தேர்தல் களம்: தலையெழுத்தை மாற்றியமைக்கும் பெண்களின் ஓட்டு

By பிருந்தா சீனிவாசன்

நம் சார்பில் நமக்கான திட்டங்களைச் செயல்படுத்தப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்தியாவின் சில மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், நமக்கு அந்த வாய்ப்பு ஏப்ரல் 18 அன்று வாய்க்கவிருக்கிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்று என்பதாலேயே இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

தமிழகத்தில் ஆண்களைவிடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். முதல்முறை வாக்காளர்களிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகம்.

அதனால், மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதைப் பெண்களே தீர்மானிக்கவிருக்கிறார்கள் என்று பேசப்பட்டுவரும் நிலையில், நம் வாக்கைச் சரியான விதத்தில் பயன்படுத்துவது அவசியம்.

பின்தங்கும் இந்தியா

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் வாக்கைப் பதிவுசெய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதை 2014 நாடாளுமன்றத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

அந்தத் தேர்தலில் 66 சதவீதப் பெண்களே வாக்களித்திருந்தனர். இதுவரை பதிவான வாக்குகளில் இதுதான் அதிகம் என்ற தகவல், பெண்கள் தங்கள் அரசியல் உரிமையைச் சரிவரப் பயன்படுத்தவில்லை

என்பதையே சுட்டிக்காட்டுகிறது. பல நூறு கட்சிகள்  இருக்கும் இந்தியாவில் இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டுமே (ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம் – 33 சதவீதம், மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் – 41 சதவீதம்) இந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த அளவில் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த 193 நாடுகள் கொண்ட பட்டியலில் 2019 ஜனவரி 1 நிலவரப்படி இந்தியா 149-வது இடத்தைப் பிடித்து மோசமான நிலையில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் நம்மைவிட மிக அதிகமான சதவீதத்தில் பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.

பெண்களை முன்னேற்றும் கட்சி

நம்முடைய ஆண் மைய சமூகத்தில் அரசின் திட்டங்களும் ஆண்களை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித் துறை ஒதுக்கப்பட்டு, நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதேநேரம், மற்ற துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லாததால் பெண்களையும் குழந்தைகளையும் கவனத்தில்கொள்ளாமலேயே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயத் துறை தொடங்கி பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பேரளவு இருக்கிறபோதும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அது பிரதிபலிப்பதில்லை.

இப்படியொரு சூழலில் பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுவார்கள் என்னும் நம்பிக்கையைத் தருகிறவர்களைத்தானே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பத்தை சம்பந்தப்பட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கையே தெளிவுபடுத்திவிடும்.

அறிக்கைகளில் சொல்லப்பட்டிருப்பவை எல்லாமே செயல்படுத்தப்படும் என்ற உறுதியற்ற நிலையில், குறைந்தபட்சம் பெண்களை மனத்தில் கொண்டாவது யார் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார்கள், முந்தைய ஆட்சிக் காலத்தில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை வைத்து நம் முடிவை எடுக்கலாம்.

பாதுகாப்புக்கு முதலிடம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஜி.எஸ்.டி., எரிவாயு மானியம் உட்பட அரசு மானியங்கள், பெண்களுக்கும் முதியோருக்குமான பணப்பயன் திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு இருந்தன என்பதை வைத்தே ஒரு ஆட்சியின் தரத்தை மதிப்பிட்டுவிடலாம்.

இவற்றைவிட முக்கியமானது, நாடு முழுவதும் பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களும் எப்படி நடத்தப்பட்டார்கள், அவர்களை முன்னேற்றும் வகையில் எத்தனை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைத்தனவா, சாதி ஆணவப் படுகொலைகள் குறைந்தனவா என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

உலகிலேயே பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான திட்டங்களை முன்மொழிந்திருக்கும் கட்சி எது எனப் பார்க்க வேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்கள் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றனவா என உறுதிசெய்துகொள்ள வேண்டும். அந்தத் திட்டங்கள் மேம்போக்கானவையாகவும் கவர்ச்சிகரமானவையாகவும் இல்லாமல், செயல்படுத்த உகந்தவையா என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு அவசியம்

பெண்களுக்குச் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்கான வழிவகை செய்யப்படும் எனச் சொல்லும் கட்சிகள், அதில் பாதி அளவுக்குக்கூடப் பெண் வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் நிறுத்தவில்லை. அதற்காகத் 50 சதவீதப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கும் கட்சிகள் பெண் முன்னேற்றத்துக்கு உகந்தவற்றைச் செய்வார்கள் என்றும் சொல்லிவிட முடிவதில்லை.

பெண்களை அந்தக் கட்சிகள் கண்ணியமாக அணுகுகின்றனவா, பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுகிற கட்சிகளின் மீது அந்தக் கட்சியினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அந்தக் கட்சிகளின் நடைமுறை நிலைப்பாடு என்ன போன்றவற்றை வைத்தே கட்சிகளின் கண்ணியத்தைக் கண்டுபிடித்துவிடலாம். வாக்களிப்பதற்குமுன் இவற்றை யெல்லாம் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பா, அடிமைச் சங்கிலியா?

அரசுப் பணிகளில் பெண்களுக்குப் போதுமான அளவு இடஒதுக்கீடு வழங்குவது குறித்துக் கட்சிகள் பேசியிருக் கின்றனவா என்பதும் முக்கியம். கல்வியும் வேலைவாய்ப்புமே பெண்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

அவையே அவர்களுடைய சமூகப் பங்களிப்பை அதிகரிக்கும். அதனால், வேலைவாய்ப்பிலும் தொழில் தொடங்க பெண்களுக்குக் கடன் வழங்குவதிலும் ஆர்வம்காட்டும் கட்சியை அடையாளம்காண வேண்டும்.

பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டத்தைத் தேர்தல் அறிக்கையில் அனைத்துக் கட்சிகளும் சேர்த்திருக்கின்றனவா என்பதைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒன்றிரண்டு கட்சிகள் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

பெண்களைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அவர்களின் இயங்குவெளியை முடக்கும் வகையிலும் அவர்களின் முடிவெடுக்கும் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் சில திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது அயர்ச்சியையே தருகிறது.

இதுபோன்ற திட்டங்களை முன்மொழிபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றால் பெண்களின் முன்னேற்றத்துக்கு எப்படிக் குரல்கொடுப்பார்கள் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒடுக்கப்படவர்களின் குரல்

பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிற நாட்டில் பாலினச் சிறுபான்மையினரான மாற்றுப் பாலினத்தவரைப் பெரும்பாலான கட்சிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

 மாற்றுப் பாலினத்தவருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அவர்களின் முன்னேற்றதுக்குச் சட்டரீதியான மாற்றம் கொண்டுவர வலியுறுத்தப்படும் எனவும் இரண்டு கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அவர்கள் இதுவரை பெண்களுக்கும் பாலினச் சிறுபான்மையினருக்கும் மாநில அளவில் என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்பதை வைத்தே, அவர்கள் மத்தியிலும் அதே நோக்குடன் செயல்படுவார்களா அல்லது தேர்தல் அறிக்கையோடு நின்றுவிடுவார்களா என்பதை உணரமுடியும். ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும் வாக்களிக்கும் பெண்களின் சதவீதம் குறைவாக இருப்பது முக்கியமான ஒரு பின்னடைவு.

பெண்கள் சுயமாக முடிவெடுக்காததும் அவர்கள் தனி வாக்குவங்கியாக ஒன்றிணைய முடியாததற்கு ஒரு முக்கியக் காரணம். வீட்டு ஆண்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குத் தாங்களும் வாக்களிக்கும் பிற்போக்குத்தனத்திலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும். வாக்களிப்பது நம் அடிப்படை உரிமை. அதை வேறு யாரும் பயன்படுத்தவோ, அதில் செல்வாக்கு செலுத்தவோ நாம் அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகளின் ஒரு சில போக்குகள் பிடிக்கவில்லை என்பதற்காக வாக்களிக்காமல் இருப்பதும் உதிரிகளுக்கு வாக்களிப்பதும் நம் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடிமை சாசனமாக எழுதிவைப்பதற்குச் சமம்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பெண்களின் குரலாக நாடாளுமன்றத்தில் இவர்கள் ஒலிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறவர்களைப் பெண்கள் தேர்ந்தெடுக்கும்போது, நிச்சயம் அது  ‘ஒரு விரல் புரட்சி’யாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்