திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த பெண் கதாபாத்திரங்களைச் சித்தரித்ததில் கே.பாலசந்தருக்கு முதன்மையான இடம் உண்டு என்பது ஐதிகம். உண்மை என்னவாக இருந்தபோதும், வங்காளப் படங்களில் இடம்பெற்றது போன்ற அழுத்தமான, அழியாப் புகழ்படைத்த பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார் என்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் ஆழமான நம்பிக்கை. அப்படியான பல கதாபாத்திரங்களில் ஒன்று தேன்மொழி.
தேன்மொழி திருநெல்வேலி மாவட்டத்தின் மலையோரக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவள். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நாள் அவளைப் பொறுத்தவரை ஒரு துக்க நாள். அரசியலால் வெறுப்படைந்து அவள் அதைத் துக்க நாளாகக் கருதவில்லை. அவளுக்கு அந்த அளவுக்கு அரசியல் ஞானமெல்லாம் இல்லை. அவள் ஆசையுடன் விரும்பிக் கட்டிக்கொண்ட கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நாள் அது என்பதாலும் தனது திருமண நாள் அன்றே, தான் கொலைசெய்ய நேர்ந்த துயரத்தாலும் அவள் அதைத் துக்க நாளாகக் கருதுகிறாள்.
வாசகங்களால் உள்ளம் நிறைத்தவன்
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்துக்கு நடிகை சரிதா உயிர் கொடுத்திருந்தார். தேன்மொழியின் உடல்மொழியிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் பாலசந்தர் தலைகாட்டிக்கொண்டே இருப்பார். அதையும் மீறி சரிதாவின் அகலமான கண்களும் அதில் வெளிப்படும் கோபம், தாபம், ஆசை, நிராசை உள்ளிட்ட பாவங்களும் தேன்மொழியை மறக்க இயலாமல் செய்திருக்கின்றன.
தேன்மொழி ஒரு நூற்பாலையில் பணியாற்றிவருகிறாள். அவள் செல்லும் வழியில் ஊசிமலை என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் கரும்பலகையில் தினந்தோறும் நல்ல வாசகம் ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அந்த வாசகங்களின் வழியே அவற்றை எழுதிவைக்கும் உலகநாதன் அவளுக்கு அறிமுகமாகிறான். தினமும் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்துவரும் அவனது பண்பு காரணமாக நெக்குருகிவிடுகிறாள் தேன்மொழி. அவளுடைய உள்ளத்தில் இடம்பிடித்துவிடுகிறான் உலகநாதன்.
துறுதுறுவென்ற விழிகள், ஜிமிக்கித் தோடு, இடப்பக்க மூக்குத்தி, வலக்கையில் சோறு கொண்டுபோகும் தூக்குச்சட்டி, இடக்கையில் துணிப்பை, பின் கொசுவச் சேலைக்கட்டு, தலையில் சூடிய ஆவாரம்பூ, நீளமான ஒற்றைச் சடை அதன் நுனியில் ஒரு ரிப்பன் எனக் கிராமத்து அழகுடனும் மலையருவிபோல் பொங்கிவழியும் சூட்டிகையான பேச்சுடனும் துள்ளித் திரிந்துவரும் தேன்மொழியையும் உலகநாதனுக்குப் பிடித்துப்போய்விட்டது. ஒருவரையொருவர் விரும்பிய காரணத்தால் இருவரும் இல்லற வாழ்வுக்குள் பெரியவர்களுடன் ஒப்புதலுடன் நுழைகிறார்கள்.
விரிசலுக்கு அச்சாரமிட்ட பேராசை
பிறருக்கு நன்மை செய்யும் தன் பண்பு காரணமாக உலகநாதன் இளம் வயதிலேயே அக்கம்பக்கத்துக் கிராமத்தினரிடையே பெரும் செல்வாக்குப் படைத்தவனாக இருக்கிறான். அவன் என்ன சொன்னாலும் கேட்பதற்கு அந்த மக்கள் தயாராக இருந்தார்கள். இதனாலேயே அவனைத் தங்கள் கட்சிகளில் இணைத்துக்கொள்ள மஞ்சள் கட்சியும் ஊதாக் கட்சியும் போட்டிபோட்டன. எல்லாவற்றையும் மறுத்துவந்தான் உலகநாதன். அதையெல்லாம் கண்டு தேன்மொழிக்குத் தன் கணவனை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால், காலத்தின் கணக்கு மாறிக்கொண்டே இருக்குமே.
தேன்மொழியின் பிரியத்துக்குரிய உலகநாதனுக்கு மஞ்சள் கட்சி மந்திரி பதவி எனும் ஆசை வார்த்தை காட்டியது. போதாதற்குச் சன்மானமாக ஒரு அட்டியலை வேறு கொடுத்தது. அதுவரை திடமாக நின்றுவந்த உலகநாதனின் மனத்தில் ஆளும் ஆசை விருட்சமாக எழத் திடுமென்று விழுந்துவிட்டான். மஞ்சள் கட்சியில் சேர்ந்துவிட்டான். தன் அன்புப் பரிசாக அவளுக்கு அந்த அட்டியலையும் தந்தான். கணவன் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய பரிசு எனப் பூரித்துப்போன தேன்மொழிக்கு அது வந்துசேர்ந்த அரசியல் பாதை புலப்பட்டபோது வெகுண்டெழுந்தாள். அவர்கள் இல்லற வாழ்வின் விரிசலுக்கு அரசியல் அச்சாரமிட்டது.
மரபைக் கைவிட முடியாத பெண்ணுரிமை
ஆணாதிக்கச் சிந்தனையால் தடித்துப்போன உலகநாதனின் செவியில் தேன்மொழியின் நல்லெண்ணப் பேச்சுகள் ஏறவேயில்லை. எல்லோருக்கும் நன்மை செய்தே பழக்கப்பட்டிருந்த உலகநாதன் பிறருக்குத் தீமைசெய்யக் கவலைப்படாதவனானான். பிறர் நலமே வாழ்வாகக் கொண்டிருந்த அவனுக்கு தன்னலமே பிரதானமாகிப்போனது. மிதிவண்டியில் வலம் வந்துகொண்டிருந்தவனுக்கு புது புல்லட் கிடைத்தது.
மஞ்சள் கட்சியிலிருந்து ஊதாக் கட்சிக்கு மாறினான். சிறிய வீடு பெரிய காரைவீடாக மாறியது. அரசியல் செல்வாக்கு அவனைச் செல்வந்தனாக உயர்த்தியது. ஆனால், அவனிடம் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் ஒவ்வொன்றாகக் காலாவதியாகிக்கொண்டே இருந்தன. அவனது சிந்தையில் நஞ்சு கலந்தது கண்டு தேன்மொழி செய்வதறியாது திகைத்தாள். அடுப்பாங்கரைக்கும் படுக்கையறைக்கும் மட்டும் பெண்டாட்டி போதும் எனும் முடிவுக்கு வந்தவனிடம் எதிர்த்துப் பேசிப்பார்த்தாள் தேன்மொழி. எதுவும் அவள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
பெண்டாட்டியை ஓரங்கட்டிவிட்டு வேறொரு பெண்ணுடன் அதே வீட்டில் வாழத் தொடங்கினான். கணவன் ஊராருக்குக் கெடுதல் செய்யும்போது எதிர்க்கேள்வி கேட்ட தேன்மொழி அவன் தனக்குத் துன்பமிழைத்தபோது பொறுத்தே போகிறாள். தேன்மொழி ஏன் அப்படிப் பொறுத்துப்போக வேண்டும்? அதுதானே மரபு!
அவள் என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் மரபைக் கைவிட முடியாதே? பெண்ணெனப் பட்டவள் தட்டுக்கெட்டுத் திரியும் கணவன் தீயவழிக்குப் போகும்போது எல்லாத் துயரங்களையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு நல்வழி காட்ட வேண்டியதிருக்கிறதே. வந்தவள் வலுத்தாள் இருந்தவள் இழந்தாள் என்ற கதையாக ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் தேன்மொழி.
அச்சமில்லாதவளுக்கு ஏன் அந்தக் கோலம்?
சொல்வாக்குத் தவறும் தனது போக்கு காரணமாக ஊராரிடையே செல்வாக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான் உலகநாதன். ஆனால், அரசியலால் கிடைத்த அனுகூலங்களை அனுபவித்தவன் அவற்றை இழக்க விரும்பவில்லை. அவற்றைத் தக்கவைக்க தகாத வழிகளில் தயங்காமல் நடைபோடுகிறான்.
பழிபாவத்துக்கு அஞ்சாமல் கொலைபாதகத்தில் ஈடுபடுபவனாக மாறுகிறான். இளம் பெண்ணொருத்தியின் கொலைக்கு வித்திட்டு, சாதிச் சண்டையை மூட்டுகிறான். இவை எல்லாம் தேன்மொழியின் காதுக்கும் வருகின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேன்மொழி பொங்குமாங்கடலாகிறாள். அந்தச் சுதந்திர நாளன்று மேடையில் ஆர்ப்பரிக்கும் அருவியாக உரை நிகழ்த்தும் உலகநாதன் பொங்குமாங்கடலில் சிக்குகிறான்.
அவனுக்கு மாலையிடச் சென்ற தேன்மொழி அவனை மீளா உலகத்துக்கு அனுப்பிவைக்கிறாள். அவனிடமிருந்து அந்த ஊரை விடுவித்துவிட்டு, திருமணப் பந்தத்திலிருந்து விடுதலை பெற்ற தேன்மொழி சிறைக்குச் செல்கிறாள். இப்போதெல்லாம் உலகநாதன்களுக்குப் பஞ்சமில்லை தேன்மொழிகள் எங்கே மறைந்திருக்கிறார்களோ?
கல்யாணப் பொண்ணு போல் பொட்டுவைத்து பூச்சூடி கணவனைக் கொல்ல மேடைக்கு வந்த தேன்மொழி அவனைக் கொன்றுவிட்டு பூவையும் பொட்டையும் இழந்து சிறைக்குச் செல்லும் கோலம்தான் தேன்மொழியின் கதாபாத்திரத்தைச் சிதிலப்படுத்துகிறது. அதே கல்யாணப் பொண்ணு கோலத்திலேயே அவள் சிறைக்குச் சென்றிருக்கலாம். எதற்கும் அச்சப்படாத தேன்மொழிக்கு ஏன் அந்தக் கைம்பெண் கோலம்?
படம் உதவி: ஞானம்
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago