கொலு கோலாகலம்: வாழ்க்கையைச் சொல்லும் கொலு

By ஜி.ஞானவேல் முருகன்

நவராத்திரி பண்டிகை வந்துவிட்டால் போதும். பெண்களுக்கு ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்தான். கொலு வைப்பதில் ஒவ்வொருவரும் தங்கள் கலைத் திறமையோடு கற்பனைத் திறனையும் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் பழமையோடு புதுமை இணைந்த ஃபியூஷன் கொலு வைத்து அசத்துகிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமுதா சிவா. சிறுவயதில் மாயவரம் செம்பனார்கோயிலில் உள்ள பாட்டி தனகோடி வீட்டுக்குப் போகும்போது, அங்கே அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகள் அமுதாவின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பாட்டியின் அடியொற்றி இவருடைய அம்மாவும் கொலு வைத்திருக்கிறார். காரணம் ஒவ்வொரு ஆண்டும் கொலு வைப்பதால் தங்கள் வாழ்வில் ஏதொவொரு மாற்றமும் வளர்ச்சியும் நடக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஏற்றத்தின் வாசல்

திருமணம் முடிந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்த அமுத சிவாவின் புகுந்த வீட்டில், கொலு வைப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. திருமணத்துக்குப் பின் ஏழு வருடங்களாகக் கொலு வைக்காதவர், 1998-ல் சின்னதாகக் கொலு வைத்தார். தன் பாட்டி கொடுத்த பழமையான சில பொம்மைகளை ஒரு சிறிய டேபிளில் வைத்து கொலு அமைத்தார். ஒன்பது நாட்கள் பூஜை செய்து வழிபட்டார்.

அதுவரை வாடகை வீட்டில் இருந்தவர், அடுத்த சில மாதங்களில் சொந்த வீட்டுக்குக் குடியேறியிருக்கிறார். இந்த மாற்றத்துக்குக் காரணம் தான் வைத்த கொலுதான் என்று நம்பும் அமுதா, தொடர்ந்து 15 ஆண்டுகளாகக் கொலு வைத்து வருகிறார்.

குழந்தைகளே காரணம்

பழமை, புதுமை, நகரம், கிராமம், சமுதாயம், ஆன்மிகம், கோயில், பண்பாடு, நீதி, தொழில்கள், விளையாட்டு என அமுதா வீட்டு கொலுவில் இடம் பெறாத கான்செப்ட்டே இல்லை என்று சொல்லலாம்.

“குழந்தைகளும் கொலுவும் எப்பவுமே பிரிக்க முடியாதவை. எந்த ஒரு கருத்தும் பொம்மைகள் உருவில் பார்க்கும் போது, குழந்தைகளுக்கு எளிதில் புரியும். கொலுவை அழகுக்காக வைப்பதைவிட குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காக பயன் படுத்துவது முக்கியம்” என்று சொல்லும் அமுதா, ஒருமுறை வைத்த பொம்மையை அடுத்த வருட கொலுவில் வைப் பதில்லை. காரணம் கொலு பார்க்க வரும் குழந்தைகள், போன வருடம் வைத்ததையே இப்போதும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்களாம்.

“குழந்தைகளின் ஞாபக சக்தி என்னை வியக்க வைத்தது. அன்று முதல் கொலு வைப்பதில் நான் புதிய முயற்சிகளை மேற்கொண்டேன். நான் வைத்த கொலுவில் குறிப்பிடத்தக்கது 20 ஆண்டுகள் கழித்து திருச்சி நகரம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ‘திருச்சி டி-20’ கொலு வைத்திருந்தேன். இதில் வானுயர்ந்த அழகிய கட்டிடங்கள், ஷாப்பிங் மால், ஐ.டி பார்க், சுத்தமான பசுமைச் சாலை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மேம்பாலங்கள், சிக்னலில் ஆட்டோமெடிக் அலர்ட், சாலையில் குப்பை கிடந்தால் எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் ரோபோ பொம்மை, சாலையில் செல்லும் சோலார் கார் என நம் கனவு அம்சங்களுடன் திருச்சி நகரத்தின் தோற்றம் இருக்கும்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் அமுதா.

வாழ்க்கைச் சித்திரம்

தமிழர்களின் வாழ்க்கை முறையைச் சொல்லும் வகையில் குழந்தை பிறந்தவுடன் நடக்கும் பெயர் சூட்டு விழா, காதணி விழா, பள்ளிக்குச் செல்லும் நிகழ்வு, பூப்புனித நீராட்டு விழா, பெண் பார்க்கும் நிகழ்ச்சி, மாப்பிள்ளை அழைப்பு, திருமணம், விருந்து, உறவினர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி என வாழ்க்கையின் முக்கிய தருணங்களைச் சித்தரிக்கும் வகையிலும் கொலு வைத்திருக்கிறார். இதுதவிர தமிழகத்தின் முக்கிய கோயில்களின் வரலாறு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில மக்களின் கலாச்சாரம் குறித்த கொலு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைச் சொல்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் 3ஆயிரம் பொம்மைகள் வரை வாங்கியுள்ள அமுதா, தன் கற்பனைகளுக்கு அட்டைகளை வெட்டி, கலர் பேப்பர் ஒட்டி தானே வடிவம் கொடுக்கிறார். தான் நினைத்த மாதிரி சில பொம்மைகள் கிடைக்காத போது, திருவானைக்காவல் கொலு பொம்மை தயாரிப்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்.

“கொலு வைப்பதால் எனக்கு நல்லது நடக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பார்த்துச் செல்லும் குழந்தைகளுக்கு படக்காட்சியுடன் கூடிய ஒரு புதிய அனுபவத்தைத் தருவதை நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும் கண்கூடாகப் பார்க்கிறேன். இந்த வருஷம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள் குறித்த கொலு வைக்கப் போகிறேன். அந்தப் பண்டிகைகளைச் சித்திரிக்கும் பொம்மைகளைச் செய்து வருகிறேன்” என்கிறார் அமுதா சிவா. ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பண்டிகை மணம்வீசப் போகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்