பார்வை: அமைதி காப்பதே பெரிய வன்முறை

By பிருந்தா சீனிவாசன்

ன்னும் சில நாட்களில் உலக உழைக்கும் மகளிர் நாளைக் கொண்டாடப் பலரும் ஆயத்தமாகிவருகிறார்கள். அதற்குள் இன்னும் எத்தனை பெண்களைப் பலிகொடுக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை. விடிகிற பொழுதுகள் எல்லாம் பெண்கள் பலருக்குத் துயரத்தைத் தந்துகொண்டிருக்கிற நிலையில்தான் மகளிர் தினத்தின் மாண்பு குறித்து மேடைகளில் முழங்கப்போகிறோம்.

சுவாதி, பிரான்சினா, சோனாலி, நவீனா, வினுப்பிரியா, ஜிஷா, ஹாசினி, சித்ராதேவி என நீளும் பெயர்ப் பட்டியல், பெண்கள் மீதான தொடர் வன்முறைக்குச் சான்று. கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் விழுப்புரம் வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியையும் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவளுடைய அம்மாவையும் இந்தப் பட்டியலில் உயிர் சாட்சியங்களாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

இவர்கள் எல்லாம் இன்னும் சில நாட்களில் வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே தங்கிவிடுவார்கள். இவர்களுக்காவது புள்ளிவிவரம் என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. சமூகத்தின் கவனத்துக்கு வராமலேயே கொடுமை அனுபவித்த/அனுபவித்துவரும் பல்லாயிரம் பெண்களை என்ன செய்வது? நீதி, நியாயம் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கவும் திராணியற்று முடக்கப்படுகிற குரல்களை என்ன செய்வது?

யார் போராட வேண்டும்?

காதல், உறவுச் சிக்கல், பகை எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பெண்கள் இப்படிக் கொல்லப்படுவது சமூகத்தில் பரவிக்கிடக்கும் நோய்த்தன்மையைக் காட்டுகிறது. எந்தச் சிக்கலாக இருந்தாலும் ஆணாக இருந்தால் அதிகபட்சமாகக் கொலை செய்வதுடன் நின்றுவிடுகிறவர்கள், பெண்ணாக இருக்கும்பட்சத்தில் உடலைக் கூறுபோட்டுச் சிதைத்துவிடுகின்றனர். அதுவும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் என்றால் கேட்கவும் நாதியில்லை.

அவர்களை எப்படி வேண்டுமானாலும் சிதைத்துக்கொள்ளலாம். சில நாட்களுக்கு மட்டும் அந்தச் சம்பவம் குறித்துப் பரபரப்பாகப் பேசிவிட்டு அனைவரும் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். குழந்தை வளர்ப்பில் இன்னும் அதிகக் கவனம் தேவை, கல்வியில் மாற்றம் அவசியம், சட்டம் தன் பிடியை இறுக்க வேண்டும், காவல்துறைக்கு இரும்புக்கரம் தேவை, அரசுக்கும் பங்கு உண்டு என அதற்கான தீர்வுகளையும் விவாதங்கள் வாயிலாக முன்வைக்கலாம்.

எல்லாம் அவற்றோடு முடிந்துவிடும். பிறகு கருத்து சொல்ல வேறொரு பெண் உயிரை விடும்வரை காத்திருப்பதுதான் நிகழ்கிறது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழும் போதெல்லாம், ‘பெண்ணியவாதிகளும் பெண்ணிய அமைப்புகளும் போராடுவார்கள், அதில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று பலர் ஒதுங்கிவிடுவது உண்டு. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், ‘பெண்ணிய அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன?’ எனக் கொதிப்புடன் கேட்பார்கள்.

தப்பித்துக்கொள்ளும் மனநிலை

அடுத்தவர் பார்த்துக்கொள்வார் என்ற மனநிலைதான் போராட்டங்கள் நீர்த்துப்போவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்காததற்குமான காரணங்களில் முக்கியமானது. பிரச்சினை நம் வீட்டுக் கதவைத் தட்டும்வரை எதுவுமே நம்மைப் பாதிப்பதில்லை. நமக்கு நிகழாதவரை படுகொலையாக இருந்தாலும் அது சம்பவம் மட்டுமே.

அதுவும் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த நாளில் குரூரக் காட்சிகள் அனைத்தும் செல்போன் திரைக்கு வந்துவிடுவதால் அவற்றைப் பார்த்துப் பார்த்து வன்முறைகளைச் சகித்துக்கொள்ளவும் பழகிவிட்டோம். பிறகு எப்படி, எதை எதிர்த்து, யாருக்கு நீதி கேட்டுப் போராட முடியும்?

பாதிக்கப்படுகிற பெண்களுக்காகப் போராட வேண்டும் என்று நினைக்கிற பலருக்கும் ஒருங்கிணைவு இல்லாததாலேயே இலக்கை அடைய முடிவதில்லை. ‘நமக்கு இருக்கிற பிரச்சினையையே சமாளிக்க முடியவில்லை. இதில் இன்னொருத்தருக்காக என்ன செய்துவிட முடியும்?’ என்ற பலரது விலகலையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சமூகத்தின் சரிபாதி இனமான பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் வன்முறையும் நாம் வாழ்க்கைப்பாட்டுக்காகச் சந்திக்கிற பிரச்சினையும் ஒன்றல்ல.

ஒரு தேசத்தின் விடுதலைக்காக இனம், மொழி கடந்து அனைவரும் ஓரணியில் நின்று போராடியதைப் போலதான் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் நாம் உரத்துக் குரல்கொடுக்க வேண்டும். புதிதாக வேறொரு நிலத்தில் இருந்து யாரும் இங்கு வந்து பெண்களைக் கொடுமைக்கு ஆளாக்கவில்லை. சமூகத்தில் நம்முடன் வாழ்கிறவர்கள்தான் கற்பனைக்கும் எட்டாத வன்முறையைச் சிறுமிகள் மீதும் பெண்கள் மீதும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அப்படியான களைகளைச் சீர்படுத்த வேண்டியதும் நம் கடமைதானே.

போராடினால்தான் கிடைக்குமா?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெண் குழந்தைகள் கருவிலோ பிறந்த பிறகோ திட்டமிட்டே கொல்லப்பட்டுவருகிறார்கள். இந்தியாவின் பெரிய 17 மாநிலங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கின்படி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிர்ச்சி தரும் அளவுக்குச் சரிந்துள்ளது.

பிறப்பில் நிகழும் இதுபோன்ற அச்சுறுத்தலையும் ஒடுக்குதலையும் மீறித்தான் இந்தச் சமூகத்தில் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் வன்முறையின் பெயரால் வேரறுக்கத் தொடர் செயல்பாடுகள் நடக்கின்றன.

எட்டு மணி நேர வேலை கேட்டுப் போராடிய தொழிலாளர் போராட்டத்தின் நீட்சியாகப் பெண்கள் வாக்குரிமை கேட்டுப் போராடினார்கள். அதுவே பெண்களுக்கென சோஷலிச அமைப்பு உருவாகவும் உலகம் முழுவதும் மகளிர் தினம் என ஒரு நாளைக் கடைப்பிடிக்கவும் காரணமானது.

சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை இருந்தது. ஆனால், இன்று அவர்கள் வாழ்வுரிமை கேட்டுப் போராட வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஆண்களுக்குக் கிடைத்திருப்பதைப் போன்ற சம வாய்ப்பையும் சம உரிமையையும்தான் பெண்கள் கேட்கிறார்கள்.

பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம் குறித்துக் கவிதைகள் எழுதப்படுகின்றன. மற்றொருபுறம் அவர்கள் கொன்று புதைக்கப்படுகிறார்கள். அல்லது அப்படிப் புதைப்பதை மௌனமாகப் பார்த்தபடி கடந்துவிடுகிறோம்.

அதே நேரம், பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையையோ ஒரு படுகொலையையோ பார்த்துக்கொண்டு அமைதியாகக் கடப்பது, அந்த வன்முறையிலும் கொலையிலும் மறைமுகமாகப் பங்குபெறுவதற்குச் சமம் என்பதையும் ஒரு வகையில் அதை ஆதரிக்கிறோம் என்பதையும் நினைவில்கொள்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்