ஆடும் களம் 38: தடகள எக்ஸ்பிரஸ்!

By டி. கார்த்திக்

ஹிமா தாஸ். இந்தியத் தடகளத்தின் புதிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். அசாமிலிருந்து புறப்பட்டிருக்கும் இந்தப் புயல், இந்தியத் தடகளத்தில் மகளிர் யாரும் செய்யாத தனித்துவமான சாதனையைச் செய்திருக்கிறது. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாகத் தங்கம் வென்ற இந்தியத் தங்க தாரகை இவர்.

அசாம் மாநிலம் நவ்கான் என்ற ஊரில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் ஹிமா தாஸ். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஹிமா, ஐந்தாவது மகள். பள்ளிக்கூடம் விட்டால் வயல்வெளிதான் ஹிமாவின் உலகம். தந்தைக்கு உதவியாக வயல்வெளியிலேயே கிடப்பார். விளையாட்டு என்றால் பால் பேதம் பார்க்காமல் ஐக்கியமாகிவிடுவார்.

அசாமில் தெருக்களில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவார்கள். அவர்களுடன் சேர்ந்து ஹிமாவும் கால்பந்து விளையாடத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டு அவருக்கு அத்துப்படியானது. ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனையாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியம் ஹிமாவின் மனதுக்குள் ஆழமாக ஊடுருவியது. ஆனால், வாழ்க்கைப் படகு அவரைத் தடகளத்தில் கொண்டுபோய் நிறுத்தியது.

aadum-3jpg

காருடன் போட்டி

அப்போது அக்கம்பக்கத்துக் கிராமங்களில் நடக்கும் கால்பந்துப் போட்டிகளில் சிறுவர் களுடன் சேர்ந்து விளையாட ஹிமா ஆஜராகிவிடுவார். மற்றவர்கள் கோல் அடிக்கிறார்களோ இல்லையோ, ஹிமா கோல் அடிக்காமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 100 ரூபாய், 200 ரூபாய் எனப் பரிசாகப் பெற்று, அதைத் தன் அம்மாவிடம் கொடுப்பது அவருடைய வழக்கம். கால்பந்து மீது இருந்த தீராத காதலால் எப்போதும் ஓடி ஓடிப் பயிற்சி எடுப்பார். ஊருக்குள் ஏதாவது கார் வந்துவிட்டால் போதும், உடனே அந்த காருடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடத் தொடங்கிவிடுவார் ஹிமா. சிறு வயதிலிருந்தே அவரது கால்கள் ஓரிடத்தில் நிற்காது.

பள்ளிக்கூடத்திலும் கால்பந்து விளையாட்டை மட்டுமே அவர் விரும்பித் தேர்ந்தெடுத்து ஆண்கள் அணியுடன் இணைந்து விளையாடிவந்தார். ஆனால், மகளிர் கால்பந்துக்குப் பெரிய அளவில் இந்தியாவில் வரவேற்பு இருக்காது என்று அவருடைய பள்ளி ஆசிரியர் ஹிமாவிடம் சொல்லி, அவரது கவனத்தை ஓட்டம் பக்கமாகத் திருப்பிவிட்டார்.

யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட ஹிமா முழு மூச்சாக ஓடத் தொடங்கினார். வெளியூர்களுக்குச் சென்று ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பெண் பிள்ளையை வெளியூர்களுக்கு அனுப்புவதைப் பலரும் குறை கூறியபோதும், அதை அவருடைய பெற்றோர் காதில் போட்டுக்கொள்ளாமல் அனுப்பி வைத்தார்கள்.

மைதானமான வயல்வெளி

கையில் காசு இல்லை; ஊரில் எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லை. ஊரில் நான்கு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இருந்ததில்லை. ஆனால், இதைப் பற்றியெல்லாம் ஹிமா கொஞ்சமும் அலட்டிக்கொண்டதில்லை. எப்போதும் துள்ளித் திரியும் மான் குட்டியைப் போல ஓடிக்கொண்டேயிருப்பார் ஹிமா. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புகூடக் கிராமத்தில் மேய்ச்சலுக்குக் கால்நடைகளை விடும் வயல்வெளியில் ஓடி, பயிற்சி எடுத்தவர் ஹிமா. அந்த நேரத்தில்தான் தலைநகர் குவாஹாட்டியில் நடந்த விளையாட்டு முகாமில் பங்கேற்க ஹிமா தாஸ் சென்றார். அந்தப் பயணம்தான் அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

சாதிக்கப் பிறந்தவள்

அந்த முகாமில் ஹிமா விளையாடியதைக் கண்ட நிபுன் தாஸ் என்ற பயிற்சியாளர், ‘இந்தப் பெண்ணிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. இவள் சாதிக்கப் பிறந்தவள்’ என்று பார்த்த மாத்திரத்திலேயே கணித்தார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. ஹிமா வசிக்கும் கிராமத்துக்கே வந்து, குவாஹாட்டியில் அவர் தங்கி பயிற்சியெடுக்க அனுப்பி வைக்கும்படி அவருடைய பெற்றோரிடம் அனுமதி கேட்டார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஹிமாவால் செலவு செய்து வெளியூரில் தங்கிப் பயிற்சியெடுக்க முடியாது என்பதை உணர்ந்த நிபுன் தாஸ், அனுமதி கொடுத்தால் மட்டும் போதும் என்று சொல்லி சம்மதம் பெற்றார்.

மெருகேற்றிய பயிற்சி

வயது வந்த பெண்ணை வெளியூருக்கு அனுப்பி வைப்பது சரியா என்று கிராமத்தினர் காதுபடப் பேசினார்கள். ஆனால், எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாத ஹிமா, பயிற்சியாளருடன் குவாஹாட்டிக்குச் சென்றார். நிபுன் தாஸின் கடுமையான பயிற்சியில் தன்னை மெருகேற்றிக்கொண்டார். தொடக்கத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் என ஓடிய ஹிமா தாஸின் கவனம் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் மீது குவிந்தது. விரைவாக ஓடி இலக்கை அடையும் திறமையையும் வளர்த்துக்கொண்டார்.

இரண்டு ஆண்டுகளாகப் படிப்படியாக முன்னேறிய ஹிமா தாஸ், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றார். 400 மீ., 4*400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற ஹிமா பெரிதாகச் சாதிக்கவில்லை. அதனால் அவர் மனம் தளரவும் இல்லை. தொடர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தினார். அடுத்த சில மாதங்களில் காமன்வெல்த் போட்டியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு அவரது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்ட 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெரும் வாய்ப்பாக அமைந்தது.

வரலாற்று வெற்றி

2018 ஜூலையில் பின்லாந்தில் உள்ள டாம்பையர் நகரில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹிமா பங்கேற்றார். ஓட்டப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடுகள் உள்பட 37 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் படிப்படியாக தன்னுடைய திறமையால் முன்னேறி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஹிமா.

போட்டியில் பந்தய தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். 80 சதவீத தொலைவை மெதுவாக ஓடிக் கடந்த ஹிமா, இறுதியில் புலிப் பாய்ச்சலாக ஓடி முதல் ஆளாக இலக்கை அடைந்தார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகளப் போட்டி ஒன்றில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து ஜகார்தா மற்றும் பாலெம்பெங் நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் முத்திரைபதித்தார் ஹிமா. 4*400 மீ. கலப்பு ஓட்டப் போட்டியிலும் 400 மீ. ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஹிமா, 4*400 மீ. தொடர் ஓட்டப் போட்டியில் பூவம்மா, சரிதாபென், விஸ்மயா ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்று தேசத்துக்குப் பெருமைதேடித் தந்தார்.

ஒரே ஆண்டில் தடகளப் போட்டியில் அதிரடி முத்திரை பதித்த ஹிமாவைப் பாராட்டி மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.

சிறு வயதில் கால்பந்து விளையாட்டில் சிறு தொகையைப் பரிசாகப் பெற்றுக்கொடுத்த ஹிமாவுக்கு இன்று லட்சங்களில் பரிசுமழை கொட்டுகிறது. 18 வயதிலேயே மத்திய அரசு நிறுவனத்தில் ஹிமாவுக்கு வேலை கிடைத்தது. ஆனாலும், உடனே வேலைக்குச் செல்ல ஹிமா மறுத்துவிட்டார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகுதான் வேலை என்று உறுதியாக அறிவித்து விட்டார். அந்த லட்சியத்தை வெல்வதற்காக உழைக்கத் தொடங்கியிருக்கிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்