்பா, இந்திய அறிவியல் கழகத்தில் பட்டம் பெற்ற விஞ்ஞானிங்கறதால அவர்கிட்ட இருந்து இயற்கை தொடர்பா நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது” என்கிறவருக்கு, சிறு வயது முதலே எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இருந்தது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளநிலைப் பட்டமும் டெல்லி பல்கலைக்கழகத்தில் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் புலத்தில் பட்டயமும் ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸம்’ கல்லூரியில் இதழியல் தொடர்பாகச் சான்றிதழ் படிப்பும் படித்தார்.

“படிப்பு முடிந்ததும் திருமணம். கணவரோட வேலைக்காக கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தோம். அப்போ அங்கிருந்த பத்திரிகைகள் சிலவற்றுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்” என்பவர், சிறிது காலத்துக்குப் பிறகு இந்தியா திரும்பினார். வந்தவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

“அது 90-களின் மத்தியக்காலம். அப்போது இந்தியாவில் சுற்றுச்சூழல் இதழியல் என்ற துறை கிடையாது. பெரும்பாலான பத்திரிகைகளில் அது குறித்து எழுதுவதற்குப் போதிய அறிவுடன் யாரும் இல்லை. அப்படியே இருந்தாலும் சூழலிய கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அன்று என்னைப் போல சூழலிய எழுத்துகளில் ஆர்வம் கொண்ட சிலர் நாட்டில் வளர்ச்சிப் பணிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறிவியல் பின்னணியுடன் இணைத்து எழுத ஆரம்பித்தோம். அதுபோன்ற எழுத்துகளுக்கு ‘டவுன் டு எர்த்’ பத்திரிகை நல்லதொரு தளமாக இருந்தது” என்றார்.

ஆழ்ந்த அறிவே தேவை

சுற்றுச்சூழல் செய்திகளை ஆழமாக எழுதிப் பழகுவதற்கான பயிற்சிக்களமாக கேயாவுக்கு ‘டவுன் டு எர்த்’ இருந்தது. “அதன் ஆசிரியராக இருந்த அனில் அகர்வால் ஒரு ‘டாஸ்க்மாஸ்டர்’. அவரிடம் வேலைசெய்வது அவ்வளவு சுலபமல்ல.

தண்ணீர் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால், அதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தண்ணீரின் நிலை, தண்ணீர் குறித்த மத்திய, மாநில அரசின் கொள்கைகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் சேகரிப்பு தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்கள் அல்லது திட்டங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றியும் அடி முதல் நுனி வரை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார்.

இவை அத்தனையையும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையில் இடம்பெற வேண்டும் என்பார். அந்த அளவுக்கு எங்களைத் தயார் செய்தார்” என்பவர், அங்கு சுயாதீனப் பத்திரிகையாளராகச் சுமார் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.

சூழல் பத்திரிகையாளர்கள் அமைப்பு

‘சுயாதீனப் பத்திரிகையாளராகப் பணியாற்றுவதில் உள்ள ஒரு வசதி, என்ன கட்டுரை எழுத வேண்டும் என்பதை நாமே முடிவு செய்யலாம். அதை எப்போது எழுதலாம் என்பதையும் எந்தப் பத்திரிகைக்கு அனுப்பினால் அதற்குப் போதுமான கவனம் கிடைக்கும் என்பதையும் நாம் தீர்மானிக்கலாம்’ என்றார் கேயா, சுயாதீனப் பத்திரிகையாளராக இருந்தபோது பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, தன்னைப் போன்ற சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

“அப்படிப் பலர் அறிமுகமானதன் பலன்தான் ‘தி கிரீன் பென்’ புத்தகம். சுற்றுச்சூழல் தொடர்பாகப் புதிதாக எழுத வருபவர்கள் எந்த விஷயங்களை எல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு புத்தகம் கொண்டுவர நானும் சில நண்பர்களும் யோசித்தோம். அதைத் தொடர்ந்து அவரவருக்குத் தெரிந்த, உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களிடம் அவர்களின் அனுபவங்களைக் கட்டுரையாகப் பெற்று அவற்றைத் தொகுத்து வெளியிட்டோம்” என்கிறார் கேயா.

2010-ல் வெளியான அந்தப் புத்தகம் இன்று பல கல்லூரிகளின் இதழியல் துறையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கேயாவும் பெங்களூருவில் உள்ள ‘கமிட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்’ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.

“அந்தப் புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஓர் அமைப்பை ஏற்படுத்த நினைத்தோம். அப்படி 2012-ல் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் ‘ஃபாரம் ஆஃப் என்விரான்மென்டல் ஜர்னலிஸ்ட்ஸ் இன் இந்தியா’ அமைப்பு” என்பவர், அந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் இந்த அமைப்பு ‘எஃப்.சி.ஆர்.ஏ’ (அயல்நாட்டுப் பங்களிப்பு விதிமுறைகள் விவகாரச் சட்டம்) உரிமத்தைப் பெற்றிருக்கிறது.

“பத்திரிகையாளர்களுக்கான அமைப்பாக இருந்துகொண்டு நாங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெற விரும்பவில்லை. தற்போது எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் பெற்றிருப்பதால் அயல்நாடுகளில் உள்ள சூழல் சார்ந்து இயங்கும் அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றிடமிருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். அவற்றைக் கொண்டு சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களுக்குப் பல பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் கேயா.

தவிர, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடுக்கும் அவதூறு வழக்குகளைச் சந்திக்கும் சுற்றுச்சூழல் செய்தியாளர்களுக்கு ஆதரவாகவும் இந்த அமைப்பு செயல்படும் என்கிறார் அவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் கட்டுரைக்காக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தொடுத்த வழக்கைச் சந்தித்தார்.

“ஏதேனும் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் முழு நேரமாகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்குகளில் சிக்கும்போது, அவர்களின் நிறுவனத்திலிருந்தே அவர்களுக்குச் சரியான ஆதரவு கிடைப்பதில்லை. இந்நிலையில் சுயாதீனப் பத்திரிகையாளர்களின் நிலை பற்றிச் சொல்லத் தேவையில்லை. இனி, அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் கேயா.

தன் பத்திரிகைச் செயல்பாடுகளுக்காக தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் கேயா ஆச்சார்யா, வருங்கால சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்: “நிறைய வாசியுங்கள். களத்துக்குச் செல்லுங்கள். சுற்றுச்சூழல்தான் நீங்கள் இயங்கப்போகும் களம் என்றால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்!”

படம்: ந.வினோத் குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்