கற்கண்டு, திராட்சை சகிதம் கிளம்பி விடுகிறார் தமிழ்ச்செல்வி. யாரைச் சந்தித்தாலும் ஒரு திருக்குறளைச் சொல்லச் சொல்கிறார். அவர் சொல்லி முடித்ததும் இனிப்பு வழங்குகிறார். அரசு விழாக்கள், இலக்கியக் கூட்டங்கள், சங்கக் கூட்டங்கள் போன்றவை நடந்தால் அங்கே தமிழ்ச்செல்வியும் இருப்பார். 61 வயதாகும் இவர், ‘திருக்குறளார் மகள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
பெயரிலேயே தமிழ் இருப்பதாலோ என்னவோ திருக்குறள் மீது இவருக்குக் காதல் பிறந்துவிட்டது. திருக்குறள் சொல்கிறவர்களுக்கு இனிப்பு வழங்கும் வழக்கத்தை ஒன்பது ஆண்டுகளாகக் கடைப்பிடித்துவருகிறார். தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை திருக்குறள் சொல்லத் தயாராகி விடுகின்றனர்.
அமைச்சர்கள், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என யாரும் திருக்குறள் சொல்லாமல் இவரிடமிருந்து தப்பித்துவிட முடியாது. மாணவர்களைக் கண்டதும் இவரது முகம் பூரித்துவிடும். இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரைத் திருக்குறளைச் சொல்லவைத்து குறளரசியாக வலம்வருகிறார் தமிழ்ச்செல்வி.
திருக்குறள் வணக்கம்
திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலையில் உள்ளது தமிழ்ச்செல்வியின் வீடு. வீட்டுக் கதவில் தொங்கவிடப்பட்ட பலகையில் எழுதப்பட்டிருந்த திருக்குறளையும் அதன் பொருளையும் படித்தபடியே உள்ளே சென்றோம். “திருக்குறள் வணக்கம்” என்ற செம்மையான அழைப்புடன் வரவேற்றார். நம்மையும் திருக்குறளைச் சொல்லச் சொல்லி இனிப்பு வழங்கினார்.
திருக்குறள் ஆர்வம் தந்தையிடமிருந்தே தமிழ்ச்செல்விக்கு வந்திருக்கிறது. தமிழ்ச்செல்வியின் தந்தை, கேப்டன் த. சாமிநாதன். அவரைத் திருக்குறளார் என்றே அனைவரும் அழைப்பார்கள். திருக்குறள் மீது அவருக்குப் பற்று அதிகம். 50 பைசா கொடுத்துத் திருக்குறள் புத்தகம் வாங்கியபோது குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையால் சாமிநாதனின் தந்தை அவரைக் கண்டித்துள்ளார்.
நான்காம் வகுப்புவரை படித்தவர், ராணுவத்தில் சேர்ந்த பிறகு தமிழில் இளநிலைப் பட்டம் பெற்றார். ‘திருவள்ளுவர் அகம்’ என்ற வீட்டை 1982-ல் கட்டினார். அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணிக்குத் தினமும் திருக்குறளின் ஒரு அதிகாரத்தை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்வார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், பஞ்சாபி ஆகிய ஐந்து மொழிகளைக் கற்றார். திருக்குறளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்துச் சக வீரர்களுக்குச் சொல்லி யிருக்கிறார்.
700 திருமணங்கள்
மனைவியைத் தினமும் திருக்குறளையும் அதன் பொருளையும் எழுதிவைக்கச் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். “அப்பா சொன்னதைப் போல என் அம்மா கண்ணம்மாளும் எழுதி வைத்து, விடுமுறையில் வீட்டுக்கு வரும் அப்பாவிடம் காண்பிப்பார். வீட்டுக்கு வந்ததுமே திருக்குறள் சேவையாற்றக் கிளம்பிவிடுவார். திருவண்ணாமலையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முக்கியப் பங்காற்றினார்.
திருக்குறள் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். அதை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்திவருகிறோம். திருக்குறள் நெறிமுறைப்படி 700 திருமணங்களை அவர் நடத்திவைத்துள்ளார். என் திருமணமும் திருக்குறள் நெறிமுறைப்படித்தான் நடந்தது. என் தந்தை தூண்; நான் துரும்பு” என்று சொல்கிறார் தமிழ்ச்செல்வி.
தந்தையுமான கணவர்
தந்தையின் மறைவுக்குப் பிறகு, திருவள்ளுவர் விழாக்களை தமிழ்ச் செல்வியின் கணவர் கமலக்கண்ணன் ஒருங்கிணைத்துவருகிறார். அவரைப் பற்றிப் பேசும்போது தமிழ்ச்செல்வியின் கண்கள் பனிக்கின்றன. “என்னை இன்முகத்துடன் வழியனுப்பி ஊக்கப்படுத்துகிறார். 2008-ல்
ஒரு விபத்தில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்து மறுபிறவி எடுத்துள்ளேன். அதுவரை குடும்பப் பணி மட்டும் செய்துவந்த நான், குணமடைந்ததும் திருக்குறள் சேவையை என் தந்தை வழியில் தொடங்கினேன். அவரே எனக்கு உந்து சக்தியாக இருந்து வழி நடத்துவதாகக் கருதுகிறேன். என்னைத் திருக்குறளார் மகள் என யாராவது குறிப்பிடும்போது, என் மனம் பேரின்பம் அடைகிறது” என்று நெகிழ்கிறார் தமிழ்ச்செல்வி.
ஒரு குறள் ஒரு அமுது
தான் சந்திக்கும் நபர்கள் யாருக்காவது திருக்குறள் தெரியவில்லையென்றால் தமிழ்ச்செல்வியே அவர்களுக்கு ஒரு குறளைச் சொல்லி, திரும்பச் சொல்லச் சொல்வார். ‘ஒரு குறள் ஒரு அமுது’ என்பது அவரது இலக்கு. “நான் வருவதைப் பார்த்ததும் இப்போது பலரும் திருக்குறளைச் சொல்லத் தயாராகிவிடுகின்றனர்.
எதிர்மறை விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை. அவற்றை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு கூடுதல் நம்பிக்கையோடு நடைபோடுகிறேன்” என்கிறார் தமிழ்ச்செல்வி. திருக்குறள் நெறிபரப்பும் மையம், மலர்ந்த திருக்குறள் சமுதாயம் என்ற அமைப்புகளின் மூலம் 37 ஆண்டுகளாகத் திருக்குறள் சேவை தொடர்கிறது. இவருக்குத் தமிழ்ச் செம்மல் விருது, வயது முதிர்ந்த தமிழ் அறிஞர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து பாராட்டியுள்ளது.
14-வது சுற்று ஆரம்பம்
திருவண்ணாமலையில் உள்ள திருவள்ளுவர் சிலையைத் தூய்மைப்படுத்தி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மலர் மாலை அணிவித்து ஒரு அதிகாரமும் அதன் பொருளும் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதம் ஒரு முறை களஞ்சியம் விழா நடத்தப்பட்டு, திருக்குறளின் பெருமையும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ச்செல்வியின் வீட்டுக் கதவு முன் உள்ள பெயர்ப் பலகையில் 1330 குறள்களும் 13 சுற்றுகளாக எழுதி முடிக்கப்பட்டுள்ளன. இப்போது 14-வது சுற்று தொடங்கியிருக்கிறது.
நம்மை வழியனுப்பும்போது, “திருக்குறளைக் கற்றவர் மாந்தராவார்; திருக்குறளை அறிந்தவர் அறிஞராவார்; திருக்குறள்படி நடப்பவர் தெய்வமாவார். திருக்குறளைவிட உயர்ந்தது ஏதுமில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் திருக்குறள் தேவை” என்று சொல்லி விடைகொடுத்தார் தமிழ்ச்செல்வி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago