ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது தேசமே பதக்கத்துக்காகக் காத்திருக் கையில் கிடைக்கும் பதக்கத்துக்கு ஈடு இணையே இல்லை. ரியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைய மூன்று தினங்களுக்கு முன், அந்தப் பெண் வென்ற வெண்கலப் பதக்கமும் அப்படியானதுதான். அவர் வென்ற வெண்கலப் பதக்கம் இந்தியாவைப் பதக்கப் பட்டியலில் சேர்த்தது.
அதோடு ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த அந்தப் பெண், சாக்ஷி மாலிக்.
ஹரியாணாவில் உள்ள ரோட்டக் என்ற நகரம்தான் சாக்ஷியின் சொந்த ஊர். அவருடைய தாத்தா, மல்யுத்த வீரர். சிறு வயதிலிருந்தே தனது மல்யுத்தப் பராக்கிரமங்களை பேத்தி சாக்ஷியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்ன மல்யுத்தக் கதைகளால் சாக்ஷிக்கு அந்த விளையாட்டு மீது ஆர்வம் பிறந்தது.
குஸ்தி, சண்டை என்றாலே ஒதுங்கிச் செல்லும் சிறுமிகளுக்கு மத்தியில் தாத்தா வழியில் மல்யுத்த விளையாட்டில் குதித்தார். மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டபோது சாக்ஷிக்கு 12 வயது. “மல்யுத்த விளையாட்டைத் தேர்வுசெய்தது என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு” என்று பின்னாளில் சாக்ஷி குறிப்பிடும் அளவுக்கு அந்த விளையாட்டில் புகழ்பெற்றார்.
தடைகள் தாண்டி
மல்யுத்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், வீட்டில் அதற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. மல்யுத்த விளையாட்டில் ஈடுபட அவருக்குப் பலவிதத் தடைகள் ஏற்பட்டன. அவற்றைத் தாண்டித்தான் சாக்ஷியால் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தன் மீது அவருக்கு இருந்த அபாரமான நம்பிக்கையால், விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து அந்த விளையாட்டில் முன்னேறிவந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கி பிறகு, அவர் பெற்ற வெற்றிகள், சர்வதேசப் போட்டிகளில் அவருக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்தன.
மறக்க முடியாத ஆண்டு
2010-ல் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாக்ஷி பங்கேற்கத் தொடங்கினார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சாக்ஷி, 58 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். முதல் சர்வதேசத் தொடரையே அமர்க்களமாகத் தொடங்கிய சாக்ஷியின் பக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெற்றிக் காற்று வீசியது. 2014-ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மல்யுத்தத் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் முதன் முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதே ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். ஒரே ஆண்டில் மூன்று சர்வதேசத் தொடர்களில் சாக்ஷி பெற்ற வெற்றி, அவரது ஒலிம்பிக் கனவை அதிகப்படுத்தியது.
ஒலிம்பிக் வாய்ப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 2015-ல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி, பயிற்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முழுமையாகத் தயாராக அது உதவியது. சாக்ஷி மாலிக் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை.
2016 தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுதான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, யோகேஸ்வர் தத், வினேஷ் போகத் போன்ற நட்சத்திர வீரர், வீராங்கனைகள் மீதுதான் எல்லோருடைய கவனமும் குவிந்திருந்தது. ஆனால், இவர்கள் யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை.
ஒலிம்பிக் பதக்கம்
மாறாக, மல்யுத்தப் போட்டிகளில் சாக்ஷி மாலிக் முன்னேறிவந்தார். காலிறுதிப் போட்டியில் சாக்ஷி மாலிக், ரஷ்யாவின் வெலெரியா கோப்லோவாவிடம் தோல்வியடைந்தார். வெலெரியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் ‘ரெபிசேஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்குக் கிடைத்தது.
இந்தச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் சாக்ஷி. கடைசிவரை போராடித்தான் பதக்கம் வென்றார். 2016-ல்
இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெற சாக்ஷி வென்ற வெண்கலப் பதக்கம் உதவியது. இதன் பிறகுதான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
aadum-2jpgrightஇதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நேவால் என மூன்று பெண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தனர். அந்தப் பட்டியலில் சாக்ஷியும் சேர்ந்தார்.
மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சாக்ஷிக்குக் கிடைத்தது. இதற்கு முன்பு ஜே.டி.ஜாதவ், யோகேஷ்வர் தத், சுஷில் குமார் ஆகியோர் மட்டுமே மல்யுத்தத்தில் பதக்கம் வென்றிருந்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, தனது 12 ஆண்டு காலக் கனவு நனவானதாக சாக்ஷி குறிப்பிட்டார்.
சாக்ஷி பெற்ற வெண்கலம் அவரை ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக்கியது. ஆனால், அதற்காகக் கடின உழைப்பு, விடா முயற்சி, எப்போதும் மனம் தளராதிருப்பது எனப் பல பாடங்களை அவர் பயின்றார். அந்தப் பாடங்களே சாக்ஷிக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தன. சாக்ஷியின் ஒலிம்பிக் வெற்றி அவருக்கு மட்டுமல்ல, இந்திய மல்யுத்தத்துக்கும் புதிய வாசலைத் திறந்துவைத்தது.
மல்லுக்கட்டி மோதும் இந்த விளையாட்டை நோக்கி இளம் பெண்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அன்று தாத்தாவின் மல்யுத்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சாக்ஷியைப் போல, இன்று சாக்ஷியின் வெற்றிக் கதையைக் கேட்டு, வட இந்திய கிராமங்களில்கூட மல்யுத்த விளையாட்டில் இளம் பெண்கள் காலடி எடுத்துவைத்தவண்ணம் உள்ளார்கள்.
மல்யுத்தத்தில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்த சாக்ஷியைப் பெருமைப்படுத்தும் கவுரவிக்கும் வகையில், அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 2016-ம் ஆண்டிலேயே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கிக் கவுரவித்தது. 2017-ல் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கியது.
2017-ல் மல்யுத்த வீரர் சத்யவர்த்தை மணந்துகொண்ட பிறகு, இருவரும் சேர்ந்து மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை மனத்தில் வைத்து சாக்ஷி உழைக்கத் தொடங்கியிருக்கிறார் வெற்றிக்கொடியைப் பறக்கவிடும் கனவோடு!
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago