பெண்கள் 360: பெண்களுக்காக முதல் பள்ளி தொடங்கியவர்

By முகமது ஹுசைன்

பெண்களுக்காக முதல் பள்ளி தொடங்கியவர்

சாவித்திரிபாய் புலே இந்தியாவின் முதல் ஆசிரியை. 1831 ஜனவரி 3 அன்று மகாராஷ்டிரத்தில் பிறந்த அவருக்கு ஆசிரியர், கவிஞர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியச் செயற்பாட்டாளர் எனப் பல முகங்கள் உண்டு. சாதி ஒழிப்புக்காகவும் தீண்டாமை அழிப்புக்காகவும் விடாமல் குரல்கொடுத்தார். விதவை மறுமணத்துக்காகப் பெரும் இயக்கத்தை முன்னெடுத்தார்.

doodle-2jpg

பெண்களை எழுச்சியடைய வைத்ததன் மூலம் கணவனை இழந்தவர்கள் தலையை மழிக்கும் முறையை நீர்த்துப்போகச் செய்தார். தன் கணவர் ஜோதிபாயுடன் இணைந்து 1848-ல் இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார். அந்தப் பள்ளியின்மூலம் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை வழங்கினார். ஆதிக்கச் சாதியினர் சாவித்திரிபாயைக் கடுமையாகத் தூற்றினர். அவர் மீது சாணியடித்து அவமானப்படுத்தினர்.

எதிர்ப்பை உரமாக்கி, ஒரு பள்ளியை 18 பள்ளிகளாகப் பெருக்கினார். வல்லுறவால் கர்ப்பமடைந்த பெண்களைப் பேணுவதற்காகக் காப்பகத்தைத் தொடங்கி சேவையாற்றினார். 1897-ல் பிளேக் நோய் இந்தியாவைத் தாக்கியபோது, தன் வளர்ப்பு மகனுடன் இணைந்து அதற்குச் சிகிச்சையளிக்க இலவச மருத்துவமனையைத் தொடங்கினார். கல்விக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய அவரது 188-வது பிறந்த நாளையொட்டி ஜனவரி 3 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

 

தீர்ப்பை நிறைவேற்றிய பெண்கள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னும் யாரும் செல்ல முடியாத நிலையே நீடித்தது. இந்த நிலையில், மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயதுப் பெண்ணும் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து என்ற 40 வயதுப் பெண்ணும் கடந்த புதன் அன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.

இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிசெய்தார். அந்த இரு பெண்களும் 18 படிகள் வழியாக அழைத்துச் செல்லப்படவில்லை. இந்நிலையில், அதற்கு மறுநாள் இலங்கையைச் சேர்ந்த 46 வயதுப் பெண் பக்தை சசிகலா 18 படிகள் ஏறி ஐயப்பனைத் தரிசித்தார்.

 

மனிதாபிமானமற்ற தம்பதி

ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயதான ஜெனிஃபர், ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர். தன் கணவருடன் சேர்ந்து 2015-ல் ஐந்து வயதுச் சிறுமியைக் கொத்தடிமையாகத் தனது வீட்டுக்குக் கொண்டுவந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறாள். கோபமடைந்த ஜெனிஃபர் அவளை வீட்டுக்கு வெளியே சங்கிலியால் கட்டிவைத்தார்.

கடும் வெயிலில் குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் வாடிய அந்தச் சிறுமி இறுதியில் உயிரிழந்தாள். உயிருக்குப் போராடிய சிறுமியைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையையும் ஜெனிஃபர் எடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஜெர்மனியின் மியூனிக் நகரத்தில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஜெனிஃபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
 

thunichaljpgright

துணிச்சல் நிருபர்

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததைக் கண்டித்து கேரளத்தில் கடந்த வியாழன் அன்று முழு அடைப்புப் போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. அப்போது அதைப் படம் பிடித்த பெண் புகைப்பட நிருபர் ஷாஜிலா அப்துல் ரஹ்மானைத் தகாத வார்த்தைகளால் தூற்றியதோடு தாக்கியும் உள்ளனர். போராட்டக்காரர்களின் தாக்குதலால் ஷாஜிலா அழுதுகொண்டே வேலைசெய்யும் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து அவர், “யாரென்று தெரியாத சிலர் என்னைப் பின்னால் இருந்து எட்டி உதைத்தனர். ஒரு கணம் நான் அதிர்ந்தேன். இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத  கசப்பான தருணம்” என்று கூறினார்.

 

சிறு துளி: சமத்துவத்திலிருந்தே தொடங்குகிறது காதல்

#MeToo இயக்கத்தைப் பற்றி பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட கருத்து.

“எனக்குத் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவியின் பர்ஸை ஒருபோதும் திறந்து பார்த்ததில்லை. எங்கள் படுக்கையறையின் கதவை எப்போதும் தட்டிவிட்டுத்தான் உள்ளே செல்வேன். எங்கள் மகளின் அறைக்குச் செல்லும்போதும் கதவைத் தட்டிவிட்டுத்தான் செல்வேன். மனைவிக்கும் மகளுக்கும் நான்தான் வருகிறேன் என்று தெரியும். ஆனால், அது அவர்களின் இடம். அதை நான் மதிக்கிறேன்.

sirujpg

ஒரு நபரை மரியாதை குறைவாக நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று என் 21 வயது மகனுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். ஒருவரை அடிப்பது போன்ற தாக்குதல்களைப் பற்றிப் பேசவில்லை. #MeToo இயக்கத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். மூன்று விஷயங்கள்: மரியாதை, மரியாதை, மரியாதை. அதை நான் உறுதியாக நம்புகிறேன். என் நீண்டகால தோழிகள் சிலர், சில நேரம் அவர்களுடன் நான் சம்பிரதாயமாக நடந்துகொள்வதாகச் சொல்வார்கள்.

ஆனால், மரியாதை இல்லாத இடத்தில் காதலும் ரொமான்சும் இருக்கவே முடியாது. மரியாதை என்றால் சமத்துவம். நான் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் #சமத்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் எவ்வளவு பலவீனமானவன் என்பதை உனக்குத் தெரியப்படுத்துவதுதான் சமத்துவம். உன்னால் என்னைப் பார்த்துகொள்ள முடியுமா என்று கேட்பதுதான் சமத்துவம். இப்படித்தான் நான் என் மனைவியிடமும் தோழிகளிடமும் நடந்துகொள்கிறேன். ஏனென்றால், அவர்களை நான் உண்மையாக நேசிக்கிறேன்.”

- கனி

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்