முகம் நூறு: தங்கத்தைப் பெற்றெடுத்த ராசாத்தி

By ஜெ.ஞானசேகர்

கத்தார் நாட்டின் தோஹா நகரில் சாதித்துவிடும் உறுதியுடன் மகள் கோமதி ஓடிக்கொண்டிருக்க, திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தில் அவருடைய தாய் ராசாத்தி வயலில் வேலைசெய்துகொண்டிருந்தார். வெற்றிகரமாக ஓடி முடித்து மகள் தங்கத்தை முத்தமிட்ட செய்தியைத் தாமதமாகத்தான் ராசாத்தி அறிந்தார்.

ஊடகத்தினர் படையெடுத்த பிறகுதான் தன் மகள் பெரிய அளவில் சாதித்திருக்கிறார் என்பது அந்தத் தாய்க்குப் புரிந்தது. மகள் வாங்கிக் குவித்த பதக்கங்கள் அனைத்தையும் மகளாகவே நினைத்து வாரியணைத்து நெகிழ்கிறார் ராசாத்தி. மகளைப் பாராட்டுவதற்காகத் தன் தொகுப்பு வீட்டின் முன் குவிகிற கூட்டத்தைப் பெருமிதத்துடனும் கூச்சத்துடனும் வரவேற்றுப் பேசுகிறார்.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் கோமதி மாரிமுத்துவின் கிராமம் முடிகண்டம், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மழையின்றி கடுமையான வெயிலால் வெந்துகொண்டிருந்த இந்தக் கிராமத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது கோமதியின் வரலாற்றுச் சாதனை!

மகளின் பயிர்

மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய கண்டத்தையே முடிகண்டத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கோமதி.

மகளுடன் பேச வேண்டும் என்று பரிதவித்துக் காத்திருந்த அந்த ஏழைத் தாய் ராசாத்திக்கு, மூன்று நாட்களுக்குப் பிறகு 25-ம் தேதி பிற்பகலில்தான் அந்த பாக்கியம் கிடைத்தது. மகளின் குரலைக் கேட்ட பிறகு அவரை நேரில் காணும் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்.

பெங்களூருவில் வருமான வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றிவரும் கோமதி, சிறு வயதில் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கிக் குவித்ததைப் பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார் ராசாத்தி. “ஸ்கூல் படிக்கும்போது நிறையப் போட்டியில கலந்துக்கிட்டு தட்டு, கின்னம், டம்ளர்னு ஜெயிச்சுட்டு வருவா” என்று புன்னகைக்கிறார்.  

ராசாத்தியின் வீட்டில் மூத்த பிள்ளை மகன் சுப்பிரமணி. அடுத்தது மகள்கள் லதாவும் திலகவதியும். கடைக்குட்டியாகப் பிறந்தவர் கோமதி. “என் வீட்டுக்காரர் விவசாயக் கூலி வேலையைத்தான் செய்தார். வீட்ல ஏற்கெனவே கஷ்டம். இதுக்கு நடுவுல கோமதி பிறந்தப்போ ரொம்ப வருத்த மாகிடுச்சு. வேற வழியில்லாம நானும் காட்டு வேலைக்குப் போனேன்” என்கிறார் ராசாத்தி.

வறுமைக்கு அஞ்சாத உறுதி

எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளோடு ஒரு ஆணையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு மாரிமுத்து - ராசாத்தி தம்பதியின் முன் மலைபோல் மறித்துநின்றது. ஒரு கட்டத்தில் மூத்த மகள்கள் இருவரின் படிப்பையும் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம்.

அவர்களும் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர். ஆனால், இந்தக் கவலையும் வறுமையும் கோமதியைப் பாதிக்கக் கூடாது என்பதில் அவருடைய தந்தை உறுதியாக இருந்தார். மகளின் விளையாட்டு ஆர்வத்துக்குப் பக்கத்துணையாக நின்றார். “எம்பொண்ணுக்கு விளையாட்டுல ஆர்வம். அவளை அவ போக்குலயே விட்டுட்டோம்” என்கிறார் ராசாத்தி.

இதனால், ஓட்டப் பயிற்சி தேவையா என்று வீட்டில் மீண்டும் விவாதம் எழுந்தது. வழக்கம்போல், மகளுக்குத் தந்தையின் முழு ஆதரவு இருந்தது; கோமதியும் பயிற்சியைத் தொடர்ந்தார். இடையில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில், திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டுப் படிப்பையும் விளையாட்டையும் தொடர்ந்தார் கோமதி.

“மூணு வேளையும் குறையில்லாம சாப்பிடுறதே எங்களுக்குப் பெரிய சாதனைதான். அதுல கோமதிக்குன்னு தனியா எதையும் வாங்கித்தர முடியல. வீட்ல வளர்த்த கோழிங்க போடுற முட்டையையும் முருங்கைக் கீரையும்தான் நான் அவளுக்குக் கொடுத்தேன்.

ஒல்லியான உடம்போடு ஓடியாடுற பிள்ளைக்குச் சத்தா எதையும் வாங்கிக் கொடுக்க வழியில்லையேன்னு நிறைய நாள் கவலைப்பட்டிருக்கேன். ஆனா, எந்தப் போட்டியா இருந்தாலும் எம்மவ ஜெயிக்காம திரும்பினதே இல்லை” என்று சொல்லும்போது கவலை மறைந்து மகிழ்ச்சி படர்கிறது ராசாத்தியின் முகத்தில்.

மெய்ப்பட்ட தந்தையின் கனவு

சென்னையில் பட்ட மேற்படிப்பு படித்தபோதும் வேலை கிடைத்த பிறகும் கோமதி தனியாக இருந்ததால் அவர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் எந்த வேலையையும் செய்யவிடமாட்டாராம் ராசாத்தி. “அவ வீட்ல எத்தனை நாள் தங்குகிறாளோ அத்தனை நாள் நானும் வேலைக்குப் போக மாட்டேன். இதைத் தவிர அவளுக்கு நாங்க எந்த உதவியையும் செய்யலை” என்கிறார் ராசாத்தி.

வறுமையைத் தாண்டி பெயர் வெளியே தெரிகிற அளவில் கோமதி சாதிக்கத் தொடங்கியபோது அவருக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது. 2016-ல் அவருடைய அப்பா இறந்துவிட, இடிந்துபோய்விட்டார் கோமதி. ஆனாலும், அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றவும் தனது லட்சியப் பயணத்தைத் தொடரவும் பயிற்சியைத் தொடந்தார். அந்த விடாமுயற்சிதான் இன்று கோமதியைத் தங்க மங்கையாக்கியிருக்கிறது.

“கோமதி பிறந்தப்ப மூணு பெண் குழந்தைகளையும் எப்படிக் கரை சேர்ப்பேன், கட்டிக் கொடுப்பேன்னு கவலையா இருக்கும். ஆனால், தங்கத்தை ஜெயிச்சிருக்கிற கோமதியோடு சேர்த்து மூணு தங்கங் களைப் பெற்றெடுத்ததுக்காக பெருமைப்படுறேன். இதையெல்லாம் பார்க்க அவ அப்பா இல்லையேன்னு நினைச்சா கவலையா இருக்கு” எனக் கலங்குகிறார் ராசாத்தி. சட்டெனக் கண்களைத் துடைத்துக்கொண்டவர், “மகள் ஜெயிக்கிற இந்த நாளுக்காகத்தானே அவரும் ஆசைப்பட்டாரு. அது இப்ப நிறைவேறிடுச்சு” என்கிறார்.

ஆனால், மகளை எப்போது காண்போம்; கட்டி யணைத்து முத்தமிடுவோம் என்று நூற்றுக்கணக்கான பதக்கங்களை கையில் ஏந்திக் காத்திருக்கிறார் ஏழைத் தாய் ராசாத்தி.

போதிய பேருந்து வசதியும் பயிற்சி மைதானமும் இல்லாத கிராமத்தில் பிறந்து, வறுமை நிலையிலும் தொடர் உழைப்பால் இன்று உலகத்தையே உற்றுநோக்க வைத்துள்ள தங்க மங்கை கோமதி, சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் வழிகாட்டியபடி முன்னேறுகிறார்!

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்