மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடிகள்!

By எல்.ரேணுகா தேவி

குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் விலைவாசி உயர்வு முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள்வரை அனைத்துக்கு எதிராகவும் இன்றைக்குப் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். வரதட்சிணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற சட்டத்தை உருவாக்கியதற்குத் தூண்டுகோலாக இருந்தது தொடங்கி பெண்கள் சார்ந்து பல்வேறு முக்கிய மாற்றங்களுக்கு வித்திட்டவை மகளிர் இயக்கங்களே. இந்தப் போராட்ட உணர்வுக்கு அடிதளமிட்டு, இந்திய மகளிர் இயக்கத்தை உருவாக்கிய வீரம் செறிந்த பெண்கள் பலர்.

புடவையில் தேசியக் கொடி

பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற அடக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடியவர் அகல்யா ரங்கனேகர். 1930-ல் பூனாவில் பிறந்த அகல்யா, கல்லூரிக் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.

காந்தியின் நீண்ட காலச் செயலாளராகப் பணியாற்றிவந்த மகாதேவ தேசாய், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மாரடைப்பால் இறந்தார். அதை அறிந்த அகல்யா தன் கல்லூரி தோழிகளுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினார்; சிறையிலும் அடைக்கப்பட்டார்.

04CHLRD_ahalya_rankanekkar அகல்யா ரங்கனேகர் right

அப்போது பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிறப் புடவைகளை ஒன்றாகச் சேர்த்து அதில் அசோகச் சக்கரம் வரைந்து உயரமான சுவர்களைக் கொண்ட ஆகாகான் சிறைச் சுவர் மீது ஏறி மூவர்ணக் கொடியை தைரியமாகப் பறக்கவிட்டார்.

இந்த உத்வேகமே விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் பெண்களை அவர் ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

சுதந்திரப் போராட்டத்துக்கான புரட்சிகர மகளிர் இயக்கத்துக்கு அடித்தளத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டார். அகல்யாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட பரேல் மகளிர் சங்கம் 1943 – 44 ஆண்டு காலகட்டத்திலேயே பெருவாரியான பெண்களைத் திரட்டி பிரசவ கால விடுப்பு, உழைக்கும் பெண்களுக்கு முறையான ஊதியம் போன்றவற்றுக்கான போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றது.

1944-ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக பரேல் மகளிர் சங்கத்தினர் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதேபோல் விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் முக்கிய போராட்டமாகக் கருதப்படும் கடற்படை எழுச்சிப் போராட்டத்துக்கு ஆதரவாக பரேல் மகளிர் அமைப்பினர் பிரிட்டிஷ் காவல் துறையினரை ஏமாற்றி போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய மகளிர் காங்கிரஸ் அமைப்பின் முன்னோடியாகவும் அகல்யா ரங்கனேகர் இருந்துள்ளார். இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ‘இந்து மசோதா’வை அமல்படுத்தக் கோரி அகல்யாவின் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரங்கள் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவியாக இருந்தன.

மராத்தி பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து மகாராஷ்டிர மாநிலமாக அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஒன்றிணைத்து 21 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர் அகல்யா. வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் போராடினார்.

பள்ளி செல்லப் பிடிவாதம்

இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்று 1943-ல் வங்கதேசத்தில் ஏற்பட்டது. இதில் குழந்தைகளும் பெண்களும் ஏராளமானவர் உயிரிழந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பெண்களுக்கு ரேஷன் மூலம் முறையாக உணவு கிடைக்க வழிவகை செய்தவர் மேற்குவங்கத்தை சேர்ந்த கனக் முகர்ஜி.

kanak mukherjee கனக் முகர்ஜி

பிரபல வழக்கறிஞரான சதீஷ்சந்திர தாஸ்குப்தா - நளினிதேவியின் மகளாக 1921-ல் கனக் பிறந்தார். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் தன்னைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துப் பள்ளி சென்றவர். கல்லூரிக் காலத்தில் வங்கதேச மாணவர் இயக்கத்தில் சேர்ந்து அந்தமான் சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என இயக்கம் நடத்தினார்.

பின்னாளில் ‘மகிளா ஆத்மரக்ஷா சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கியவர். இந்திய மகளிர் இயக்கத்துக்குள் முற்போக்குத் தளத்தை உருவாக்குவதில் கனக் முகர்ஜியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1964-ல் கனக் முகர்ஜி, பங்கஜ் ஆச்சார்யா, ஜோதி சக்கரவர்த்தி, மாதுரி தாஸ்குப்தா ஆகியோரின் தலைமையில் ‘மேற்குவங்க ஜனநாயக மாதர் சங்கம்’ உருவானது. 1975-ல் மத்திய அரசு நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது அகில இந்திய அளவில் உள்ள மகளிர் அமைப்புகளை அதற்கு எதிராக ஒன்றிணைத்ததில் கனக் முகர்ஜியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

களத்தில் எப்போதும் மக்களுடன் இணைந்து போராடிய கனக், 1967-ல் மாநகராட்சித் தேர்தலிலும் 1978-ல் மேற்குவங்க நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்றார். 1990 வரை ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார்.

அரசரை எதிர்த்த மங்களேஸ்வரி

வரியாக வசூலிக்கப்பட்ட தானியங்களைச் சுமந்தபடி கரடு முரடான பாதைகளில் நீண்ட தூரம் பயணித்து கொண்டுபோய்ச் சேர்ப்பவர்கள் பூர்வகுடிப் பெண்கள்தான். ஆனால், 1940-ல் இந்த முறையை எதிர்த்து மாற்றத்தைக் கொண்டுவந்தவர் ஓர் பூர்வகுடிப் பெண். அவர்தான் மங்களேஸ்வரி தேவ் வர்மா.

1949-ல் வரிவசூலுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை அடைந்த நிலையில் அரசரின் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து திரிபுராவில் மகளிர் அமைப்பை உருவாக்க வேண்டிய நிலை உருவானது.

அதையொட்டி அம்மாநிலத்தின் முதல் மகளிர் அமைப்பான ‘கண தந்த்ரிக் நாரி சமிதி’ உருவானது. தினமும் எட்டு, பத்து மணி நேரம் நடந்து மலைக் கிராமங்களில் உள்ள பெண்களைச் சந்திக்க செல்வாராம் மங்களேஸ்வரி. அவர் உருவாக்கிய நாரி சமிதி மகளிர் அமைப்பில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அன்போடு அழைக்கப்பட்ட ‘பாப்பா’

தமிழக மகளிர் இயக்க முன்னோடிகளில் ஒருவர் பாப்பா உமாநாத். 1931-ல் காரைக்காலில் பிறந்தவர் தனலட்சுமி (எ) பாப்பா உமாநாத். குடும்ப வறுமை காரணமாக திருச்சி பொன்மலையில் அம்மா அன்னலட்சுமியுடன் இணைந்து சாப்பாடுக் கடை நடத்திவந்தார். அங்கிருந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் சாப்பிட வரும்போதெல்லாம் சிறுமியாக இருந்த தனலட்சுமியைப் பாப்பா என அழைத்தனர்.

04CHLRD_pappa umanath.jpg பாப்பா உமாநாத்

பின்னாளில் ‘பாப்பா’ என்பதே அவரது பெயராக நிலைபெற்றுவிட்டது. தொழிற்சங்கத்தினரிடம் ஏற்பட்ட நட்பு காரணமாக பாப்பா உமாநாத்தும் அவருடைய அம்மாவும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டனர்.

பின்னாளில் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டுவந்த பாப்பா, நெருக்கடி நிலையின்போது தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சென்னை வந்த பாப்பாவும் அவருடைய அம்மாவும் சைதாப்பேட்டையில் தங்கியிருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி. ஜானகி அம்மாளுடன் கைதானார் பாப்பா. அப்போது காவல்துறை அதிகாரி, “உங்கள் இருவரைத் தவிர வேறு பெண்கள் உங்கள் அமைப்பில் இல்லையா?” எனக் கேட்டுள்ளார். அதன் பிறகே 1973-ல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கததின் எழுச்சிமிக்க மகளிர் மாநாட்டை நடத்தினார் பாப்பா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 mins ago

சிறப்புப் பக்கம்

57 mins ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்