வண்ணங்கள் ஏழு 50: முன்மாதிரியான மும்பை திருநங்கைகள்!

By வா.ரவிக்குமார்

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா தொடங்கிவிட்டது. எத்தனையோ கட்சிகள் நாட்டில் இருந்தாலும் மாற்றுப் பாலினத்தவருக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்பதை ஒருசில கட்சிகளே தங்களின் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளன.

மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கான இட ஒதுக் கீட்டைக்கூடக் கொண்டுவர முடியாத அரசியல் கட்சிகளிடம் மாற்றுப் பாலினத்தவரின் நலன்களை உறுதிசெய்யும் வாக்குறுதிகளை எதிர்பார்ப்பது விழித்துக்கொண்டே கனவு காண்பதைப் போல்தான் இருக்கும்.

மாற்றுப்பாலினத்தவர் குறிப்பிடும் திருத்தங்களோடு திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா அமல்படுத்தப்படும் என்று கேரளத்தில் சி.பி.எம். தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மாற்றுப் பாலினத்தவருக்கு சற்றே ஆறுதல் அளித்திருக்கிறது.

திருநங்கைகளும் அதற்கான முன்னெடுப்பைத் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கின்றனர் என்பதற்கு மும்பையில் வாழும் திருநங்கைகளே முன் மாதிரிகளாக இருக்கின்றனர்.

மூன்றாம் பாலினம் எனும் ஒரே குடை

“மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் திருநங்கைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு லட்சத்தைத் தாண்டும். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே தங்களை ஆணாகவும் பெண்ணாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு பலர் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றிருக்கின்றனர். அதனால்தான் திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கையைத் துல்லிய மாகக் கூறுவதற்கு முடிவதில்லை” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளரான சல்மா கான்.

கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது மும்பையிலிருக்கும் திருநங்கைகள் 127 சதவீதத்தினர் தாங்கள் மூன்றாம் பாலினம் என்னும் அடையாளத்துடன் வாக்காளர் அடையாள அட்டை பெற்று, வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.

vannam-2jpgலஷ்மி திரிபாதி (கோப்புப் படம்)left

மனத்தால் தங்களை ஆணாக உணரும் திருநம்பியாக இருந்தாலும் சரி, பெண்ணாக உணரும் திருநங்கைகளாக இருந்தாலும் சரி, அவர்களை  உச்ச நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட  மூன்றாம் பாலினம் என்னும் அடையாளத்துடன் பொருத்திக்கொள்வதே எதிர்காலத்தில் மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமைகளைப் பெறுவதற்கான முதல் அடியை எடுத்துவைப்பதாக அமையும்.

“இப்போதும் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வெளிப்படுத்தி இருக்கி றார்கள் என்றபோதும், திருநங்கைகளின் வளமான எதிர்காலத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாகத்தான் இதைப் பார்க்கிறேன். திருநங்கைகளின் இந்த விழிப்புணர்வை வரவேற்கிறேன்” என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் லஷ்மி திரிபாதி.

தன்பால் ஈர்ப்பைக் குறைக்க முடியுமா?

இந்தத் தொடரை ஆரம்பித்தது முதல் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் முதல் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பில் இருக்கும் வாசகர்கள்வரை பலரும் திருநங்கைகள் குறித்த பல சந்தேகங்களைக் கேள்விகளாக எழுப்பினர்.

நம்முடைய உடலுக்கேற்ற அளவில் உடைகள் அமையாவிட்டால், சில நேரம் தையல் பிரித்து, சரிசெய்து அணியலாம். அந்த அளவில்தான் உளவியல்ரீதியான மருத்துவம் பயன்படும். தன்பால் உறவில் ஈர்ப்புள்ளவர்களின் மனதை உளவியல்ரீதியான அணுகுமுறைகளால் மாற்ற முடியாது என்பதை மருத்துவர்களே கூறுகின்றனர்.

vannam-majubajpgடாக்டர் மஜுபாright

ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு மார்பக வளர்ச்சிக்கு உதவும் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கும் டாக்டர் மஜுபா ஹைதர் அலி நம்மிடம் மாற்றுப் பாலினத்தவர் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு ஆணுக்குப் பெண் மனம் வருவதற்கு இதுதான் காரணம் என்று திட்டவட்டமாக எதையும் கூற முடியாது. ஆணுக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான். பெண்ணுக்கான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாறுபாடு, குழந்தை வளர்ப்பு இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆண் குழந்தைகளுக்குப் பெண் உடை போட்டு பார்ப்பது, அலைபாயும் மனதோடு இருப்பவர்கள் தாங்கள் பெண்ணாக மாறிவிட்டாலே நாம் எல்லோராலும் கொண்டாடப்படுவோம் என்று யோசிப்பார்கள்.

பெண் மனதோடு ஆண் உடலை உதறி வெளியேறும் திருநங்கைகள் தங்களை முழுமையாகப் பெண்ணாக மாற்றிக்கொள்வதற்கு உடல் அளவிலும் கேசப் பராமரிப்பிலும் அறுவசை சிகிச்சையின் மூலம் குரலை மாற்றியும் பலவிதமான மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள்.

திருநங்கைகள் பெரும்பாலும் சிலிக்கான் இம்ப்ளிமென்டேஷன் மூலம் மார்பக வளர்ச்சிக்காக வருவார்கள். சிலிக்கான் எனும் வெளிப்பொருளைச் சதைக்கு உள்ளே பொருத்துவோம். பலருக்குச் சருமம் ஏற்றுக்கொள்ளும்.

vannam-3-perumaijpgசுதா

சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அப்படி ஏற்படும்போது அதற்கான சிகிச்சையை அளித்து மீண்டும் பொருத்துவோம். பாலின மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவர்களைச் சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

ஒரு பெருமை

திருநங்கைகள் சங்கமிக்கும் எந்த விழாவாக இருந்தாலும் அதை நேர்த்தியாகவும் சுவையாகவும் நுட்ப மான நகைச்சுவை உணர்வுடனும் தொகுத்து வழங்குபவர் சுதா.

‘தாய்’ போன்ற தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றியவர். ‘இந்தியன் டிரான்ஸ்ஜென்டர் இனிஷியேட்டிவ்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான சுதா,  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரிவில் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தமிழக அளவில் இந்த விருதைப் பெறும் இரண்டாவது திருநங்கை இவர்.

ஒரு விளக்கம்

ஆங்கிலத்தில் "Bigender" என்பதை ‘மாறுபட்ட ஆண், பெண்’ என்னும் தலைப்பில் கடந்த ஞாயிறு இதழில் (7/4/2019) விளக்கியிருந்தீர்கள். இந்த விளக்கம் குழப்பமாகவும் பிரச்சினையாகவும் தெரிந்தது. எனவே, அதற்கான மறுப்பையும் விளக்கத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். முதலில் ஒருவரை மாறுபட்ட ஆண், மாறுபட்ட பெண் என வகைப்படுத்துவது பெரும்பான்மைப் பாலினங்களான ஆண், பெண்ணை மையப்புள்ளிகளாக வைத்து அதன் வழியே பாலினச் சிறுபான்மையினரைப் பார்க்கும் பார்வையாக நான் நினைக்கிறேன். 

இத்தகைய பார்வை பாலினச் சமத்துவத்துக்கு ஒருபோதும் வழிவகுக்காது.  மேலும்,  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல், பெண்ணாகப் பிறந்தவர் தன்னை முழுமையாகப் பெண்ணாக உணர முடியாமல் போவதை வைத்து அவரை மாறுபட்ட ஆண் எனவும்  ஆணாகப் பிறந்தவர் தன்னை முழுமையான ஆணாக உணர முடியாமல் போவதை வைத்து அவரை மாறுபட்ட பெண் எனவும் வகைப்படுத்துவது பெரும்பான்மைப் பாலினங்களான ஆண், பெண்ணைப் பூரணமான பாலினங்களாகவும் பால் புதுமையினரை முழுமையற்ற மனிதர்களாகவும் அவர்களது பாலின அடையாளத்தை ஒரு குறைபாடாகவும் பிரதிபலிக்கும் ஆபத்து உள்ளது.

இங்கே குழந்தையின்மை சார்ந்த வெறுப்பும் அதையொட்டிய  சமூக ஒடுக்குமுறைகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Bigender என்பதற்கு ‘இருநர்’  என்பதே சரியான பதமாக இருக்க முடியும்.   தன்னை இரண்டு பாலினங்களோடு  அடையாளப்படுத்திக்கொள்பவர்களே ‘இருநர்’. இந்த இரண்டு பாலின அடையாளங்கள் ஆண், பெண், திருநங்கை, திருநம்பியாக என எதுவாக வேண்டுமாக இருக்கலாம். திரவ நிலை பாலினத்தவராக இருக்கலாம்; பால் அற்றவர்களாக இருக்கலாம்.

இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குத் தங்களை ஒரு பாலின அடையாளத்துடனும் பின் வேறொரு பாலின அடையாளத்துடனும்  அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஒரே  நேரத்தில் இரண்டு பாலின அடையாளங்களை  ஏற்கும் நபர்களும் உண்டு.

மேலும், ‘இருநர்’ போன்று தமிழ்ச் சூழலில் பெரும்பாலும் பேசப்படாத பாலின அடையாளங்களைப் புரிந்துகொள்ள ஆண், பெண் என்ற இருமக் குறிமானத்தில் (Binary Notion) இருந்து விலகி, பாலினம் என்பது  சுய அடையாளத்தை மையமாகக்கொண்ட ஒரு நிறமாலை என்ற புரிதலுடன் அணுக வேண்டியது அவசியம். பாலுக்கும் பாலினத்துக்கும் பால் ஈர்ப்புக்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்ற புரிதலும் அவசியம்.

திருநங்கை கனகா, சென்னை

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்