நான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல

By அஜீத் பிள்ளை

ஒருவர் மீது படும் அதீத ஊடகவெளிச்சம் சில வேளைகளில் மோசமான விளைவுகளையும் உருவாக்கும் என்பதற்கு உதாரணம் நஸ்ரினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கை.

நஸ்ரினுக்கு 13, 14 வயது இருக்கலாம். ஆனால் அவளது மெலிந்த உடலோ 11 வயதுப்பெண் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும். குழந்தைப் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளர்களைத் தேடி காமாத்திபுராவில் உள்ள சுக்லாஜி தெருவில் அலைந்து கொண்டிருந்தவள் அவள். வாடிக்கை கிடைக்காதபோது இரவு உணவுகூட கிடைக்காமல் தூங்கப்போன நாட்கள் உண்டு. இந்தத் துயரங்களுக்கு கூட்டுச் சேர்க்கும் வகையில் அவள் ப்ரவுன் சுகர் போதை அடிமையும்கூட. மாற்றத்திற்கே வாய்ப்பில்லாத அவளது பரிதாப வாழ்வில் வேகவேகமாக சில விஷயங்கள் நடந்து, அவளுக்குக் கொஞ்சம் நிவாரணத்தையும் அளித்தன.

மகிழ்ச்சியான மறுவாழ்வு

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்பவர்களின் போதை அடிமை நிலைமை குறித்து சயீத் மிஸ்ரா ஒரு ஆவணப்படத்தை எடுத்தபோது அவரது குழுவினர் நஸ்ரினைச் சந்தித்தனர். அவளது அவலநிலையைப் பார்த்து போதைப் பழக்கத்தையும், பாலியல் தொழிலையும் விட விருப்பமா என்று சயீத் மிஸ்ரா கேட்டார். நஸ்ரின் ஒப்புக்கொண்டாள். கட்டணம் செலுத்த இயலாத போதை அடிமைகளுக்கு உதவும் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் நஸ்ரின் சேர்க்கப்பட்டாள்.

அங்கேதான் நான் அவளை முதலில் சந்தித்தேன். குழந்தைத்தனமான ஏதோ ஒரு பண்பு என்னை உடனடியாக அவளிடம் ஈர்த்தது. அவளது குறும்புப் புன்னகை யாரையும் நெகிழவைத்துவிடும். அந்த மறுவாழ்வு மையத்தில் உள்ள மற்ற நோயாளிகளும் அப்படித்தான் அவளால் ஈர்க்கப்பட்டார்கள்.

காமாத்திபுரா தெருக்களில் அவளது அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொண்டபோதுகூட மிக மிக வெளிப்படையாக இருந்தாள். இந்த வெளிப்படைத்தன்மையும், முதிர்ச்சியான பேச்சும்தான் அந்த மையத்துக்கு வந்திருக்கக்கூடிய யாராவது ஒருவர் மூலம் ஊடகத்தினருக்குத் தெரிந்திருக்கக்கூடும். அருமையான ஹியூமன் இன்டரஸ்ட் ஸ்டோரியாக அவளது வாழ்க்கைக் கதை நிச்சயமாக பத்திரிக்கை ஆசிரியர்களைக் கவர்ந்திருக்கும்.

ஊடக வானில் நட்சத்திரம்

அவள் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் அம்பலப்படுத்துவதில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அவளைப் பற்றிய செய்திக்கட்டுரைகள் வரத் தொடங்கியபிறகு நானும் என் கடமையைச் செய்ய வேண்டியிருந்தது. நான் எழுதினேன். ஆனால் அவளது அடையாளத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை எனது ஆசிரியர்கள் வலியுறுத்திக் கேட்கவில்லை. ஆனால் பல பத்திரிகைகள் அப்படியான கவனத்துடன் இல்லை. ஒரு ஆங்கில வார இதழ், நஸ்ரினின் படத்தை அதன் அட்டையாகப் போட்டு அதன் விளம்பரங்கள் மும்பை முழுவதும் வெளியிடப்பட்டன. மரைன் டிரைவ் தொடங்கி பாந்திரா வரை ஹோர்டிங்குகளில் நஸ்ரின் வெறித்துப் பார்த்தாள்.

அடுத்தடுத்து அவளது நேர்காணல்களும் புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. சில வாரங்களிலேயே நஸ்ரின் குழந்தைப் பிரபலமானாள். அவளுக்கு உதவியளித்த சமூக சேவகர்கள்கூட ஊடக கவனத்தைப் பெறத்தொடங்கினர். திரைப்பட நட்சத்திரங்கள் நஸ்ரினை அழைத்துப் பரிசுகள் வழங்கினர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், மலர்கொத்துடன் வந்து அவளது மறுவாழ்வுக்கு உதவிகள் அளிப்பதாக உறுதி கூறினார். ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர்கள் உதவிசெய்ய ஆர்வத்துடன் இருந்தனர்.

புகழின் வெளிச்சத்தில்

இத்தனை கவனிப்புகளின் இடையே நஸ்ரின் தன்னையே ஒரு விஐபியாக நினைக்கத் தொடங்கினாள். அவமானத்தின் சித்திரமாகக் கள்ளமற்ற உள்ளத்துடன் இருந்த அந்தப் பெண் அகந்தை மிக்கவளாக மாறினாள். ‘நாளை அமிதாப் பச்சன்கூட சந்திக்க வரலாம்’ என்று என்னிடம் கூறினாள். அவள் ஏற்கனவே சுனில் தத்தையும், சஞ்சய் தத்தையும் சந்தித்திருந்தாள். “எல்லாரும் என்னைப் பார்க்க பெரிய, பெரிய காரில் வருகிறார்கள். உங்களிடம் ஏன் ஒரு கார் இல்லை?” என்று என்னிடம் கேட்பாள். அவளைப் பற்றி வந்த செய்திக் கட்டுரைகளால் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நஸ்ரினுக்கு ஆதரவு அலை கிளம்பியது. லண்டனிலிருந்து நைரோபி வரை, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் பணப்பைகளைத் திறந்து நன்கொடைகளை வாரி வழங்கினர். இந்தியாவுக்கு விடுமுறைக்கு வருபவர்கள் நஸ்ரினை அழைத்து ஆடம்பர உணவகங்களில் டின்னரும் மதிய உணவும் அளித்தனர். விலை உயர்ந்த துணிகள், ஷூக்கள், கேக், சாக்லேட், ஐஸ் க்ரீம் என்று வாங்கிக்கொடுத்தனர். நஸ்ரினுக்குக் கிடைத்த இந்தத் திடீர் அங்கீகாரம் அவளை ராணி என்று நினைக்கச் செய்தது.

அவளை வேடிக்கைப் பார்க்க வந்தவர்களின் வாழ்க்கையைவிட அவள் வாழ்ந்த கடினமான வாழ்க்கைதானே இதற்கெல்லாம் காரணம்? அவள் தெருக்களில் அலைந்துகொண்டிருந்த போது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

நான் அந்த மறுவாழ்வு மையத்தின் தன்னார்வலராக இருந்ததால், நஸ்ரினைப் பார்க்க வந்த ‘அங்கிள்கள் மற்றும் ஆண்டிகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒன்று இந்தச் சின்னப்பெண்ணுக்கு நெடுங்கால உத்தரவாதம் ஏதும் இன்றி உதவிசெய்யலாம். அத்துடன் பப்ளிசிட்டிக்கும் சாத்தியம் உண்டு. ஒரு புகைப்படம் அல்லது செய்தி வரும். இந்த உலகத்துக்குப் போதுமான அளவு திரும்பச் செய்யவில்லை என்ற குற்றவுணர்வால் ஆட்பட்டு நஸ்ரினுக்கு உதவுபவர்களும் உள்ளனர்.

கசந்த பழைய வாழ்க்கை

நஸ்ரின் தனக்குக் கிடைத்த கவனிப்பைக் கொண்டாட ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் அவளது நலம் விரும்பிகள், அவளது எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்கினர். ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக நஸ்ரின் வேலைக்குப் போக ஆலோசனை கூறினர். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மேல்தட்டுப் பிரபலங்களுடன் சேர்ந்து பழகிய பிறகு நஸ்ரினுக்கு அப்படியான வேலையில் சேர்வதற்கு விருப்பம் இல்லை. ஹைதராபாத்தில் உள்ள அவளது பெற்றோரிடம் கொண்டுபோய் விட சிலர் ஆலோசனை கூறினர். ஆனால் தனது குடும்பத்தினரைச் சங்கடப்படுத்த நஸ்ரின் விரும்பவில்லை. அவளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் ஆலோசனைகள் எழுந்தன. ஆனால் அந்தச் சிறுமியோ பள்ளிகளையே வெறுத்தாள். தெருக்களில் சுதந்திரத்தை ருசித்த அவள் எந்தவிதமான ஒழுங்குக்குள்ளும் வருவதற்கு விரும்பவே இல்லை.

ஒருகட்டத்தில் நஸ்ரினுக்குக் கிடைத்த போற்றுதலும், ஆதரவும் வெளிரத்தொடங்கின. சிலர் அவளைப் பற்றித் தவறாகப் பேசத்தொடங்கினர். பிற போதை அடிமைகளின் பெற்றோர்கள் அந்த இல்லத்துக்கு வரும்போது, நஸ்ரினிடம் அவளது முந்தைய அனுபவங்கள் பற்றி மோசமான கேள்விகளைக் கேட்டனர். நஸ்ரின் தனிமையாகவும், பாதுகாப்பற்றவளாகவும் உணரத்தொடங்கினாள். அதை அவளது உடல்பாவத்திலேயே உணரமுடியும். “அங்கிள், இந்த உலகம் என்னுடைய உலகம் அல்ல” என்று ஒருமுறை என்னிடம் சொன்னாள்.

அவளைப் பொருத்தவரை, அனைத்து ஊடகக் கவனமும் அர்த்தமற்றதாகிப் போனது. “தெருவில் அவர்கள் எனது உடலைச் சுரண்டினர். இங்கே எனது வாழ்க்கையைச் சுரண்டுகிறார்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் ஒன்றும் முட்டாள் அல்ல” அவள் எத்தனை உள்ளுணர்வு உள்ளவள் என்பதை உணர்ந்தேன்.

சாமர்த்தியமான சிறுபெண்ணாக பல சீராட்டல்களையும் அனுபவித்த அந்தப் பெண், தன்னைப் பராமரிப்பவர்களுக்கே சுமையாகிப் போனதை உணரத்தொடங்கினாள். வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்து யாரோ ஒருவர் வீட்டில்- அவர்கள் எத்தனை பணக்கார்ராக இருந்தாலும்- பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கவோ, உணவு சமைக்கவோ விரும்பவில்லை என்று சொன்னாள். பள்ளிக்குப் போகவும் அவளுக்கு விருப்பமில்லை. அங்கே யாரோடும் தன்னால் ஒட்டமுடியாது என்று கூறினாள். “அங்கிள், நான் தெருவுக்கு விற்கப்பட்ட ஒன்றுமறியாத பெண். நான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல” என்றாள்.

பயணம் முடிந்தது

இந்த உரையாடல் நடந்து சில நாட்களில் நஸ்ரின், மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பித்துவிட்டாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். அவளது இருப்பிடத்தைத் தேட சில முயற்சிகளும் நடந்தன. மும்பையில் ஒருவரைத் தேடுவது மிகவும் சிரமம். நஸ்ரின், தனது தரகனிடமே மீண்டும் போய்விட்டிருக்கக் கூடும் என்ற ரீதியிலும் விசாரிக்கப்பட்டது. ஆனால் அவனோ காமாத்திபுராவிலிருந்து வெளியேறி புறநகர் பகுதிக்குக் குடியேறியிருந்தான்.

மறுவாழ்வு மையத்தில் நஸ்ரினை மறந்தே போனார்கள். மாதங்கள் கழிந்தன. நஸ்ரின் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. காவல்துறையினர் அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தனர். நஸ்ரினின் உடலை அடையாளம் காண மறுவாழ்வு மையத்துக்குத் தகவல் தரப்பட்டது.

நஸ்ரினின் உடல் ஜூகுவில் உள்ள கூப்பர் மருத்துவமனையின் பிணவறையில் இருந்தது. புழுக்கமான மாலையில் மறுவாழ்வு மையத்தின் மருத்துவரும் நானும் அந்த சிறுபெண்ணின் பாதியளவு கருகியிருந்த உடலைப் பார்த்தோம். அவளது கள்ளமற்ற புன்னகை இன்னும் என் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் பாம்பேயில் உள்ள சுடுகாட்டுக்கு அவளது உடலை எடுத்துச் சென்ற நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது. எல்லாமே அவசர அவசரமாக நடந்தது. அவளது உடலைப் போர்வையால் மூடினோம். புதிதாக வெட்டப்பட்ட குழியில் அவளது உடலை இறக்கினோம். கையளவு மண்ணை எடுத்து உள்ளே போட்டோம், நஸ்ரினின் பயணம் முடிந்தது.

அவளது மரணம் பற்றி ஒரு ஊடகமும் செய்தி எழுதவில்லை.

பத்திரிக்கையாளர் அஜீத் பிள்ளை எழுதிய Off The Record, Hachette Inida புத்தகத்தில் இருந்து.

ஆதாரம்: >thehoot.org

தமிழில்:ஷங்கர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE