அந்தக் காலத்தில் ஒற்றைக் கல்யாணமாக முடிக்க மாட்டார்கள். ஆறேழு கல்யாணமாகச் சேர்த்து முடிப்பார்கள். அதுவும் இரவு நேரக் கல்யாணமாகத்தான் இருக்கும். விவசாய வேலையும் கால்நடை மேய்ச்சலும் இருந்ததால் அவர்களுக்கு இரவு நேரத்தில்தான் ஓய்வு இருந்தது. மின் விளக்குகளும் இல்லாததால் வளர்பிறையின் வெளிச்சத்தில்தான் அவர்கள் எல்லா விசேஷங்களையும் நடத்தினார்கள்.
கல்யாணம் முடிந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் மணவறையை விட்டு எழுந்திரிக்கக் கூடாது. முறைக்காரர்கள் அவர்களை வாழ்த்த வேண்டும். ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்து மண மக்களின் அருகே வந்து அவர்கள்ளின் நெற்றியில் திருநீற்றைப் பூசிவிட்டு,
‘பொன்னான இந்த நாளிலே
புதுக் கல்யாணம் முடித்த கணவனும் மனைவியும்
கண்ணுக்குள் கண்ணாகப் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்று வாழ்த்துவார்.
பிறகு மாப்பிள்ளைக்கு வேண்டிய தாயாதிக் காரர்கள் இப்படிப் பாடுவார்கள்:
‘பொன்னாளிதே புதுமை வாழ்விலே
என் கண்ணான அண்ணாவை மணப்பதற்கு
என்ன தவம் செய்தாயோ
கொம்பனை மணப்பதற்குக்
கோடி தவம் செய்தாயோ
சோம்பேறி இவளுக்குச்
சோறுபொங்கத் தெரியாது
கறி சமைக்கத் தெரியாது
காட்டு வேலை தெரியாது’
என்று கேலிசெய்து பாடுவார்கள்.
அதேபோல் பொண்ணுக்கு வேண்டியவர்களோ,
‘ஆனையைக் கொண்டுவந்து
அரசடியில் கட்டினாலும்
குதிரையைக் கொண்டு வந்து
கூட்டத்தில் கட்டினாலும்
கோடி கொடுத்தாலும்
இந்தக் கொடியிடையாள் கிடைப்பாளோ’
என்று பாடுவார்கள்.
இப்படியாக அமுதாவின் கல்யாணமும் முடிந்துவிட்டது. மாப்பிள்ளையும் அக்கினிக் குண்டத்தைச் சுற்றிவந்து பெரியவர்கள் காலில் விழுந்தார்கள்.
அமுதாவின் பரபரப்பு
ஆனால், அமுதா பரபரத்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், கல்யாணத் துக்கு வந்த எல்லோரும் விருந்து சாப்பிடப் போய்விடுவார்கள். அதற்கு முன்னால் அவர்கள் காலில் விழுந்து ‘கும்பிடு துட்டு’ வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துத்தான் பரபரத்தாள்.
அந்தக் காலத்தில் ‘கும்பிடு துட்டு’ வாங்குவது வழக்கம். கல்யாணத்துக்கு வந்திருப்பவர்களில் ஒருவரைக்கூட விடாமல் மணப்பெண் விழுந்து கும்பிடுவாள். அவர்களும் அப்படி விழும் மணப் பெண்ணுக்குப் பணம் கொடுக்க வேண்டும். பணம் என்றால் பெரிய தொகையெல்லாம் இல்லை. ஒரு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம்! எல்லோரும் எட்டணா, அஞ்சணா, ஆறணா என்று கொடுப்பார்கள்.
அந்தச் சில்லறையைக் கொடுக்கக்கூட மனமில்லாமல் சிலர் மறைவிடம் தேடி ஓடுவார்கள். ஆனாலும், மணப்பெண் விடமாட்டாள். அவர்களைக் குறிவைத்து ஓடிப்போய்க் காலில் விழுந்து காசை வாங்கிவிடுவாள். இப்படி ஏன் காசு வாங்குறாள் என்றால், அந்தக் காசு அவளுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் கேட்க மாட்டார்கள். இப்படி ‘கும்பிடு துட்டு’ வாங்குகிற பெண்கள் அந்தக் காசில் ஆடு அல்லது கன்றுக்குட்டியைப் பிடித்து வளர்ப்பார்கள்.
அப்போது ஒரு கன்றுக்குட்டி ஐந்தாறு ரூபாய்க்குள் இருக்கும். அதனால்தான் ஓடி ஓடி எல்லோருடைய காலிலும் விழுந்து காசு வாங்கி, சொந்தமாக ஆடு, மாடு வாங்கிவிடுவார்கள். இது என் ‘கும்பிடு துட்டு’ காசில் வாங்கிய மாடு என்று சொல்லிக்கொண்டு அதை வளர்ப்பதில் அவர்களுக்கு இருக்கும் பெருமையைச் சொல்லி முடியாது.
மூன்று நாள் திருவிழா
இந்தக் கல்யாணங்கள் மூன்று நாட்கள் நடக்கும். இந்த மூன்று நாட்களும் யாரும் வீடுகளில் சோறு ஆக்கக் கூடாது. ஐந்தாறு கல்யாணங்கள் சேர்ந்து நடப்பதால் எந்த நேரமும் கல் அடுப்புகளில் சோறும் பருப்பும் வெந்துகொண்டே இருக்கும். ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
மூன்று நாட்கள் கல்யாணம் நடந்ததென்றால் அதற்குண்டான விசேஷங்களும் இருந்தன. முதல் நாள் கல்யாணம் நடக்கும். மறுநாள், ‘ஒரு சேலை உடுத்திக் குளிப்பது’ நடக்கும். புதுப்பெண் 16 முழச் சேலையை உடுத்தியிருப்பாள். அர்ச்சனைப் பானைக்குள் மோதிரம், கரண்டா (சங்கு வடிவத்தில் இருக்கும்) எல்லாம் போட்டு, பொண்ணும் மாப்பிள்ளையும் எடுத்த பிறகு ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு அவர்களைக் கூட்டிப்போவார்கள்.
பெண் ஒரு முந்தியைச் சுற்றிக்கொண்டு மறு முந்தியை மாப்பிள்ளையிடம் கொடுக்க வேண்டும். அவரும் அதைச் சுற்றிக்கொள்ள, கிணற்றில் நீர் இறைத்து வாளி வாளியாக ஊற்றுவார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் கரம்பை மண் குளிக்க பயன்படுத்தும் ஒருவகை வைப்பதும் பெண்ணுக்கு மாப்பிள்ளை மஞ்சள் பூசுவதும் வேடிக்கையாக இருக்கும்.
மஞ்சளில் குளித்தெழும் ஊர்
மூன்றாவது நாள் ‘அழகர் பெருமாள்’ வைத்து ஆட்டுவது என்று ஒரு விசேஷம். அதாவது பல்லக்கு போன்ற ஒரு பலகை இருக்கும். பலகையின் முன்னால் மட்டும் ஒரு பலகையை வைத்து வளைத்து அடித்திருப்பார்கள். அதில் பெருமாளின் உருவம் வரைந்திருக்கும். அதற்கு நேரே இரண்டு கம்புகள் நடப்பட்டிருக்கும்.
அவற்றைப் பிடித்துக்கொண்டு மாப்பிள்ளை நிற்க, அவனுடைய மச்சான்காரர்கள் பலகைக்குக் கீழே இருக்கும் இரண்டு கம்புகளைப் பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டுவார்கள். இவர்கள் ஆட்டத்துக்கெல்லாம் மாப்பிள்ளை தாக்குப்பிடித்து நிற்க வேண்டும். கொஞ்சம் சாய்ந்தாலோ கீழே விழுந்தாலோ வாழ்நாள் முழுவதும் கேலிக் குரியவர்களாகிவிடுவார்கள்.
அதற்காகவே மாப்பிள்ளை ‘தம்’ பிடித்து நிற்பான். மச்சினமார்கள் நிறைய இருந்து, எப்படியும் மாப்பிள்ளையை விழ வைத்துவிட வேண்டுமென்று முயன்றால், மாப்பிள்ளை அந்தப் பலகையிலிருந்து குதித்து ஓடி விடுவான்.
அழகர் பெருமாள் ஆட்டி முடித்ததும் மஞ்சள் நீராட்டு நடக்கும். தெருமுனையில் அண்டா அண்டாவாகத் தண்ணீர் நிரப்பி அதில் மஞ்சளைக் கரைத்து வைத்துவிடுவார்கள். ஆண்களும் பெண்களும் முறைக்காரர்களும் தேடித் தேடி மஞ்சள் நீர் ஊற்ற ஊரே மஞ்சள் குளத்தில் மிதப்பதைப் போல் இருக்கும்.
ஏழு நாள் விருந்து
அதன் பிறகு தெருக்களில் வழக்கம்போல் பந்தி நடக்கும். பிறகு மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்குப் போவார்கள். அங்கே அவர்களுக்குப் பால், பழம் கொடுப்பதோடு சரி. பிறகு பெண் வீட்டுக்கே திரும்பிவிடுவார்கள்.
கல்யாணம் முடிந்த பிறகு ஏழு நாட்களும் மாப்பிள்ளையும் அவரைச் சேர்ந்த தாயாதிக்காரர்களும் பெண்ணின் வீட்டில்தான் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். ஏழாவது நாள் ‘ஏழு முழுக்கு’ என்று மாப்பிள்ளையிலிருந்து தாயாதிக்காரர்கள்வரை எல்லோரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். அன்று கறிக்குழம்புடன் சோறு போட வேண்டும்.
வசதியுள்ளவர்கள் ஆடு வெட்டுவார்கள். வசதியில்லாதவர்கள் அதற்காகவே வளர்த்து வைத்திருக்கும் சேவல், கோழிகளை அடித்துக் குழம்பு வைப்பார்கள். நாலைந்து கல்யாணங்கள் சேர்ந்து நடப்பதால் அந்தந்தக் கல்யாண வீடுகளிலும் மறு வீடு, ஏழு முழுக்கு என எல்லாமே நடக்கும். அதனால், ஒரு வீட்டுக்காரர்கள் மட்டுமே கஷ்டப்பட வேண்டாம்.
பாரததேவி, ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் காடுகளில் வேலைசெய்தபோது நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அந்தக் கதைகளே பின்னாளில் நாட்டுப்புற எழுத்துக்கு அவரை அழைத்துச்சென்றன.
கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்திருக்கிறார். அறியப்படாத கிராமங்கள், கிராம மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை மையப்படுத்தியே பாரததேவியின் எழுத்து அமையும். இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago