வண்ணங்கள் ஏழு 45: திருநங்கைகள் விற்பனைக்கல்ல!

By வா.ரவிக்குமார்

“எனக்கு மூன்று அக்கா, மூன்று அண்ணன். அப்பா, அம்மா இறந்ததும் எல்லோரும் தனித்தனியாக இருக்கிறார்கள். 13 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி மும்பைக்குப் போய்விட்டேன். அதன்பின் பெங்களூருவில் சில ஆண்டுகள் இருந்தேன். எங்கள் ஜமாத்தில் இருக்கும் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. குமரி மாவட்டம் முழுவதிலுமே இதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஒரு திருநங்கை தவறான செயலில் ஈடுபட்டால் அவளுடைய சமூகத்தையே அது கேள்விக்குள்ளாக்கும் என்பதால்தான் இந்த முடிவில் தீர்மானமாக இருக்கிறோம்” என்கிறார் தன் பெயரைப் போன்றே சிந்தனையைக் கொண்டிருக்கும் லவ்லி. இவர் குமரி மாவட்டத் திருநங்கைகள் ஜமாத்தின் தலைவிகளில் ஒருவர். இன்னொரு தலைவி, அபிநயா தேவி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்கசாமி - பார்வதி தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் இரண்டாவதாகப் பிறந்த குமாரை, பெண் குழந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில் வளர்த்தார் பார்வதி.

குமார் எட்டாவது  படித்தபோதே தன்னைப் பெண்ணாக உணர்ந்தார். தன்னுடைய பெண் தன்மையை வீட்டில் இருப்பவர்களுக்கு விளக்கிச் சொல்வதற்கான அனுபவமோ வீட்டில் இருப்பவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ இல்லாததால், அவரைப் போன்ற திருநங்கைகளுடன் மும்பைக்குச் சென்ற குமார், அபிநயாதேவியாக  மாறினார்.

புரிந்துகொண்ட தாய்

“அங்கே கடை கேட்பது, பதாய் (வீட்டு விசேஷங்களில் பாடி ஆடுவது, ஆசிர்வாதம் செய்வது)  போன்றவற்றைச் செய்தேன். அதன் பிறகு பெங்களூருவில் சில ஆண்டுகள் இருந்தபோது, சில படங்களில் நடித்தேன். ஆனால், தொடர்ந்து திருநங்கைகளைக் கேவலமாகச் சி்த்தரிக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அதனால், சொந்த ஊருக்கே வந்துவிட்டேன்” என்கிறார் அபிநயா.

மீண்டும் நாகர்கோவில் திரும்பிய அபிநயாவைக் குடும்பத்தில் பெரும் பாலானோர் எதிர்த்தனர். அம்மா மட்டும் அவரை ஏற்றுக்கொண்டார். இன்றைக்குக் குடும்பத்தோடு இணைந்து திருநங்கைகளுக்கான சமூகப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார் அபிநயா.

“நாகர்கோவிலில் இருக்கும் திருநங்கைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம். நானும் லவ்லியும் கன்னியாகுமரி மாவட்டத் திருநங்கைகள் சமூக ஜமாத் தலைவிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.  திருநங்கைகளுக்கு முதியோர் ஊக்கத் தொகை பெற்றுத்தருவதுடன் தையல் இயந்திரம் போன்றவற்றை நலவாரியம் மூலமாக வாங்கித் தந்துள்ளோம்” என்கிறார் அபிநயா. இந்தச் சங்கத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வையும் வழங்குகின்றனர்.

வழிகாட்டும் ஜமாத்

இவர்கள் குமரி மாவட்டத் ‘திருநங்கைகள் நலச் சங்க’த்தை முறையாகப் பதிவுசெய்து நடத்திவருகின்றனர். அரசு உதவியோடு 39 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டாக்களைப் பெற்றுத் தந்திருக்கின்றனர். 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றைப் பெற்றுத் தந்திருக்கின்றனர். சமூக நலத்துறை மூலமாகச் சிறு, குறு தொழில் செய்வதற்கான பயிற்சியை 20 திருநங்கைகளுக்கு அளித்து, தலா 20 ஆயிரம் ரூபாயைத் தொழில் தொடங்குவதற்கான மானியமாகப் பெறுவதற்கு உதவியிருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ஆடு வளர்ப்பது, புடவை வியாபாரம் எனப் பல தொழில்களைச் செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர்.

“எவ்விதமான வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் கடை கேட்கும் திருநங்கைகளைக் குமரி மாவட்டத்தில் பார்க்கலாமே தவிர, பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கையைப் பார்க்க முடியாது என்னும் நிலையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று சொல்லும் அபிநயா, திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மசோதாவைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் தங்கள் சங்கம் சார்பில் ஈடுபட்டுவருவதாகக் குறிப்பிடுகிறார்.

திருநங்கைகள் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திவிட்டு, அதன்பிறகு அரசு எந்த மசோதாவை வேண்டுமானாலும் கொண்டுவரட்டும் என்பதுதான் தங்களின் வலியுறுத்தல் என்கிறார்.

.Vannagal-2jpgபாலியல் தொழிலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் திருநங்கைகள்100

குரலுக்குக் கிடைத்த வெறுப்பு

“அதோ பாத்தியா அதுகிட்ட புடிச்சுக் கொடுத்துடுவேன் என்று என்னைக் காட்டிப் பயமுறுத்தி குழந்தைக்கு ஒரு பெண் சோறூட்டியதைப் பார்த்து வேதனைப்பட்டு அழுதிருக்கிறேன். ஒரு முறை பெங்களூருவுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். மகளிருக்கான பெட்டி அது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தோம்.  எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. என் அருகில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லோரும் என் குரலைக் கேட்டதும் எழுந்து நின்றுகொண்டனர். 

பெண்ணைப் போன்ற என் தோற்றத்தால் என்னோடு நெருங்கி அமர்ந்திருந்தவர்கள், என்னுடைய குரலைக் கேட்டதும் வெறுப்போடு ஒதுங்கினர். அந்த நிமிடமே இறந்துவிட மாட்டோமா எனத் தோன்றியது. அவர்களுக்குத் திருநங்கைகளைப் பற்றிய புரிதல் அந்த அளவுக்குத்தான் இருந்தது. இப்போது நிலைமை ஓரளவு மாறிவிட்டது. பெண்கள் எங்களிடம் இயல்பாகப் பழகுகின்றனர்” என்கிறார் அபிநயா.

சோகமும் மகிழ்ச்சியும்

“குடும்பத்தினரின் உதவி இல்லாமல் இருந்த காலத்தில், நான் திருநங்கை என்பதை அறிந்தும் என்னை ஒருவர் நேசித்தார். திருமணமும் செய்துகொண்டார். அவர் பக்கத்து ஊரில் இருந்தார். நாளடைவில் அவரால் எங்கள் திருமணத்தை அவருடைய குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி, சம்மதம் வாங்க முடியவில்லை. திருநங்கைகள் திருமணம் செய்துகொள்வதற்குச் சட்ட பூர்வமான வழிமுறைகள் இல்லாததும் எங்கள் மண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவதற்கு ஒரு காரணம்.

நமக்குப் பிடித்த தனிநபரின் புறக்கணிப்பைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தச் சமூகத்தின் புறக்கணிப்பை எப்படித் தாங்கிக்கொள்வது? அதிலிருந்து மீள்வதற்கு எங்கள் குமரி மாவட்டத் திருநங்கைகளின் ஒற்றுமையுடன் கூடிய செயல்பாடுதான் உதவியது.

எனக்கென்று யாரும் இல்லாத ஒரு நிலை இருந்தது. வாழ்க்கையின் மீதான பிடிப்பு  குறைந்துவரும் நேரத்தில், பாலைவனச் சோலையாகக் கிடைத்தான் ஜெயன். இப்போது இரண்டாம் வகுப்பு படிக்கிறான். என்னுடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் எல்லாமே அவன்தான்” என்கிறார் அபிநயா.

இந்த உலகில் இன்னொரு மனிதன் இருக்கும் வரையில் யாருமே ஆதரவற்றவர் இல்லை என்பதற்குத் தன்னளவில் நியாயம் செய்துவிட்ட திருப்தி வெளிப்படுகிறது அபிநயாவின் முகத்தில்.

vannam-2jpg100 

‘இல்கா’ மாநாட்டில் ‘கோபி’ ஆவணப்படம்!

vannamjpg

அனைத்துலக மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு உள்ளவர்களுக்கான இயக்கம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அதையொட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் மாற்றுப் பாலினத்தவருக்கான மாநாடு இம்மாதம் 17 முதல் 22 வரை நடக்கிறது.

இதில் தெற்காசிய நாடுகளில் இடையிலிங்கத்தவரின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி மதுரை சிருஷ்டி தன்னார்வ இயக்கத்தின் நிறுவனர் கோபி ஷங்கர் கலந்துகொண்டு பேசவிருக்கிறார்.

மாநாட்டை நியூசிலாந்தின் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 140 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் கோபி ஷங்கர் குறித்து போர்த்துகீசிய மொழியில் வெளிவந்த ஆவணப்படமும் திரையிடப்படவிருக்கிறது.

 

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்