அந்தத் தந்தைக்கு மல்யுத்தம் என்றால் உயிர். மல்யுத்தப் பயிற்சியாளரான அவர், தன்னைப் போல் தன் மகனைப் பார்போற்றும் மல்யுத்த வீரனாக்கக் கனவு கண்டார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்தனர். இதனால், தன் ஆசையை மூட்டை கட்டிவைத்துவிட்டுத் தொழிலில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.
ஆனால், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன? அவருடைய இரண்டு மகள்கள் குஸ்தி போடும்போது, அவர்களிடம் வெளிப்பட்ட மல்யுத்தப் பாணியைக் கண்டு அவர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.
தன் கனவுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடிவு செய்தார். தன்னுடைய மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுத்தார். இன்று அவரது குடும்பத்தில் மூன்று பெண்கள் முன்னணி மல்யுத்த சாம்பியன்கள்!
இந்திய மல்யுத்த விளையாட்டில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்கள் வேறு யாருமல்ல; ‘போகத் சகோதரிகள்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கீதா போகத், பபிதாகுமரி, ரிது போகத் ஆகிய மூவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள். அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்குவதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மகாவீர் சிங் போகத்தான் அந்தத் தந்தை. இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற ‘தங்கல்’ திரைப்படம், இந்தக் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது.
முடிவு செய்த தருணம்
ஹரியாணாவில் உள்ள பிஸ்வானி மாவட்டத்தில் பலாலி என்ற சிறு கிராமம்தான் போகத் சகோதரிகளின் சொந்த ஊர். ஏழை விவசாயியான அவர்களுடைய தந்தையின் ஒரே பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டு. மல்யுத்தப் பயிற்சியாளராகவும் மாறி அந்தக் கிராமத்திலிருந்த சிறுவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகள் பிறந்ததால், அவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பதைப் பற்றி மகாவீர் சிங் யோசித்ததுகூட இல்லை.
அது 2000-ம் ஆண்டு. சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்று தேசத்தின் மானம் காத்தார். நாட்டுக்காக ஒற்றைப் பெண்ணாக மல்லுக்கட்டி மல்லேஸ்வரி செய்த சாதனையைக் கண்ட மகாவீர் சிங், தன்னுடைய மகள்களால் ஏன் இதுபோன்ற சாதனை படைக்க முடியாது என்ற சிந்தனையில் மூழ்கினார். அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால், அவர்களுக்கு மல்யுத்தத்தின் மீது ஆர்வம் இருக்க வேண்டுமே என்று யோசித்தார்.
தடைகளைத் தாண்டி பயிற்சி
நான்கு மகள்களில் கீதாவும் பபிதாவும் மோதும் போது, அவர்களுக்குள் ஒளிந்திருந்த மல்யுத்தத் திறமை வெளிப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் மகாவீர். உடனே நால்வருக்கும் மல்யுத்தப் பயிற்சி வழங்குவது எனத் தீர்மானித்தார். அப்பாவின் முடிவுகுப் பிறகு கீதா, பபிதா, ரிது ஆகியோருக்கு மல்யுத்தப் பயிற்சி கட்டாயமானது.
பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தப் பயிற்சி வழங்குவதைக் கண்டு மகாவீர் சிங்கின் மனைவி கவுர் கொதித்துப்போனார். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கிராம மனநிலைக்கே உரிய கோபத்தைக் கணவரிடம் காட்டினார். முடியை வெட்டிக்கொண்டு, அரைகுறை உடையுடன் பெண் குழந்தைகள் சண்டையிட்டால், அவர்களுடைய எதிர்காலம் பாழாகிவிடும்;
அவர்களுடைய திருமண வாழ்க்கை தடைபடும் என்றெல்லாம் சொன்னார். அவர் மட்டுமல்ல; அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எல்லோருமே பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுப்பதைக் கேலி செய்தனர். முரட்டுச் சுபாவத்துடன் வளர்ந்து, எதிர்காலத்தில் பெற்றோருக்கு அவப்பெயர் வாங்கித்தருவார்கள் என சாபம்விடாத குறையாகப் பேசித் தீர்த்தார்கள்.
இடைவிடாத பயிற்சி
ஆனால், பெண்ணொருவர் பிரதமராக முடிந்த இந்திய நாட்டில், தன்னுடைய மகள்கள் மட்டும் மல்யுத்த வீராங்கனைகளாக முடியாதா என்று எதிர்க் கேள்வி கேட்டு ஊரார் வாயை அடைத்தார் மகாவீர். ஊராரின் பேச்சுகளையும் ஏச்சுகளையும் தாண்டித் தன் மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக அவர் மாற்றிக்காட்டினார். பயிற்சிக்காகத் தன் மகள்களை ஆண்களுடன் விளையாடவைத்தார்.
தினமும் அதிகாலை மூன்று மணி முதல் ஏழு மணிவரை பயிற்சி. பள்ளிக்கூடம் சென்றுவந்த பிறகு மாலையில் மீண்டும் பயிற்சி என ஒவ்வொருவரையும் கடும் பயிற்சி அளித்துச் செதுக்கினார். கிராமத்தில் வசதி குறைவு என்பதால், இந்திய விளையாட்டு ஆணையத்தில் பதிவுசெய்து, அருகே உள்ள சோனிபட்டுக்கு மேல்பயிற்சிக்காக மகள்களை அனுப்பிவைத்தார்.
தந்தையின் இடையறாத முயற்சி கைமேல் பலனைக் கொடுத்தது. முதல் இரண்டு பெண்களான கீதா போகத்தும் பபிதாகுமாரியும் 2009-ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் காலடி வைத்தார்கள். ஜலந்தரில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் 55 கிலோ எடைப் பிரிவில் கீதா தங்கப் பதக்கம் வென்று வெற்றிகரமாகப் பயணத்தைத் தொடங்கினார். அதே போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் பபிதாகுமாரியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் அக்கா - தங்கை இருவரும் பதக்கம் வென்று சாதித்தார்கள். அக்கா கீதா தங்கப் பதக்கம் வெல்ல, தங்கை பபிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை கீதா போகத்துக்குக் கிடைத்தது.
தந்தைக்குப் பெருமை
இருவருமே மல்யுத்தப் போட்டியில் தொடர்ச்சியாகப் பல பதக்கங்களைப் பெற்று தேசத்துக்கு மட்டுமல்ல, தன் தந்தைக்கும் பெருமை சேர்த்தார்கள். மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2012); காமன்வெல்த் போட்டியில் தங்கம் (2014, 2018), வெள்ளி (2010); ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2013); காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் (2009, 2011) என பபிதாகுமாரி பதக்கங்களை அள்ளினார்.
அவருடைய அக்கா கீதா போகத், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் (2012); காமன்வெல்த் போட்டியில் தங்கம் (2010); ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் (2012, 2015); காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் (2009, 2011), வெள்ளி (2013) ஆகியவற்றை வென்று மல்யுத்த விளையாட்டில் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்தார்.
மகாவீர் சிங்கின் மூன்றாவது மகளான ரிது போகத், காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கமும் (2016), ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் (2017) வென்று சகோதரிகளின் சாதனைப் பட்டியலில் சேர்ந்தார். கடைசி மகளான 20 வயது சங்கீதா போகத், சர்வதேச மல்யுத்தப் பயணத்துக்காகக் காத்திருக்கிறார்.
மகாவீர் அவருடைய மகள்களை மட்டும் மல்யுத்த வீராங்கனைகளாக வார்க்கவில்லை. தன் தம்பி ராஜ்பாலின் மகள்களான வினேஷ் போகத், பிரியங்கா போகத் ஆகியோரையும் வீராங்கனைகளாக மாற்றினார். தன் தம்பியின் மரணத்துக்குப் பிறகு அவர்களைத் தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டார்.
ஐவர் ஆதிக்கம்
இந்த ஐவரில் குறிப்பிடத்தக்கவர் வினேஷ் போகத். கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று தங்கம் உள்படப் பத்துப் பதக்கங்களை வென்றவர் அவர் . இவருடைய சகோதரியான பிரியங்கா போகத் தேசிய மல்யுத்த சாம்பியனாக வலம்வருகிறார்.
2016-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.
கீதா போகத், பபிதா குமாரி, ரிது போகத், வினேஷ் போகத், பிரியங்கா போகத் என ஐவருமே இந்திய மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். இவர்களை ‘போகத் சகோதரிகள்’ என மல்யுத்த உலகம் அழைக்கிறது. இந்தச் சகோதரிகளின் ஆதிக்கம் ஒலிம்பிக் வரையிலும் நீண்டது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் கீதா போகத் தகுதிபெற்று, ஒலிம்பிக்குக்குத்
தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். இதேபோல அவருடைய சகோதரி பபிதாகுமாரியும் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று முதல் சுற்றில் வெளியேறினார். வினேஷ் போகத், ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்று காலிறுதிவரை முன்னேறி, கால் முட்டி காயத்தால் வெளியேறி பதக்க வாய்ப்பை நூலிழையில் கோட்டைவிட்டார்.
நம்பிக்கை நாயகிகள்
ஒரு சாதாரணக் கிராமத்தில் ஏழை மல்யுத்த வீரருக்குப் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளும் அவருடைய தம்பி மகள்கள் இருவரும் இன்று இந்திய மல்யுத்தப் போட்டியின் முகங்களாக மாறியிருக்கிறார்கள். ஆண் வாரிசுகளை மட்டுமே வைத்து வாழ்நாள் லட்சியத்தை ஒரு தந்தை அடைய முடியும் எனக் காலங்காலமாக நம்பப்பட்டுவந்த கற்பிதத்தை இந்தச் சகோதரிகள் சுக்குநூறாக்கிவிட்டார்கள். தந்தையின் லட்சியத்தைப் பெண் வாரிசுகளாலும் வென்றெடுக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அந்த வகையில் போகத் சகோதரிகள் புதிய நம்பிக்கையைப் பெண்களிடம் விதைத்திருக்கிறார்கள்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago