பக்கத்து வீடு: திருநங்கை என்பது பாலினம்… அடையாளமல்ல

By ச.கோபாலகிருஷ்ணன்

திருநங்கைகளை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளம். அவற்றுக்கு நடுவே அவர்களை மேன்மையாகச் சித்தரித்த படங்களும் உண்டு. ஆனால், இரண்டாம் வகைப் படங்களிலும் அவர்களைப் புனிதமானவர்களாகவோ தியாகிகளாகவோ காட்டியிருப்பார்கள்.

சமிபத்தில் ‘பேரன்பு’ திரைப்படத்தில் மீரா என்ற திருநங்கை கதாபாத்திரம்தான் படத்தின் முக்கியத் திருப்பு முனையாக அமைந்திருப்பதோடு இயற்கை பேரன்பானது என்ற படத்தின் ஆதாரச் செய்திக்கு உயிரளிப்பதாகவும் அமைந்துள்ளது. அந்தக் கதாபாத்திரம் மகாத்மாவாகவோ தேவதையாகவோ சித்தரிக்கப்படவில்லை. மற்றவர்களைப் போல் காதல், ஏக்கம், ஏமாற்றம், கோபம், பேரன்பு ஆகியவற்றைக்கொண்ட சாதாரண மனுஷிதான் மீரா. மீராவாகப் படத்தில் நடித்திருப்பவர், திருநங்கை அஞ்சலி அமீர்.

எது அடையாளம்?

இப்படி ‘திருநங்கை’ என்று குறிப்பிட்டுச் சொல்வதைக்கூட அஞ்சலி ஏற்பதில்லை. “நீங்கள் யாரிடமாவது உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் ஒரு ஆண்’ என்று சொல்லிக் கொள்வீர்களா? பத்திரிகையாளர் என்றுதானே சொல்வீர்கள். நடிகரைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு முறையும் அவரை ஆண் என்று குறிப்பிடுவீர்களா? எங்களை மட்டும் ஏன் திருநங்கை என்று அடையாளப்படுத்துகிறீர்கள்? அதுதான் எங்களது பாலினம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதுவே எங்களது அடையாளம் என்று சுருக்க வேண்டியதில்லையே. நாங்கள் செய்யும் தொழிலை வைத்துக்கூட எங்களை அடையாளப்படுத்தலாம்” என்கிறார். 

மறக்க முடியாத படம்

‘பேரன்பு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதைத் தன் வாழ்வின் முக்கியத் தருணமாகக் கருதுகிறார். “கேரளத்தைச் சேர்ந்த நான் முதலில் மாடலிங் செய்யத் தொடங்கினேன். அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மனோரமா தொலைக்காட்சியில் வந்த ஒரு ஆவணப் படத்தில் இடம்பெற்றேன். அதைப் பார்த்த மம்முக்கா (மம்மூட்டி) என்னை ‘பேரன்பு’ படத்துக்குப் பரிந்துரைத்தார். அதன் பிறகு சென்னையில் ஆடிஷன். 

‘ஸ்கிரீன் டெஸ்ட்’ எல்லாம் முடிந்து இந்தப் படத்துக்குத் தேர்வானேன். இதுதான் எனது முதல் படம். ஆனால், அதன் பிறகு நான் நடித்த ‘சுவர்ண புருஷன்’ (மலையாளம்) முதலில் வெளியாகிவிட்டது. ராம் சார் படத்தில் நடித்ததை என் வாழ்வின் மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். உலகில் வேறெதையும்விட அவர் சினிமா வைத்தான் காதலிக்கிறார். அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இனி எத்தனை படங்கள் நடித்தாலும் ‘பேரன்பு’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைக்கவே கிடைக்காது” என்கிறார் அஞ்சலி.

படத்தில் அவரது நடிப்புக்கான வரவேற்பைப் பற்றிக் கேட்டால் “எல்லோரும் பாராட்டினார்கள். குறிப்பாக, திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாராட்டினார்கள். இந்தப் படத்தில் என்னை ஒரு சாதாரண மனுஷியாகக் காட்டியிருந்தது அவர்களுக்குப் பிடித்திருந்தது” என்கிறார்.
 

இழிவாகப் பார்க்க வேண்டாம்

பொதுவாகத் திரைப்படங்களில் திருநங்கைகளை ஆதாயத்துக்காகவே பயன்படுத்துகிறார்கள் என்று விசனப்படுகிறார் அஞ்சலி. “அதற்கு மாறாக நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதை ஆழமாகப் பிரதிபலித்த படம் ‘பேரன்பு’” என்கிறார். இந்தப் படத்தில் திருநங்கையின் காதல்  கண்ணியமாகவும் இயல்பானதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருநங்கைகள் காதலிப்பது, அவர்களை மற்றவர்கள் காதலித்து வாழ்க்கைத் துணையாக ஏற்பது ஆகியவை பற்றிய பார்வை மாறும் என்று குறிப்பிட்டபோது,  “திருநங்கைகளைக் காதலிக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்து விலகிவிடுகிறார்கள்.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தவிர நாங்களும் பெண்கள்தாம். இந்தச் சமூகம் எங்களுக்கு வாழ்க்கை அளிக்கக்கூட வேண்டாம். வாழ்வதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு இருக்கின்றன. வாழவிட்டால் போதும். எங்களை இழிவாகப் பார்ப்பதைக் கைவிட்டால் போதும்” என்கிறார் அஞ்சலி அமீர்.  

தற்போது தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி தமிழ்ப் படங்களில் நடிக்கவும் சில கதைகளைக் கேட்டுவருகிறார். “எனக்குத் தமிழ் சினிமாத் துறை மீது மிகுந்த மதிப்பு உள்ளது. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை. நிறைய தமிழ்ப் பாடல்களிலும் தமிழ்க் காதல் காட்சிகளிலும் நடிக்க ஆசை” என்று தன்  விருப்பம் பகிர்கிறார் அஞ்சலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்