அக்டோபர் 10, 1950-ல் இந்திய நல்லெண்ணத் தூதுக் குழு பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பின்போது தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராகவதாஸ், திராவிட நாட்டில் பார்ப்பனர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அண்ணா சொல்கிறார், “மனித உரிமையோடு வாழ்வார்கள்” என்று.
அண்ணாவின் ஒட்டுமொத்த வாழ்வை ஒரே வரியில் அடக்க வேண்டுமானால் மேற்சொன்ன பதிலில் அடக்கலாம். தன்னளவில் முரண்பட்டு, காலமெல்லாம் தான் எதிர்த்துப் போராடும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்களும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்று நினைத்தவர் அவர். அவரது 50-வது ஆண்டு நினைவுநாளையொட்டி (பிப்ரவரி 3) பெண்களுக்காக அவர் முன்னெடுத்தவற்றை நினைவுகூர்வது பொருத்தமாக அமையும்.
பெரியாரும் அண்ணாவும்
எதிரிகளுக்குமான சமத்துவம் பற்றிப் பேசிய அண்ணா, தான் ஏற்றுக்கொண்ட அரசியல் தத்துவத்தின் முதன்மை அங்கமான பெண்களுக்கான சமத்துவம் பற்றிப் பேசாமல் இருந்திருக்க மாட்டார். அனைத்துத் தளங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலினச் சமத்துவமின்மை நிலவி வந்த நிலையில், பண்பாடு சார்ந்தே பெண்கள் மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அதனால், அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான வாதங்களே மிகப் பிரதானமாக தேவைப்பட்ட காலம் அது.
பெரியார் நீண்ட நெடுங்காலம் பண்பாட்டுத் தளத்திலேயே வேலை செய்தவர். அண்ணா ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் நோக்கி நகர்ந்தவர் என்பதால் அண்ணாவை விடவும் பெரியாரின் பெண்ணியப் பார்வை மிக அதிகமாகக் கவனம் பெறுகிறது. பெரியார் அளவுக்கான வெளி அண்ணாவுக்குக் கிடைக்கவில்லை என்றபோதும், கிடைத்த தளத்தில் பெண் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கத் தவறவில்லை.
படைப்புகளின் வழி
சாதி அமைப்பில் நிலவிய பாகுபாடுகள், அதன் தொடர்ச்சியாகப் பெண்கள் மீது சாதி அமைப்பு செலுத்திய தாக்கங்கள், குடும்ப அமைப்பில் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட பிரத்யேகக் கட்டுப்பாடுகள், அவற்றின் விளைவுகள், மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் பெண்கள் மீது செலுத்தப்பட்ட அதிகாரம் உள்ளிட்ட எல்லா வகையான அதிகாரங்களையும் கேள்விக்குட்படுத்தின அண்ணாவின் படைப்புகள்.
கதைகள், புதினங்கள், நாடகங்கள் உள்ளிட்ட புனைவு சார்ந்த படைப்புகளின் வழியேயும் அவர் பெண்ணியம் பேசினார். பெரியாரின் கருத்துகளில் இருந்த கொதிநிலையை இலக்கியத்தின் வழியே ஆறவைத்து, மக்களுக்கு அத்தகு தீவிரப் பார்வைகளின் தேவையை உணர்த்தினார்.
நேரடியாகப் பெண்களின் வாழ்வையே மையமாக வைத்து எழுதப்பட்டவை, வேறு கதைக்கருவை மையப்படுத்தி எழுதப் பட்டவையின் ஊடாகப் பெண்கள் வாழ்வைப் பதிவுசெய்தவை என்று இரண்டு பிரிவாக அவருடைய இலக்கியங்களைப் பார்க்கலாம்.
சுமங்கலி பூஜை
‘திராவிட நாடு’ இதழில் ஜனவரி 1949-ல் வெளியான, ‘சுமங்கலி பூஜை’ என்னும் சிறுகதை செல்வந்தர் ஒருவர் பசுக்களைப் பாதுகாப்போம் என்ற போர்வையில் சொத்து சேர்க்க முற்படுவதைக் கருவாகக் கொண்டது. ஆனால், அந்தக் கதையில் இரண்டு செய்தி களை அறிய முடிகிறது. ஒன்று, செல்வந்தனானாலும் சரி, ஏழ்மையில் இருப்பவனானாலும் சரி ஆண்களுக்குச் சமமான இடத்தில் அவர்களின் மனைவிகள் இருப்பதில்லை.
அடுத்தது, பக்தி சார்ந்த மக்களின் அறியாமையைப் பணமாக்கும் முயற்சியில்தான் செல்வந்தர் இறங்கியிருக்கிறார். இது இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் வாரா வாரம் சுமங்கலி பூஜை நடத்துவதன் வழியாகப் பணத்தைச் சம்பாதிக்கலாம் என்ற அவருடைய எண்ணத்துக்குப் பெண்களின் பக்தியே பிரதான மூலதனமாக இருக்கிறது என்பதையும் அந்தக் கதை சொல்கிறது.
தங்கத்தின் காதலன்
நவம்பர் 1947-ல் வெளியான, அண்ணாவின், ‘சாது’ சிறுகதையும் இவ்வகையிலானதே. பலம் பொருந்தி யோரிடம் அடங்கிப்போவதும் பலம் குன்றியோரை அடக்க நினைப்பதும் மானுட இயல்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கதை எழுதப்பட்டது. வலிமை நிறைந்த ஓர் ஆண் தன் பலத்தை அல்லது கோபத்தைத் தன் மனைவியிடம் காட்டுகிறான்.
அந்த மனைவியோ தெருவோரம் தண்ணீர் பிடிக்கும் வலுவற்ற இன்னொரு பெண்ணிடம் தன்னுடைய கோபத்தைக் கொட்டுகிறாள். ஆக, கோபத்தை வெளிப்படுத்தும் வலு இருந்தும் அங்கே பாலினம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறது என்பதை உணர்த்தும் கதை இது.
1939-ல் குடி அரசு இதழில் வெளியான, ‘தங்கத்தின் காதலன்’ என்ற சிறுகதை சாதியும் சொத்துரிமையும் ஒரு காதலை எப்படிப் பிரிக்கின்றன, அந்தப் பிரிவு ஒரு பெண்ணை எப்படிக் கொல்கிறது என்று நேரடியாகப் பெண்களின் வாழ்வை மையப்படுத்திப் பேசியது.
annajpgrightபெண் - புரட்சிகர அடையாளம்
அண்ணாவின் பெண்ணியப் பார்வை அவலங்களை நயமாக அடையாளப்படுத்தும் பணியை மட்டும் செய்வதாகவும் அவை புரட்சிகர அடையாளங்களைப் பெண்களுக்கு வழங்குவதில்லை என்பது போன்றும் சில சிந்தனைகள் எழுக்கூடும். ஆனால், ‘பெய்யெனப் பெய்யும் மழை’, ‘பெண்ணினம் பேசுகிறது’ போன்ற கட்டுரைகள் அந்தச் சிந்தனையைச் சிதைக்கும் வலிமையுடையவை.
1947 அக்டோபர் 12-ல் வெளியான ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற கட்டுரை, காலட்சேபம் கேட்டுவிட்டு வந்து மனைவிக்குக் கற்பு குறித்துப் பாடமெடுக்கும் கணவனை நோக்கி, “காசுக்குக் கதைசொல்லும் பேர்வழிக்குக் கற்புடைய மங்கையின் கடமை மட்டும்தான் தெரிந்ததோ? ஏன் கணவன் செய்ய வேண்டிய கடமை மறந்து போச்சுதோ?” என்று மனைவி கேட்பதாக அமைந்திருக்கும். வரையறுக்கப்பட்ட எல்லையை, உரிமை பெறுதலின் பொருட்டு உடைக்கும் புரட்சிகரப் பெண்ணின் அடையாளம் வெளிப்படும் இடம் இது.
“சிறையில் தள்ளுங்கள். கடுஞ்சிறையில் வாடுவது இந்தக் கிழவனுக்கு வாக்கப்படுவதைவிட எவ்வளவோ மேலானது” என்று தனக்கு விருப்பமற்ற திருமணத்தை எதிர்க்கும், 1949-ல் வெளியான, ‘பெண்ணினம் பேசுகிறது’ கட்டுரையில் வரும் பெண்ணும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் புரட்சிகரப் பெண்ணின் அடையாளம்தான்.
பெண்ணுக்கு நீதி
விதவைப் பெண்ணின் பாலியல் சார்ந்த அகவுணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளும் ஒன்றையொன்று மீறும்போது நிகழும் சிக்கல்களை, 1945- ல் ‘திராவிட நாடு’ இதழில் வெளியான, ‘அவள் முடிவு’ என்ற கதை பேசுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்தால் தான் சரியான நீதி கிடைக்கும் என்பதை ‘ரங்கோன் ராதா’ சொன்னது. ‘பார்வதி பி.ஏ.’, ‘கன்னி விதவையான கதை’ என்பன போன்று எண்ணற்ற படைப்புகள் பெண்களின் வாழ்வு குறித்தும் மீட்பு குறித்தும் கதைகளின் வழியே பேசின. இருக்கின்ற நிலை அடிமை நிலை, அது மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை மக்கள் மனத்தில் குறிப்பாகப் பெண்கள் மனத்தில் அவை விதைத்தன.
உயர்த்திய திட்டங்கள்
அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பெரிதாகப் பிரதிபலிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே அண்ணா மறைந்துவிட்டார். அவர் அரசுப் பொறுப்பேற்ற காலத்தில் பொதுவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேவையே அதிகமாக இருந்தது. குறிப்பிட்ட சமூக ஆதிக்கத்தைத் தகர்த்து அப்போதுதான் அதிகாரத்தைப் பரவலாக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆகவே, அத்தகைய நெருக்கடியான சூழலில் பிரத்யேகத் திட்டங்கள் பெரிய அளவில் பெண்களுக்காகச் செயல்படுத்தவில்லை.
இவற்றையெல்லாம் தாண்டி அந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப கட்சியின் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கான வாய்ப்பை வழங்கியது, அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கியது, பின்னாளில் அமைந்த தன்னுடைய கழக அரசில் அமைச்சராக்கியது, ஆண்டாண்டு கால வரலாற்றில் எல்லாப் பெண்களையும் சமமாகச் சபையில் பேச அனுமதித்தது, சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியது, விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய தமிழகத்தின் பெண்களின் நிலை.
அண்ணா வகுத்த அடிப்படை
அவ்வப்போது செய்தித்தாள்களில், நாட்டிலேயே அதிகப் பெண் தொழில் முனைவோரைக்கொண்ட மாநிலம் தமிழ்நாடு, பெண்கள் அதிகம் கல்வி பெறும் மாநிலங்களில் சிறப்பான இடத்தில் தமிழ்நாடு போன்ற செய்திகளை எல்லாம் படிக்கும்போது அண்ணா நினைவுக்கு வருகிறார். காரணம், திராவிட இயக்கத்துக்குப் பெண்களையும் உள்ளடக்கிய சமூக விடுதலை என்ற பெருங்கனவு இருந்தது. அந்தக் கனவை இலக்கு நோக்கிய திசைக்குத் திருப்பியவர் அண்ணா.
இன்று இலக்கை அடைந்து விடவில்லை என்றாலும் அந்தப் பாதையில் பயணம் செல்கிறார்கள். பயணத்தின் பாதையில் பொதுவான வளர்ச்சிக்காகவும் பிரத்யேகமாகப் பெண்களின் வளர்ச்சிக்காகவும் போடப்பட்ட திட்டங்களின் பலன்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் அண்ணாதான் சிரிக்கிறார்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: ersuriyacivil@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago