நட்சத்திர நிழல்கள் 04: ஆனந்தியின் வாழ்வு ஒரு செய்தி

By செல்லப்பா

சமூகத்துடன் இணைந்து வாழ்பவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் எழுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் கருத்துகளுடன் ஒத்துப்போய்விடுகிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது எழும் சின்னச் சின்ன சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சமூகம் தானாகவே முன்வந்து கைகொடுக்கும். ஆகவே, பெரும்பாலானோர் சமூகம் முன்வைக்கும் மரபுகளைப் பின்பற்றியே வாழ்ந்து மடிந்துவிடுகிறார்கள்.

அதற்கு மாறாகச் சிந்திக்க அவர்களது மனம் துணிவதில்லை. ஆனால், சிலரது மனமோ மரபு வலியுறுத்தும் விதிமுறைகளை மீறுவதற்கு எத்தனிக்கும். அத்தகைய மனம் வாய்க்கப்பெற்றோர் சமூகம் அதிகம் விரும்பாத வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் விருப்பம் கொண்டுவிடுகிறார்கள். அந்தச் சிலர் மீது சமூகத்தின் பார்வை பட்டபடியே இருக்கும். அப்படிச் சமூகத்தின் பார்வைக்குத் தப்பாத இளம்பெண் ஆனந்தி.

1997-ல் வெளியான ‘விடுகதை’ திரைப்படத்துக்காக ஆனந்தியை உருவாக்கியவர் இயக்குநர் அகத்தியன். ஆனந்தியாக உலவியவர் நடிகை நீனா. ஆனந்தியின் வாழ்க்கை அவள் வயதையொத்த இளம்பெண்களின் வாழ்விலிருந்து பேரளவு வேறுபட்டது.

ஆனந்தி சரியான அப்பா பொண்ணு. அவரிடம்தான் அவள் எல்லாக் கதைகளையும் பேசுவாள். அவர்கள் உலகத்தில் அவரும் அவளும்தான். தந்தையின் நண்பர்கள் அவளுக்கும் நண்பர்கள். அவர்களுடன் வாயாடுவதிலும் அவளுக்குப் பிரியம் உண்டு. ஆக, ஆனந்திக்கு வாய்த்ததெல்லாம் வயதைத் தாண்டிய சிநேகம்தான்.

எதையும் எதிர்கொள்ளும் உறுதி

அவளுடைய தந்தை ராமநாதன், மனோதத்துவ நிபுணர். வாழ்வை அதன் போக்கில் வாழும் மனிதர். அவரது கவனிப்பிலும் அக்கறையிலும் ஆனந்தி துணிச்சலுடனும் வெட்கப்படவே தெரியாமலும் வளர்ந்திருந்தாள். கல்லூரியில் அவளுடன் படிக்கும் மாணவர்கள் ஓரிருவர் அவள்மீது மையல் கொண்டு மயக்கத்துடன் அவளை அணுகியபோது, அதைச் சரியாக எதிர்கொண்டு அது காதல் அல்ல என்பதை அவர்களிடம் விளக்கி அவர்களிடமிருந்து விலகியவள். அந்த அளவுக்கு வாழ்க்கை பற்றிய, ஆண் - பெண் உறவு பற்றிய புரிதலைப் பருவ வயதிலேயே பெற்றுக்கொண்ட பெண் ஆனந்தி.

இரண்டு முறை மாரடைப்பை எதிர்கொண்ட ராமநாதன் எப்போது வேண்டுமானாலும் வரவிருந்த மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனிதர். மரணம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும் என்பதால் அவர் உறங்கும்போதுகூடக் கதவைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்.

அப்பாவைப் பிரியப்போவது குறித்து ஆனந்திக்கு வருத்தமோ பயமோ எழும்போதெல்லாம் அவர் ஆனந்தியை உற்சாகப்படுத்துவார். மரணம் இயல்பானது என்பதையும் அது நிம்மதியானது என்பதையும் உணர்த்துவார். ஆனந்தியும் அதைப் புரிந்துகொண்டு அத்தகைய சம்பவங்களை மிகவும் இயல்பாக எதிர்கொள்ளத் தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.

வயதுக்கு மீறிய பக்குவம்

ஆனந்தி பயந்த நாளும் ராமநாதன் எதிர்நோக்கிய நாளும் எதிர்பட்டபோதுகூட அவள் அதைச் சாதாரணமாக எதிர்கொண்டாள். தந்தை மரணமடைந்த அன்று அவர் கையெழுத்திட்டுத் தந்திருந்த வங்கிக் காசோலையைப் பணமாக மாற்ற வங்கிக்குச் சென்றுவந்தாள். தந்தையின் மரணத்துக்காக அவள் பெரிய கும்பலைக் கூட்டவில்லை; பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

சொல்லப்போனால் அவள் அழக்கூடவில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துகொண்டாள். மறுநாளே கல்லூரிக்கு வந்துவிட்ட அவளை எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள். அவள் இயல்பாக இருந்தபோதும் அவளைச் சுற்றியிருந்த மனிதர்கள் அவளை இயல்புக்கு மாறான நடத்தைகொண்ட பெண்ணாகவே பார்க்கிறார்கள். அது அவளைச் சற்றுப் பாதித்தது. ஆனாலும், அவள் அதைச் சட்டை செய்யவில்லை.

அப்படியான சூழலில் 18 வயதான ஆனந்தியின் வாழ்க்கைக்குள் வருகிறார் 41 வயது நீலகண்டன். ராணுவத்தில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்திருப்பவர். ஆனந்தியின் வீட்டுக்கு வாடகைதாரராக வருகிறார்.  கிட்டத்தட்ட தன் தந்தை வயதுகொண்ட நீலகண்டனை ஆனந்திக்குப் பிடித்துப்போய்விட்டது.

தனிமையில் இருக்கும் நீலகண்டனுக்கும் ஆனந்தி ஒரு சாய்வாக இருந்தாள். ராணுவத்திலிருந்தே அவருடன் ஒட்டிக்கொண்ட உணவுக்கு முன்னான குடிப்பழக்கத்தைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை. அவர் மது அருந்தும்பொழுதில் அவரருகிலேயே இருந்து உரையாடுவாள். தன்னை மறந்து நீலகண்டன் தன் வாழ்வு குறித்துப் புலம்புவதற்குக் காது கொடுப்பாள்.

மரபை மீறிய திருமணம்

தனக்கான துணையாக நீலகண்டனே இருப்பார் என ஆனந்தி முடிவெடுத்தபோது, நீலகண்டன் முதலில் அதை மறுக்கிறார். வயது காரணமாக அவர் தயங்குவதைப் புரிந்துகொண்ட ஆனந்தி தன் மனத்தை அவருக்கு உணர்த்தி, சம்மதம் பெறுகிறாள். அவளுடைய தந்தையின் நண்பர்களுக்கே அந்த முடிவு சிறிது அதிர்ச்சியைத் தரத்தான் செய்தது. ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ஆனந்தியின் மனத்தை மாற்ற அவர்களாலும் முடியவில்லை.

திருமணத்துக்காகப் பதிவு அலுவலகம் சென்றபோது, அவளுக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு மாதங்கள் இருந்ததால் உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்குகிறார் பதிவுத் துறை அதிகாரி. ஆனால், ஆனந்திக்குத் திருமணம் என்ற சடங்கில் பெரிய நம்பிக்கை இல்லை.

மனம் ஒத்துப்போனபின் இத்தகைய சடங்குகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா எனக் கேட்டபடி நீலகண்டனுடன் வாழ்வைத் தொடங்க முடிவுசெய்துவிட்டாள். சட்டம், திருமணம் போன்ற மரபுவழிவந்த சடங்குகளுக்காகத் தன் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பலிபீடத்திலேற்ற அவள் விரும்பவில்லை.

சட்டரீதியான பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என நம்பும் அளவுக்கு அவளுக்கு நீலகண்டன் மீதும் வாழ்க்கை பற்றிய தனது புரிதல் மீதும் நம்பிக்கை இருந்தது. ஆகவே, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள்.

விடுகதையின் விடை

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தபோதும் நான்கு பேர் நான்குவிதமாகத்தான் பேசினார்கள். கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவள் தவறான முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனந்தி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாளா என்ற சந்தேகம் அவளுடைய கல்லூரி நண்பர்களுக்கு எழுந்தது.

அந்தச் சந்தேகம் நீலகண்டனுக்கே வந்தபோது, ஆனந்தி அதிர்ந்துபோனாள்; ஆனாலும் சுதாரித்துக்கொண்டாள். வெளியில் தங்களை ஜோடியாகப் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் அப்பாவும் மகளுமாகத் தோன்றுகிறோமோ எனும் சந்தேகம் தரும்படியான ஓரிரு நிகழ்வுகள் நீலகண்டனைப் பாதித்தன.

அவருக்குத் தான் தவறு செய்துவிட்டோமோ எனும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனந்தியைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்ற ஐயம் அதிகரிக்கிறது. அவளிடமிருந்து விலக முடிவுசெய்துவிட்டார். அவளுக்கு ஏற்ற ஒருவனை அவள் மணந்துகொண்டால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆனந்தி ஒத்துழைக்கவில்லை.

திருமணம் என்பதை உடம்புக்கானது என்று மட்டும் ஆனந்தி நினைக்கவில்லை. அதை அவள் நீலகண்டனுக்கு உணர்த்தி அவரைத் தன்னுடனேயே தங்கவைக்கிறாள். வாழ்க்கையெனும் விடுகதைக்கு விடை தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மத்தியில் ஆனந்தி அந்த விடுகதையின் விடையை அறிந்தவளாக இருக்கிறாள்.

நான்கு பேர் சொல்வதற்காகவெல்லாம் நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது; நமக்குச் சரியென்றுபடுவதன்படி செயல்படுவது நல்லது எனும் தெளிவு ஆனந்தியிடம் இருந்தது. அந்தத் தெளிவுதான் ஆனந்தி அவளைப் போன்ற பெண்களுக்குத் தரும் செய்தி.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்