வீதிக்கு வீதி விருதுகள் வழங்கப்படும் வேளையில் தகுதியானவர்களுக்குக் கிடைக்கும் விருது, அது வழங்கப்படுவதன் நோக்கத்துக்கு நியாயம் சேர்த்துவிடுகிறது. மகளிர் தினமான மார்ச் 8 அன்று கண் மருத்துவர் சுஜாதா மோகனுக்கு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது அப்படியான நியாயத்தைச் செய்திருக்கிறது.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை சுஜாதா மோகன், ஒரு மீன் குஞ்சு. தாத்தா, அப்பா இருவரும் மருத்துவர்கள் என்பதால் நதிவழிப்படுகிற நீர்போல் சுஜாதாவும் மருத்துவத் துறைக்குள் நுழைந்தார். இவரது பயணம் நீரோட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறைந்தது இல்லையென்றாலும்கூட தான் செல்கிற வழியெல்லாம் செழிப்பை விதைக்கத் தவறவில்லை இவர். இந்தியச் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலேயே மருத்துவப் பணியைத் தொடங்கியவர் சுஜாதாவின் தாத்தா சடகோபன். தான் வசித்த நெல்லிக்குப்பம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தன்னால் இயன்ற அளவுக்கு மருத்துவ சேவை புரிந்திருக்கிறார். “அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் மருத்துவம் பார்க்க என் தாத்தா கிளம்பிவிடுவார் என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். போக்குவரத்து வாகனங்கள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நடந்து சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப்பை இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு வாங்கி அதன் மூலம் கிராமங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்” என்று தன் தாத்தாவின் மருத்துவ சேவை குறித்து வியந்து சொல்கிறார் சுஜாதா.
தாத்தாவைத் தொடர்ந்து சுஜாதாவின் தந்தையும் மருத்துவரானார். இவர்களது குடும்பத்தில் கிட்டத்தட்ட 40 பேர் மருத்துவத் துறையில் இருக்க, சுஜாதாவுக்கோ நியூட்ரிஷியன் படிப்பைத் தேர்ந்தெடுக்க ஆசை. மகளின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்காத தந்தை, மருத்துவப் படிப்புக்கும் விண்ணப்பிக்கச் சொன்னார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. “இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. இதை வீணாக்காதேன்னு சொல்லி அப்பா என்னை மருத்துவக் கல்லூரியில் சேரவைத்துவிட்டார்” எனச் சிரிக்கிறார் சுஜாதா.
மருத்துவ சேவை
மருத்துவப் படிப்புக்குப் பிறகு மேல் படிப்பில் கண் மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். சென்னை சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனையில் பண்புரிந்தபோது தன்னுடன் பணியாற்றிய மோகனைக் காதலித்து மணந்துகொண்டார். “அதன் பிறகு என் வாழ்க்கைக்கு வேறொரு வண்ணம் கிடைத்தது. காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு மக்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தைக் கண்ணுக்குக் கொடுப்பதில்லை. குறிப்பாக, ஏழை மக்களுக்குக் கண் பாதுகாப்பு குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. இதைப் பற்றி என் கணவர் மோகன் அடிக்கடி சொல்வார். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 18 ஆண்டுகளுக்கு முன் என் மாமனார் ராஜன் பெயரில் கண் மருத்துவமனையை சென்னையில் தொடங்கினோம்” என்கிறார் சுஜாதா.
அந்த மருத்துவமனையின் ஒரு அங்கமாக ‘சென்னை விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ அமைப்பை ஏற்படுத்தினார்கள். இதன்மூலம் சென்னையைச் சுற்றி 150 கி.மீ. பரப்பளவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று கண் சிகிச்சை அளித்துவருகின்றனர். “பார்வைக் குறைபாடு இல்லாத இந்தியா என்பதே எங்கள் நோக்கம். அதன் சிறு முயற்சியாக இந்த டிரஸ்ட் மூலம் ஏழைகளுக்குப் பார்வைக் குறைபாடு தொடர்பான சிகிச்சை அளித்துவருகிறோம்” என்கிறார் சுஜாதா. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகாமானோருக்குக் கண்புரை அறுவை சிகிச்சையையும் ஏழாயிரம் பேருக்கு விழிமாற்று அறுவை சிகிச்சையையும் கட்டணமில்லாமல் செய்திருக்கிறார்கள். 3,800 கண் பரிசோதனை முகாம்களை நடத்தி 10 லட்சம் பேரைப் பரிசோதித்திருக்கிறார்கள். இவர்கள் நடத்திவரும் ரோட்டரி ராஜன் கண் வங்கியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண் தானம் செய்திருக்கிறார்கள்.
பார்வை தரும் வாகனம்
தங்களது பணியில் ‘நேத்ரா வாகனா’வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக சுஜாதா குறிப்பிடுகிறார். கண் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் தேவையான பல்வேறு உபகரணங்கள் இந்த நேத்ரா வாகனத்தில் உண்டு. அவற்றோடு கிராமங்களுக்குச் செல்லும் வேன், கண் பரிசோதனையில் தொடங்கி கண்புரை நீக்கம்வரை அனைத்துக்கும் உதவுகிறது. இப்படியான பணிகளில் ஒரு அங்கமாக இருப்பதுதான், மத்திய அரசின் விருது கிடைக்கக் காரணம் என்கிறார் சுஜாதா. “வேறதையும்விடப்
பார்வை மிக முக்கியம் என்பதை அது கிடைக்கப் பெற்றவர்களின் முகங்களே உணர்த்திவிடும். சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட மனநலக் குறைபாடு கொண்ட ஒருவருக்குக் கண்புரை அகற்றும் சிகிச்சையைச் செய்தேன். பார்வை கிடைத்ததும் அந்த நபரின் மனநிலையில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை உணர முடிந்தது. அது அவரது வாழ்க்கையையே அழகாக்கிவிட்டது” என்கிறார் சுஜாதா மோகன்.
“உடலின் மற்ற உறுப்புகளைப் போல் கண் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. கண் புரையை மட்டும் ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிடலாம். மற்றவற்றைத் தொடர்ச்சியான கண் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். குழந்தைகள் டி.வி.க்குப் பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தால் அவர்கள் ஏதோ ஆர்வத்தால் அப்படி நிற்பதாகப் பலரும் தவறாக நினைத்துவிடுகிறார்கள். தொலைவில் நின்று பார்த்தால் சரியாகத் தெரியாததால்தான் பக்கத்தில் நிற்கிறார்கள். அதுபோல் பள்ளியில் கரும்பலகையில் எழுதியிருப்பது சரியாகத் தெரியவில்லை எனக் குழந்தைகள் சொன்னாலும் கண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இன்று பலரும் நீண்ட நேரம் கம்ப்யூட்டரையோ ஸ்மார்ட் போனையோ பார்க்கிறார்கள். அதனால் கண் உலர்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் கண்களைத் தேய்ப்பது தவறு. அதற்கெனக் கிடைக்கும் கண்ணுக்கான சொட்டு மருந்தைக் கண்களில் விடலாம். முட்டை, பச்சைக் காய்கறிகள், மீன், விட்டமின் ஏ, விட்டமின் டி நிறைந்த உணவு போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தாலே பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்” என்கிறார் சுஜாதா மோகன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago