பக்கத்து வீடூ: என் கதை

By எஸ்.சுஜாதா

அமெரிக்காவைச் சேர்ந்த டேரி டுபெரால்ட் ஃபாஸ்பெண்டர் 11 வயதில் எதிர்கொண்ட மரண நிமிடங்களைக் கற்பனைகூட செய்ய முடியாது. அதிலிருந்து அவர் மீண்டுவந்த கதையைப் பின்னாளில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார். யார் இந்த டேரி? அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்கலாம்...

அமெரிக்காவில் என் அப்பா பிரபல கண் மருத்துவர். வார விடுமுறையை பஹாமாஸ் தீவில் கழிக்க முடிவுசெய்தோம். வசதியான சிறு கப்பலை வாடகைக்கு எடுத்தோம். இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தால், கப்பலிலேயே ஒரு வருடம் உலகத்தைச் சுற்றிவரலாம் என்று திட்டமிட்டிருந்தோம். கப்பல் கேப்டனாக அப்பாவின் நண்பரும் இரண்டாம் உலகப் போர் வீரருமான ஜூலியன் ஹார்வியும் அவருடைய புது மனைவியும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர்.

நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்தி ருந்த அந்த நாளும் வந்தது. பயணம் ஆரம்பித் தது. நிலப்பரப்பு வாழ்க்கையும் நீர்ப்பரப்பு வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்தன. ஐந்து நாட்கள் சந்தோஷமாகக் கழிந்தன.

அன்று இரவு நான் மட்டும் கப்பலின் கீழ்த்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று மேலே யாரோ ஓடுவதுபோலவும் வலியில் கத்துவதுபோலவும் கேட்டது. என் மனம் படபடத்தது. வேகமாக மேல்தளத்துக்கு வந்தேன். அங்கே என் அம்மாவும் அண்ணனும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அண்ணன் உதவி… உதவி… என்று அப்பாவை அழைத்துக்கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி ரத்தம் தோய்ந்த கத்தி கிடந்தது. அப்போது கேப்டன் ஹார்வி என்னை நோக்கி வந்தார். என்ன நடக்கிறது என்று கேட்டேன். கன்னத்தில் ஓர் அறைவிட்டு, கீழே போய் இருக்கும்படிச் சொன்னார்.

நான் பதில் பேசாமல் கீழே வந்தேன். சற்று நேரத்தில் கப்பலுக்குள் தண்ணீர் ஏற ஆரம்பித்தது. மீண்டும் மேல் தளத்துக்குச் சென்றேன். கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றேன். ஆமாம் என்று சொன்ன ஹார்வி, சட்டென்று சிறு படகில் ஏறி கப்பலுடன் பிணைத்திருந்த கயிற்றை விடுவித்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உயிர் காக்கும் மிதவையைக் கடலுக்குள் போட்டு ஏறிக்கொண்டேன்.

எனக்கும் கப்பலுக்கும் இடையிலான தொலைவு அதிகமானது. கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது. அம்மாவுக்கும் அண்ணனுக்கும் என்ன ஆனது என்பதைப் பார்த்துவிட்டேன். அப்பாவும் தங்கையும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மிகப் பெரிய கொடூரத்தைக் கண்ட எனக்கு, இந்தப் பரந்த கடலும் சில்லென்ற காற்றும் பயமுறுத்தும் இருளும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை.

மிகச் சிறிய மிதவை என்பதால் என் கால்கள் தண்ணீரில்தான் கிடந்தன. உயிர் பிழைப்பேனா? குடும்பம் இன்றி இனி என்ன செய்யப் போகிறேன்? எதற்காக ஹார்வி என் அம்மா வையும் அண்ணனையும் கொன்றார்? அப்பாவும் தங்கையும் என்ன ஆனார்கள்? அவர்களை இனி பார்க்க முடியுமா? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தோன்றிக்கொண்டே இருந்தன.

அதிகாலைச் சூரிய ஒளி பட்ட பிறகுதான் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். இரவுக்கும் பகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நேரம் செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்தது. நாக்கு உலர்ந்தது. பசி எடுத்தது. கதைகளில் வருவதுபோல் ஏதாவது கப்பல் வராதா, ஏதாவது தீவு தென்படாதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒன்றும் புலப்படவில்லை.

மூன்றாவது நாள் சற்றுத் தொலைவில் சிறு விமானம் பறந்து சென்றது. வார்த்தைகள் வரவில்லை. கையை இப்படியும் அப்படியும் அசைத்தேன். ஒன்றும் பலன் இல்லை. உடலில் நீர்ச் சத்து இல்லாமல் வெயிலில் கொப்புளங்கள் தோன்றின. உடல் தீயாகச் சுட்டெரித்தது. என் குடும்பத்தினரோடு சேர்ந்து மடிந்திருக்கலாம் என்று தோன்றியது.

84 மணி நேரம் தன்னந்தனியாக இந்தக் கடலில் உயிர் பிழைத்திருக்கிறேன் என்றால், அது நிச்சயம் கடல் அன்னையின் கருணையால்தான். எனக்கும் கடலுக்கும் எப்போதுமே நல்ல உறவு இருந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு கப்பல் வருவது தெரிந்தது. நம்பிக்கை வந்தது. மிகுந்த சிரமத்தோடு மிதவையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

சற்று நேரத்தில் கப்பல் அருகே வந்தது. பைனாகுலரில் பார்த்தவர்கள் என்னைப் படம் எடுத்தனர். மீட்டு கப்பலில் சேர்த்தனர். அதற்குப் பிறகு நினைவு தப்பிவிட்டேன்.  முதலுதவி அளித்து, கரைசேர்த்தனர்.

நான் கண் விழித்தபோது உறவினர்கள் சூழ, மருத்துவமனையில் இருந்தேன். என் னைக் காப்பாற்றிய கப்பல் கேப்டன் எடுத்த படம் செய்தித்தாள்களில் (பின்னர் லைஃப் இதழின் அட்டையிலும்) வெளியானது. மறுநாள் ஹார்வி ஒரு விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளிவந்தது.

என் உடலும் மனமும் தேறுவதற்கு நீண்ட காலம் ஆனது. என் உறவினர்கள் யாரிடமும் குடும்பத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என் பெயரையும் சற்று மாற்றிக்கொண்டேன். என்னதான் உயிர் பிழைத்தாலும் என்னுடைய மனத்தில் ஏற்பட்ட வலி சிறிதும் குறையவில்லை.

தூரத்தில் இருக்கும்போதே பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக உயிர் காக்கும் ஜாக்கெட்டும் மிதவையும் ஆரஞ்சு நிறத்துக்கு அமெரிக்கா முழுவதும் மாற்றப்பட்டது. பிறகு உலகம் முழுவதும் அது பின்பற்றப்பட்டது. என் மூலம் நிகழ்ந்த ஒரு நல்ல மாற்றம் இது.  

ஹார்வி ஏற்கெனவே இன்சூரன்ஸ் பணத்துக்காக, ஐந்து பெண்களைத் திருமணம் செய்து, கொன்றிருக்கிறார். ஆறாவது மனைவியை அழைத்துக்கொண்டு எங்களோடு பயணித்தார். அவரைக் கொல்லும்போது என் அப்பா பார்த்திருக்க வேண்டும். அதனால், அப்பாவைக் கொன்றிருக்கிறார். பிறகு அம்மா, அண்ணன், தங்கை என்று அனைவரையும் கொன்றுவிட்டார். என்னை மட்டும் ஏன் கொல்லாமல் விட்டுவிட்டார் என்ற கேள்விக்கு  என்னால் விடை தேட முடியவில்லை. நான் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கலாம்.

pakkathu-4jpgதற்பொழுது டேரி டுபெரால்ட்ஃபாஸ்பெண்டர்

ஹார்வி தான் வந்த கப்பல் நெருப்புப் பிடித்து மூழ்கிவிட்டதாகவும் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். பிறகு மனைவியின் இன்சூரன்ஸுக்காக அலைந்துகொண்டிருந்தபோதுதான் நான் பிழைத்த தகவல் அவருக்குக் கிடைத்திருக் கிறது. எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

11 வயதில் பாதிக்கப்பட்ட நான், அடுத்து 20 ஆண்டுகள் இந்தச் சம்பவத்தைப் பற்றி யாரிடமும் பேசவில்லை. படித்தேன். நீர்வளத் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு தொலைக்காட்சி நிறுவனம் என்னைக் காப்பாற்றிய கேப்டனுடன் சந்திப்பை ஏற்படுத்தியது. அப்போதும் நான் பெரிதாக எந்தத் தகவலையும் பரிமாறிக்கொள்ளவில்லை.

50 ஆண்டுகளுக்குப் பிறகும் ரணம் ஆறவில்லை. நான் பிழைத்ததற்கான காரணம் இருக்க வேண்டும். என்னுடைய துயரத்தை வெளியில் சொன்னால், இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துயரத்திலிருந்து நம்பிக்கையோடு வெளியே வரலாம் என்று தோன்றியது. ரிச்சர்ட் டி. லோகன் என் கதையை ‘Alone: Orphaned on the Ocean’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார்.  

என்னைப் பொறுத்தவரை ரணம் ஆறுவதற்குக் குறிப்பிட்ட காலம் என்று எதுவும் இல்லை. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ரணம் குறையவில்லை. இன்றுவரை ஒருவரை நம்புவதற்கு நான் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு, என்னுடைய ஆசிரியர்களும் நண்பர்களும் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டனர். நான் இறுக்கமானவளாகவே அறியப்பட்டிருந்தேன்.

இந்தப் புத்தகத்தை என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அர்ப்பணித்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாம், டாட்’ என்று எழுதியது இப்போதுதான். இன்றும் என் குடும்பம் நினைவுக்கு வந்துவிட்டால் கடல் அலைகளில் கால் நனைத்துவிட்டுத் திரும்புகிறேன்.

அன்புடன்

டேரி டுபெரால்ட்ஃபாஸ்பெண்டர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்