தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதை இயல் பல மாற்றங்களைச் சந்தித்தது. தலித் பண்பாட்டு எழுச்சி, பெண்ணியச் சிந்தனையின் மறுமலர்ச்சி போன்ற சமூக விஷயங்கள் தமிழ்க் கவிதைக்குள்ளும் எதிரொலித்தன. கூற்றுமொழியும்கூட இதனால் மாற்றமடைந்தது. இவையெல்லாம் சாதகமான அம்சங்கள்தாம்.
இந்தத் தீவிரத்தன்மை அந்தக் காலகட்டக் கவிஞர்கள் பலரையும் பாதித்தது. இந்தத் தன்மை ஒரு பொதுப்போக்காகவே ஆனது. இதன் முடுக்கத்திலிருந்து விலகி, தனித்துவம் கண்டவர்கள் சிலரே. அவர்களுள் ஒருவர் கவிஞர் சே.பிருந்தா.
பிருந்தாவின் பெரும்பாலான கவிதைகள் பெண் என்னும் தன்னிலைக்கு அப்பாற்பட்டவை. மனித இனத்தின் பிரதிநிதியாகவே அவர் தன்னைப் பார்க்கிறார். இந்த நிலையில் மழையும் வண்ணத்துப் பூச்சிகளும் காற்றும் மனிதர்களும் கொண்ட புறவுலகுடன் அவர் நிகழ்த்தும் உரையாடல்தான் அவரது கவிதைகள் என வரையறுத்துப் பார்க்கலாம்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பே ‘மழை பற்றிய பகிர்தல்கள்’தான். தமிழின் தொடக்கக் காலக் கவிதைகள் வெளிப்படுத்திய தனி மன வெளிப்பாட்டின் தொடர்ச்சி எனத் தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றின் பின்னணியில் பிருந்தாவின் கவிதைகளை வகைப்படுத்தலாம்.
எளிய கனவு
மாறும் நிலக் காட்சிகள் வழியாகவே பிருந்தாவின் கவிதைகள் சூல்கொள்கின்றன. அது பயணமாக மட்டும் இருப்பதில்லை. நிலைத்த ஒரு காட்சியில் அசாதாரணமாக நுழையும் மழை, காற்று எங்கிருந்தோ கொண்டு வரும் வாசனை, திசைமாறிய வண்ணத்துப் பூச்சி போன்றவையே பிருந்தாவின் நிலத்தில் மாற்றங்களை விளைவிக்கப் போதுமானவையாக இருக்கின்றன. சில கவிதைகளில் மனிதர் களின் வருகை, அவர்களின் வாராமை மாற்றத்தை விளைவிக்கின்றன.
பழகிய வீட்டில் வெள்ளையடிப்பதால் மாறிவிட்ட காட்சியில் பிருந்தாவின் கவிதை ஒன்று ஓர் அசாதாரணத்தைக் கண்டுபிடித்துவிடுகிறது. இப்படியெல்லாம் அதிசயங்கள் நிகழாதபோது அவரது கவிதை ஒரு அசாதாரணத்தைக் கனவு காண்கிறது. ‘லெட்ஜரில் தொலைந்துவிட்ட/ என் பார்வையை மீட்க/ எவனாகிலும் வருவானா/ வாடிக்கையாளர் உருவில்?’ என்கிறது அவரது ஒரு கவிதை.
குழந்தைமைக் கவிதைகள்
எல்லாம் சரியாக இருக்கும் உலகில் கவிதைக்கு வேலை இல்லை என்பதை பிருந்தாவின் கவிதைகள் புரிந்து வைத்துள்ளன. அதேநேரம் அவை பூமி உருண்டையைப் புரட்டிவிடும் விநோதத்தை யும் விரும்புவதில்லை. நின்று எரியும் விளக்குச் சுடர், காற்றுக்கு ஆடினால் போதும். கவிதைக்குரிய இந்த விநோதத்துக்காக அன்றாடங்கள் மீது பிருந்தாவின் கவிதைகள் விழிப்புடன் வியாபித்துள்ளன.
பிருந்தாவின் கவிதை மொழி, எளிமையும் குழந்தைமையும் கொண் டது. சாதாரணத்தில் அசாதாரணத்தைக் கண்டுபிடிக்கக் குழந்தைமை அவசியமானது. எளிமை, வாசக நெருக்கத்துக்கு ஆதரவானது. பிரம்மாண்டமான படிமங்களை இவரது கவிதைகள் விரும்புவதில்லை. வண்ணத்துப் பூச்சி அளவு லேசான உவமைகளையே அவை விரும்புகின்றன.
பெண் என்ற தன்னிலையை முன்னிறுத்தி சில கவிதை களை பிருந்தா எழுதியிருக்கிறார். அவை தவிர்த்து எங்கும் இவரது கவிதை மூர்க்கத்தை வெளிப்படுத்தவில்லை. வடிவரீதியிலும் குழப்பமில்லாத கவிதைகளையே பிருந்தா விரும்புகிறார். ஆனால், மூன்றாவது தொகுப்பில் அவரது கவிதைகள் அதுவரை கைக்கொள்ளாத அடர்த்தியைச் சேர்த்திருக்கிறார்.
பெண் எனும் தன்னிலை
பிருந்தாவின் கவிதைகள் வெளிப்படுத்தும் தன்னிலை வெளிப்பாடு விசேஷமானது; துணிச்சலானதும்கூட. தனது விருப்பங்கள், தேர்வுகள், குடும்பம், வீடு எனக் கவிதையில் ஓர் ஆளுமை முழுமையாக வெளிப்பட்டுள்ளது. வாசகர்களைக் கவிதையுடன் நெருக்கம்கொள்ள இந்தப் பண்பு ஒரு காரணமாகிறது.
நட்சத்திரங்கள் மீதான அவரது தீராப்ரியம் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள், மனிதர்கள் மீதான கசகசப்பின் வெளிப்பாடு எனலாம். ஏனெனில் இரவின் நிசப்தத்தை அவரது கவிதைகள் அவ்வளவு விரும்புகின்றன. சமூக விதிகள், அரசியல், வாழ்க்கைப்பாடுகள் அற்ற ‘மொட்டைமாடி இரவை’ லட்சியமாகக் கொண்ட கவிதை ஒன்றையும் பிருந்தா எழுதியுள்ளார்.
‘கட்டுப்பாடுகள்/கோட்பாடுகள்/ குடை /எல்லாவற்றையும் விடுத்து வெளிவந்தேன்/மழை அரவணைத்தது’ என்கிறது அவரது ஒரு கவிதை. ‘நீ’ போன பிறகு நிலா நட்பானது என இன்னொரு கவிதை சொல்கிறது. புறவாழ்க்கைச் சுமைக்கு எதிரான நிலை என இந்த அம்சங்களைப் பார்க்கலாம்.
பெண் என்ற தன்னிலையில் புரட்சிகரமான கவிதைகளைப் பிருந்தா எழுதவில்லை. ஆனால், அதை அவரது கவிதைகள் பொருட் படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதேநேரம் பெண்ணியத்தை லட்சியமாகக் கொள்ளாத அவரது சில கவிதைகள் பெண் மனம் குறித்தான நுட்பமான பதிவாக வெளிப்பட்டுள்ளன.
உதாரணமாக, சமையல்காரர்கள் உறங்கிப்போன ஒரு கல்யாண மண்டபத்தைச் சித்தரிக்கும் ஒரு கவிதையில் ‘தூங்குகிற பெண்ணை எழுப்ப வேண்டும்/ நலுங்கு வைக்க’ என்ற ஒரு வரி வருகிறது. அழுகையைக் குறித்த கவிதையில் ‘உப்பு நீர்த் தாவரமாய் மாறிப் போனாய் நீ’ என்கிறார் பிருந்தா.
நிறைந்திருக்கும் ‘நீ’
பிருந்தாவின் கவிதை களுக்குள் ஒரு ‘நீ’ தொடர்ந்து வெளிப்படுகிறது. அவரது பெரும்பாலான கவிதைகள் இந்த ‘நீ’யை முன்வைத்து எழுதப்பட்டவையே. இந்த ‘நீ’, கவிதைகளுக்குள் இருக்கும் மற்ற உறவுகளைப் போல் சுமையில்லாமல் இருக்கிறது. ஒரு பரஸ்பரப் புரிதலில் விநோதமான உலகத்தை இந்த ‘நீ’யின் பொருட்டு கவிதை வியக்கிறது. ‘நீ’யின் அன்பு, விரலிடையில் வழிந்து அன்பின் ஆச்சரியங்களாக பிருந்தாவின் இந்தக் கவிதைகளுக்குள் பூத்துக் கிடக்கிறது.
பிருந்தாவின் இரண்டா வது காலகட்டக் கவிதையில் இந்த ‘நீ’யின் தன்மை மாறியிருக்கிறது. ‘நீ’ தீய்த்த வடுக்கள் மனசெங்கும்’ எனச் சொல்கிறது அவரது இரண்டாம் காலகட்டக் கவிதை ஒன்று. முதல் தொகுப்பு விரும்பிய தனிமையும் இதில் இல்லாமல் போகிறது. ஆனாலும், தனி மன வெளிப்பாடு என்ற நிலையில் பிருந்தாவின் கவிதைகள் அந்தப் பண்பைத் தொடர்கின்றன எனலாம்.
நீயும் உன் அழுகையும்
நீ அழ
பத்து நிமிடங்களே
தரப்பட்டிருக்கின்றன
நேரம் கிடைக்கும்போது மட்டுமே
உன் துக்கத்தை
அழவும்
அழுகையைச் சேமிக்கவும்
இன்னும் நீ பழகவில்லை
எல்லாம் புதிதாயிருக்கிறது
இந்த அழுகை
அழுகைக்கான காரணம்
எல்லாம்
உனக்கும் முந்தையவர்கள்
அழுகையைச் சிரிப்பாக வெளிப்படுத்துமளவு
முன்னேறியிருந்தார்கள்
நீ அழுகையை
அழுகையாகவே
அழுதுகொண்டிருந்தாய்
...உப்பு நீர்த் தாவரமாய்
மாறிப் போனாய் நீ
அழுகையில் தொடங்கி
அழுகையில் முடிவடைந்தன
உன் பொழுதுகள்
உன் அழுகையை மெச்சி
வரம் தருவாரோ கடவுள்?
தவம் போலிந்த அழுகை
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago