அன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா

By பாரததேவி

மாப்பிள்ளைக்குப் பட்டுக்கரையிட்ட வேட்டி. லேசான மஞ்சள் நிறம் கலந்த சட்டை. கையில் கல்யாணத்தன்று கட்டிய காப்புக் கயிறு. அடர்ந்த முடியில் ‘சேக்’ ஒதுக்கி நெற்றியில் ‘கிளிராமம்’ போட்டிருப்பார்கள். லேசாக எண்ணெய் தடவியதில் மீசை கருகருவெனக் கம்பீரமாக இருக்கும். உடம்பில் சந்தனப்பூச்சு.

மாப்பிள்ளை தன் தோழரோடு நிமிர்ந்தவாக்கில் நடக்க, புதுப்பெண் தன் தோழிகளோடு தலைகுனிந்து நடப்பாள். அவளின் வலதுகையில் புதுக் குத்துவிளக்கு இருக்கும். இடக்கையோ பசுவின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்திருக்கும்.

தூது போகும் காற்று

மறுவீடு போகும் பெண்கள் தங்களோடு கோமாதாவையும் கூட்டிப்போக வேண்டும். வசதியில்லாதவர்கள் சிறு பசுங்கன்றை அனுப்பிவைப்பார்கள். புதுச் சோடிகள் கூட்டத்தோடு கூட்டமாகப் போனாலும் அவர்கள் பார்வைகள் அடிக்கடி ரகசியமாக மோதி, தங்களுடைய ஆசைகளை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக்கொள்ளும்.

இவர்களின் காலடியில் கிழக்கு வானிலிருந்து புறப்படும் நிலவு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டே போக, மரங்களின் இலைகளினூடாக அலையும் காற்று இவர்களுக்காகத் தூது போகும்.

புது மணமக்களை ஆரத்தி எடுத்து வரவழைத்துப் பின் அவர்களுக்குண்டான சம்பிரதாயங்களையெல்லாம் செய்துவிட்டு அதன் பிறகு எல்லோரும் அங்கேயும் விருந்து சாப்பிடுவார்கள். பிறகு எல்லோருக்கும் பலகாரங்களையும் வெற்றிலைப் பாக்கையும் ஓலைக் கொட்டானில் வைத்துக் கொடுப்பார்கள். மறுவீட்டுக்கு வந்தவர்கள் யாரும் போகாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

சினிமாவால் உதித்த ஆசை

துரைச்சாமிக்குக் கோபமென்றால் அப்படியொரு கோபம். அவன் அமுதாவின் கழுத்தில் தாலி கட்டிய நாளில் இருந்து இந்தச் சந்திப்புக்காக மூன்று மாதமாக அல்லவா காத்திருக்கிறான். அதிலும் அவன் அடிக்கடி தன் நண்பர்களோடு இரண்டாவது ஆட்டமாக சினிமாவுக்குப் போய் அதைப் பார்த்துப் பார்த்துத் தன் மனத்துக்குள் ரொம்ப ஆசையை வளர்த்திருந்தான். எந்தப் புதுப்படம் வந்தாலும் போய்விடுவான்.

அவன் ஊரிலிருந்து அஞ்சு கிலோ மீட்டர்வரை டவுனுக்கு நடக்க வேண்டும் என்பதால் ஊரிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிடுவான். ஆறு மணிக்கு இவன் போய்ச் சேரும்போது படம் ஆரம்பித்துவிட்டிருக்கும். அதனால் முதல் காட்சி முடிந்ததும் அப்படியே இரண்டாவது காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் வருவான். அவன் ஊர் வந்து சேரும்போது விடியல் ஆரம்பித்துவிடும்.

இப்படி அடிக்கடி சினிமா பார்ப்பதால் அவனுக்குள் தான் ஒரு கதாநாயகன் என்ற நினைப்பு ஆழமாகப் பதிந்திருந்தது. கதாநாயகன், கதாநாயகியை அடிக்கடி தூக்கித் தலைக்கு மேல் சுற்றுவதைப் பார்த்துப் பார்த்துத் தானும் அப்படிச் செய்ய வேண்டுமென்று அவனுக்கு ஆசை வந்திருந்தது.

மணமக்கள் அலங்காரம்

அந்த ஏக்கத்திலேயே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு இப்போது கல்யாணமும் முடிந்து விட்டது.மூன்று மாதம்வரை மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டதில் ஆளே ஒரு சுற்றுப் பெருத்துப்போனான். இன்று மறுவீடு என்பதால் பட்டுக்கரை வேட்டியும் பட்டுக்கரைத் துண்டுமாக ஆள் ரொம்ப ஜோராக இருந்தான்.

தலையைச் சீவி நெற்றிக்கு முன்னால் சுருட்டிவிட்டிருந்தான். பொழுதுக்கும் வெயிலில் வேலை செய்ததில் கையெல்லாம் சொண்டேறியிருந்தது. அது அவன் பெண்டாட்டிக்குத் தெரியக் கூடாது என்பதால் இரண்டு கைகளிலும் லேசாக எண்ணெய் தேய்த்துவிட்டிருந்தான்.

அமுதாவுக்குத் தன் புருஷன் துரைச்சாமியைப் பார்க்கப் பார்க்க பவுசு பொறுக்க முடியவில்லை. மூக்கும் முழியுமா எம்புட்டு அழகா இருக்காரு; அவருக்குப் பொருத்தமா நம்மளுமில்ல இருக்கணும் என்று நினைத்தவள் ஒரு செறட்டை (கொட்டாங்குச்சி) நிறைய கரம்பையும் மஞ்சளையும் அரைத்துக்கொண்டுபோய் குளத்தில் முழுகி நன்றாகக் குளித்துவிட்டு வந்தாள். இதனால் அவள் முகம் மஞ்சளாக மின்னியது.

‘கும்மிருத்தி’ சேலையை எடுத்து அடுக்குக் கொசுவம் வைத்துச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். கைக்கடங்காத கூந்தலை மரச் சீப்பால் வாரிப் பெரிய கொண்டையாகப் போட்டுக்கொண்டாள். மலரத் துடித்துக்கொண்டிருந்த பிச்சிப்பூவை வளைத்துக் கொண்டையில் செருகினாள். செந்திருக்கம் பொட்டை எடுத்துக் கண்ணாடி பார்த்து நடு நெற்றியில் அழகாக வைத்தாள்.

கைநிறைய வளையல், காலில் முத்துக்கொலுசு, வாயில் வெற்றிலைச் சிவப்பு, ஒரு கையில் குத்துவிளக்கும் மறுகையில் பசுவுமாகக் கூட்டத்தோடு நடந்தாலும் துரைச்சாமியும் அமுதாவும் ஓரக் கண்ணால் அடிக்கடிப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அவர்களுக்குள் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாலைக் காற்றும் சுகமாக வீசியது.

ஆசையால் விளைந்த பலன்

இரு சாமம் கடந்து எல்லோரும் ஒவ்வொருவராகப் போனார்கள். இருந்த சிறிய கூரை வீட்டுக்குள்ளேயே இவர்களுக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் சுற்றிலும் தானிய மூடைகளும் பெட்டிகளும் சட்டிகளுமாக நிறைந்திருந்தன. அதோடு பெரிய அம்மியும் திருகையும் வேறு கிடந்தன.

ஆனாலும், இவர்களுக்குப் புதுப் பாய் விரித்திருந்தார்கள். அதோடு பழைய துணிகள் பொட்டலமாகக் கட்டித் தலையணையாக வைக்கப்பட்டிருந்தன. அங்கேயிருந்த மாடக்குழியில் ஒரு கைவிளக்கு மட்டும் காற்றுக்கு ஆட்டம்போட்டவாறு மெல்லிதாய் எரிந்துகொண்டிருந்தது.

பாலும் பழமும் கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்போது இல்லை. துரைச்சாமி அமுதாவுக்காகப் பரபரப்போடு காத்துக்கொண்டிருக்க, பூவும் பொட்டும் பட்டுச் சேலையுமாக அமுதா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அதுவரையில் தன் ஆசையைப் பொறுத்துக்கொண்டிருந்தவன், “அமுதா உன்னைப் பார்த்தா இப்ப எப்படி இருக்கு தெரியுமா? சினிமாவுல வர கதாநாயகி கணக்காவில்ல இருக்க” என்று சொல்லவும் அமுதாவுக்கு வெட்கம் பிடுங்கியது. “நீர் மட்டும் என்னவாம்? சினிமாவில வர கதாநாயகன் கணக்கா அழகா இருக்கீரு. என் கண்ணே பட்டுவிடும் போலுக்கோ” என்றாள் சிணுங்கலுடன். “எனக்குப் பொண்டாட்டியா வாரவளைத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு கையாலயும் கிருகிருன்னு சுத்தணுமின்னு ஆசையா இருக்கு.

உன்னைத் தூக்கிச் சுத்தட்டுமா?” என்று கேட்க அவள் ‘‘போரும்’’ என்று வெட்கத்துடன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே விருட்டென்று அவளைத் தலைக்கு மேல் தூக்கிச் சுற்றினான். அமுதா ஏற்கெனவே கனத்த பொம்பிளை. இதில் பட்டுச்சேலை வேறு உடுத்தியிருந்ததால் அவன் கையிலிருந்து வழுக்கி அங்கேயிருந்த திருகையில் போய் விழுந்தாள்.

அவனுக்குத் தோளில் பலத்த அடி. அமுதாவுக்கோ இடுப்பே ஒடிந்துவிட்டது. அவள் அந்நேரத்துக்குப் போட்ட கூப்பாட்டைக் கேட்டு எல்லோரும் வந்துவிட்டார்கள். அவள் இடுப்பைப் பார்த்த வைத்தியர் ஒரு பெரிய கட்டைப் போட்டு இவள் மூன்று மாதத்துக்கு அசையக் கூடாது; படுக்கையில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இருவருக்கும் மயக்கமே வந்துவிட்டது.

(நிலா உதிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்