பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும் பெண்ணுரிமைக்காகவும் நூற்றாண்டு காலமாக இயக்கம் நடத்தப்பட்டுவரும் மாநிலம் தமிழகம். இந்த வரலாற்றுப் பின்னணியில் பொள்ளாச்சி வன்கொடுமைச் சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்துத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் உரையாடியதிலிருந்து…
பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள்?
சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது பிறவிபேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் முதல்கொள்கை. பிறவிபேதம் என்பதில் சாதி ஒழிப்பு ஒரு அம்சம். மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள் அதன் காரணமாகவே அடிமையாக இருக்க வேண்டும் என்ற அமைப்பை மாற்ற வேண்டும் என்பது மற்றொரு அம்சம். பெண்கள் இப்போது படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறார்கள். மறுமணம், மணவிலக்குப் பெற்றவர்கள் மீண்டும் மணம்புரிதல், லிவிங் டுகெதர் (கூடி வாழ்தல்) என்ற வகையிலே அது வளர்ந்திருக்கிறது.
பொள்ளாச்சி வன்கொடுமைச் சம்பவங்களில் காவல் துறை நடவடிக்கை பற்றி விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?
பொள்ளாச்சி மாநகரம் கிடையாது. ஒரு சிறுநகரம். கண்காணிக்காமல் விட்டது தவறு. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதை ஒரு வியாபாரமாகவே செய்துவந்திருக்கிறார்கள். சைபர் கிரைம் என்று காவல் துறையில் ஒரு பிரிவு இருந்தாலும்கூட அரசையும் ஆட்சியாளர்களையும் விமர்சிக்கிறார்களா என்பதைத்தான் அவர்கள் கண்காணிக்கிறார்கள். பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இந்தச் செயல்கள் நடந்திருக்கின்றன.
துப்பறியும் துறை என்னதான் செய்தது? இன்டெலிஜென்ஸ் என்ற நுண்ணறிவுப் பிரிவின் வேலையே இதுபோன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதுதானே? அரசியல் எதிரிகளைக் கண்காணிப்பதுதான் தங்கள் வேலை என்று நினைக்காமல் சமூக விரோதிகளைக் கண்டறிய வேண்டும் என்பதையும் அவர்கள் தங்களது கடமையாக நினைக்க வேண்டும். காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகத்தான்.
அரசியல் தலைவர்களின் அந்தஸ்தைக் காட்டுவதற்காக வழிநெடுக வரிசையாக நிற்பதற்கு அல்ல. டெல்லியில் நிர்பயா வழக்கு நடந்தபோது அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டது. குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலவில்லை. ஆனால், தமிழக அரசோ நடந்ததை மூடி மறைக்கத்தான் முயல்கிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் இதைப் பற்றி யாருமே பேசக் கூடாது என்பதுபோல நடந்துகொண்டிருக்கிறார்.
திருப்பூரில் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தபோது ஒரு பெண்ணைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் அவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் காவல் துறையிலே அடுத்த நிலைக்குப் பதவிஉயர்வு கொடுத்திருக்கிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவங்களுக்கு முக்கியக் காரணமே செல்போனும் சமூக ஊடகங்களும்தான் என்று கூறப்படுவது பற்றி…
நவீன மின்னணுவியல் வளர்ச்சி எவ்வளவு நன்மைகளைத் தந்திருக்கிறதோ அதே அளவுக்குக் கேடாகவும் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதற்காக நாம் அவற்றைக் கைவிடவும் முடியாது. கத்தி என்றால் காய்கறியும் நறுக்கலாம், கொலையும் செய்யலாம் என்பதுபோல எல்லாவற்றிலுமே இரண்டு பக்கங்கள் உண்டு. இதிலும் இப்படித்தான்.
மின்னணுவியல் வளர்ச்சியை சமுதாய முன்னேற்றங்களுக்குப் பயன்படுத்தாமல் கேவலமான இழிதகையான செயல்களுக்குப் பயன்படுத்துவது நடந்திருக்கிறது. பெண்களை பிளாக்மெயில் செய்து, அவர்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். பொள்ளாச்சி சம்பவங்கள் மட்டுமே இன்றைக்கு வெளியே வந்திருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னால், காஞ்சிபுரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தபோதே எல்லோரும் கண்டித்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை வந்திருக்காது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அவர்கள் அணியும் ஆடையும் ஒரு காரணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே…
இதைவிடவும் பிற்போக்குத்தனமான வாதம் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது. பெண்களின் ஆடையைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆண்களின் ஒழுக்கக்கேட்டை மறைப்பதற்குப் பெண்களின் மீது பழிபோடும் ஆணாதிக்கச் சிந்தனை இது. உண்பது எப்படி ஒருவரின் உரிமையோ அதுபோலத்தான் உடுப்பதும். அணியும் ஆடை என்பது கண்ணியமாக இருக்க வேண்டும். கண்ணியம் என்பதுகூட இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது.
ஒளிப்படத்தையோ வீடியோவையோ வைத்து ஒரு பெண் மிரட்டப்பட்டால், அதை அவர் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில், இப்படியொரு பிரச்சினை வந்தால் உடனே அவர்கள் பயந்து நடுங்கிவிடுகிறார்கள். அதனால்தான், அவர்களை மிரட்டுபவர்கள் எந்த எல்லைக்கும் தயாராகிவிடுகிறார்கள். குற்றம் நடந்திருப்பதைச் சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அப்படிச் சொன்னால் தங்களுக்குத் திருமணம் ஆகாதோ, குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் அவமானம் வருமோ என்று நினைக்கிறார்கள். இதுதான் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். துணிச்சலாக அதை அவர்கள் சொல்ல வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளிப்பதன் மூலமாக அவற்றைத் தடுத்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா?
உடனடியாகச் செய்ய வேண்டிய காரியங்களின்கீழ் தண்டனை வரும். ஆனால், தொலைநோக்குத் திட்டங்கள் என்று வருகிறபோது பாடத் திட்டங்கள், ஒழுக்க முறைகளைப் பற்றிய சிந்தனைகள் அத்தனையிலுமே மாற்றம் வர வேண்டும். பாலியல் கல்வி மட்டுமல்ல, ஆண்களும் பெண்களும் பழகுவதற்கும்கூடப் பயிற்சியளிக்க வேண்டும்.
விசாரணை, தண்டனை என்பதையெல்லாம் தாண்டி பெண்களைப் பாலினப் பண்டங்களாகப் பார்க்கும் பார்வை மாற வேண்டும். சட்டத்தின் மூலமாக மட்டுமே மனமாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அது ஓரளவுக்குத்தான் பயன்படும். மனமாற்றமும் சட்டமும் இணைந்தால்தான் பயன் இருக்கும்.
தொலைநோக்குத் திட்டங்களில் பாலியல் கல்வியும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் அல்லவா?
படிக்கும்போதும் பழகும்போதும் ஆண் வேறு, பெண் வேறு என்று எந்த அளவுக்குத் தடுத்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தடைகளை உடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே இளம் வயதில் வரும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் இளம்வயதில் இயல்பாகத்தானே பழகுகிறார்கள். அவர்கள் அனைவருமே தப்பாக நடந்துகொள்கிறார்களா என்ன? இருபால் தோழர்கள் பழகுவதற்கு ஏற்றவகையில் பாலினக் கல்வியைக் கொடுக்க வேண்டும்.
மணியம்மையின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆண்டு முழுவதும் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறீர்களே; அது என்ன மாதிரி பிரச்சாரம்?
மகளிருக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவர்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. உதாரணத்துக்கு, பட்டுச் சேலைகளுக்கும் நகைகளுக்காகவும் சண்டை போடுகிறவர்களாகத்தான் இன்னமும் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தங்களுக்கு இருக்கும் சொத்துரிமையைப் பற்றித் தெரியவில்லை. அதைப் போல், ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தையும் முன்னெடுக்க இருக்கிறோம்.
ஏற்பாட்டுத் திருமண முறைகளை ஏற்க மாட்டோம் என்பதுதான் அதன் முழக்கம். உடனே, குடும்ப முறையைக் கெடுக்கப்போகிறார்கள் என்று சிலர் எதிர்க்கவருவார்கள். 18 வயதில் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது என்றால் 21 வயதில் அவர்களாகவே ஏன் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது? பெற்றோர்கள் வழிகாட்டலாம்; தடையாக இருக்கக் கூடாது.செல்வ புவியரசன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago