வான் மண் பெண் 47: ஒத்தையில் நிற்கும் வேங்கைப் பெண்!

By ந.வினோத் குமார்

சு

ற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஓவியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறவர் சுனிதா தைர்யம்! தன் ஓவியப் படைப்புகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியைப் புலி, சிறுத்தை ஆகியவற்றால் கொல்லப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கிவருகிறார்.

இதன் மூலம், தன் கால்நடைகளைக் கொன்ற புலியையோ சிறுத்தையையோ அந்த உரிமையாளர் விஷம் வைத்துக் கொல்வதைத் தடுக்கிறார். புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கை இதுபோன்ற பழிவாங்கல் கொலைகளால் குறைந்துவரும் நிலையில், சுனிதாவின் இந்தப் பணி குறிப்பிடத்தகுந்தது.

மரபின் வழிவந்த திறன்

1962 டிசம்பர் 18 அன்று பெங்களூருவில் சுனிதா தைர்யம் பிறந்தார். அப்பா, கர்னல் ஜே.கே.தைர்யம் ராணுவத்தில் பொறியாளர். அம்மா லீலா சூரி, குடும்பத் தலைவி. லீலா, பாதி கன்னடம், பாதி ஆங்கிலம். ஆனால், கர்னல் தைர்யம் தமிழர்; சென்னையைச் சேர்ந்தவர். தமிழ், கன்னடம், ஆங்கிலம் எனப் பல மொழிகளைக் கலந்து உரையாடுகிறார் சுனிதா. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்கலா கிராமத்தில், கருங்கற்களால் கட்டப்பட்ட வீட்டில் தனியாக வசித்துவருகிறார் சுனிதா.

“என் அம்மாவழிப் பாட்டி ஈஸ்வர், பிரிட்டனைச் சேர்ந்தவங்க. அவங்க நல்லா வரைவாங்க. காட்டுயிர்களைத்தான் அதிகமா வரைஞ்சாங்க. என் சித்தி பிரேமிலா சிங், காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர். அந்த மரபணு, எனக்குள்ளும் ஓடியதால சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் மீது பிடிப்பு வந்துருச்சு. இமாச்சலப் பிரதேசம் சிம்லாவுல இருக்கிற ‘கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் அண்ட் மேரி’ பள்ளியில படிச்சேன். அப்பவே ஓவியப் போட்டிகள்ல தேசிய அளவுல பதக்கங்கள் வாங்கியிருக்கேன்” என்றவர், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் ‘டெக்ஸ்டைல் டிசைனிங்’ துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்.

“படிப்பு முடிஞ்சதும் நாகர்ஹொலே வனப் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற கபினி ரிசார்ட்ஸ்ல 1983-ல் மேனேஜர் வேலை கிடைச்சுது. ஒரு வருஷம் அங்க வேலை பார்த்தேன். அந்தப் பகுதியில இருக்கிற காடுகளைச் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும்போது நான் நிறைய கத்துக்கிட்டேன்” என்கிறார் சுனிதா. 84-ல் திருமணமானதும் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கே இருந்தார். திருமண வாழ்க்கை கசந்தது, 1995-ல் இந்தியா திரும்பினார்.

தனிக் காட்டு ராணி

“அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். பாட்டி, சித்தி வழியில போகலாமேன்னு தோணுச்சு. அப்ப என்னோட சித்தி, பந்திப்பூர் வனப் பகுதியில ரிசார்ட் கட்ட நினைச்சாங்க. சில காரணங்களால அந்தத் திட்டத்தைக் கைவிட்டுட்டாங்க. அந்த நிலத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு அவங்களுக்குத் தெரியலை. அதை நான் வாங்கினேன்.

அமெரிக்காவுல இருந்தப்ப ஃப்ரீலான்ஸ் ஆர்டிஸ்டா நிறைய விஷயங்கள் பண்ணியிருந்தேன். அதனால கையில கொஞ்சம் காசு இருந்துச்சு. இதோ, இப்ப இருக்கிற இந்த வீட்டை 50 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிச்சேன். ஓவியங்கள் வரைந்தேன். என்னோட ஓவியத் திறமையைப் பார்த்த வன அதிகாரிகள் சிலர், கர்நாடக வனத் துறை அலுவலகங்களுக்கு ஓவியம் வரைஞ்சுதரச் சொன்னாங்க. காட்டுயிர்களை மையப் படுத்திச் சுவரோவியங்கள் வரைஞ்சு தந்தேன்” என்பவர், மைசூரு மகாராஜாவின் அழைப்பின் பேரில் ஊட்டியில் உள்ள ‘ஃபெர்ன்ஹில் மாளிகை’யிலும் தன் கைத்திறனைக் காட்டியிருக்கிறார்.

“அப்ப நான் தனியாத்தான் இருந்தேன். கரண்ட், போன் எதுவும் கிடையாது, தண்ணிப் பற்றாக்குறை... இப்படிப் பல பிரச்சினைகள். வீட்டுல கடுமையான எதிர்ப்பு. ஆனா, எனக்கு இந்தத் தனிமையும் காடும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு. இந்தக் கிராமத்து மக்களும் எனக்குத் துணையா இருந்தாங்க.

2000-த்துல டாக்டர் பைனு ஒருத்தர் வந்தார். அப்ப இந்தக் கிராமத்துல மருத்துவ வசதிகள் இல்லை. அதனால, இங்க ஒரு சின்ன கிளினிக் வைக்க அவர் விரும்பினார். அவருக்கு நான் நிலம் கொடுத்தேன். சின்ன அளவுல ஒரு மருத்துவமனை கட்டினார். எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்த்தார். அப்ப அங்க வர்ற நோயாளிங்க பலர், என்கிட்ட பேசுவாங்க. ‘புலி வந்து என்னோட மாட்டை அடிச்சிருச்சும்மா’, ‘சிறுத்தை எங்க கன்னுக்குட்டியைச் சாப்பிட்டுருச்சு’ன்னு தங்களோட கஷ்டங்களைச் சொல்லி வேதனைப்படுவாங்க. அவங்களுக்கு எப்படியாச்சும் உதவணும்னு தோணுச்சு. அப்பதான் என்னோட கலையை, காட்டுயிர்ப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கினேன்” என்கிறார்.

புலிகளைக் காப்பாற்ற இழப்பீடு

சுனிதா தங்கியிருக்கும் பகுதியில் இருந்த மாரியம்மன் கோயில் நிலத்தை ஊரில் உள்ள சிலர் சொந்தம் கொண்டாட நினைக்க, ஊர் மக்களின் ஆதரவோடு அந்த நிலத்தை வாங்கி, அதைப் பொதுச்சொத்தாக மாற்றினார். 2007-ல், ‘மாரியம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ (http://savetigers.net/) அமைப்பை ஏற்படுத்தினார்.

புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு, இழப்பீடு தருவது அந்த அமைப்பின் முக்கியப் பணி. பந்திபூர் வனப் பகுதியில் உள்ள 23 கிராமங்கள் மட்டுமல்லாது முதுமலை வனப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் சிலவும் இந்த அமைப்பால் பயனடைந்திருக்கின்றன.

“ஆரம்பத்துல புலி, சிறுத்தையால கொல்லப்படும் ஒரு பசுவுக்கு 2 ஆயிரம் ரூபாய்வரை இழப்பீடு கொடுத்தோம். இப்போ 5 ஆயிரம் ரூபாய்வரை தர்றோம். இதுவரை 860-க்கும் அதிகமான கால்நடை இறப்புக்கு நாங்க இழப்பீடு கொடுத்திருக்கோம்” என்று சொல்லும் சுனிதா, ஓர் ஆண்டுக்கு 80 முதல் 150 கால்நடைகள் வரை புலி, சிறுத்தை போன்றவற்றால் கொல்லப்படுவதாகக் கூறுகிறார்.

நோய், விபத்து போன்றவற்றால் இறக்கும் கால்நடைகளைப் புலி அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அதற்காக இழப்பீடு வேண்டும் என்று பலர் விண்ணப்பிப்பதாகச் சொல்கிறார். எனவே, கொல்லப்படும் ஒவ்வொரு கால்நடையையும் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, அந்தக் கால்நடைகளின் சடலத்தைப் புலி, சிறுத்தைகளுக்கே விட்டுவிட வேண்டுமென (இல்லையென்றால், அந்தச் சடலத்தில் விஷம் வைத்துப் புலி, சிறுத்தைகளை கிராமத்தினர் கொன்றுவிடுவார்கள் என்பதால்) அந்தக் கால்நடைகளின் உரிமையாளர்களைச் சம்மதிக்கவைத்து அதற்குப் பிறகே இழப்பீடு அளிக்கிறது இந்த அமைப்பு.

18chnvk_sunita7.JPG சுனிதா தைர்யம் rightஆடைகளில் ஓவியம்

தவிர, இந்தக் கிராமங்களில் சுற்றும் நாய்களால் காட்டுயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் நாய்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதையும் இந்த அமைப்பு வழக்கமாகக்கொண்டிருக்கிறது. இவர்களின் பணியைப் பிரபல உயிரியலாளர் ஜார்ஜ் ஷேலர் முதல் பலர் பாராட்டியிருக்கிறார்கள். ‘பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா’ (PARI) போன்ற அமைப்புகள் இவர்களின் பணியை ஆவணப்படுத்தியுள்ளன.

“என் ஓவியங்களை விற்பனை செய்யுறது மூலமாத்தான் இதையெல்லாம் செய்ய முடியுது. ஆனா, ஒரு கட்டத்துல ஓவியங்களை விற்பதே பெரும் போராட்டமா இருந்துச்சு. ஓவியங்களை வாங்குறவங்க தள்ளுபடி கேட்பாங்க. அவங்க கொடுக்கிற பணம், இப்படியொரு நல்ல விஷயத்துக்குப் போகுதுன்னு சொன்ன பிறகும், தள்ளுபடி கேட்கிறவங்க பலர்.

இந்த நிலைமையிலதான், ‘டெம்பிள் ட்ரீ டிசைன்ஸ்’னு ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சேன். புலி, சிறுத்தைன்னு நான் வரைஞ்ச காட்டுயிர் ஓவியங்களை டி-ஷர்ட்டுகளில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யறோம். அதுக்கு, நான் படிச்ச டெக்ஸ்டைல் டிசைனிங்கும் உதவுது. இதுல கிடைக்கும் வருமானத்துல 20 சதவீதத்துக்கும் அதிகமா, இழப்பீடு சார்ந்த விஷயங்களுக்கே போகுது” என்பவருக்கு ஒரு கனவு உண்டு.

வாழை நாரைக்கொண்டு அந்த ஊர் மக்கள் கைத்தறி நூற்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்