அவியலும் துவையலும் மட்டுமே பெண்களுக்கானவை என்று ஒதுக்கப்பட்ட காலத்திலேயே அதை உடைத்தெறிந்து அறிவியலும் எங்களுக்கான களம் எனப் போராடி அந்தத் துறையில் பெண்கள் தடம் பதித்தனர். அவர்களின் எண்ணிக்கை குறைவு என்றபோதும் பெண்களின் அறிவியல் திறமைக்கு அவர்களின் நுழைவே வரலாற்றுச் சாட்சியாக அமைந்தது.
பள்ளிக் கல்வியைத் தாண்டுவதே பெண்களுக்குப் பெரும்பாடாக இருந்த காலத்தில் சமூகம், பொருளாதாரம் எனப் பல்வேறு புதைகுழிகளுக்குள் அவர்களது கால்கள் புதைக்கப்பட்டிருந்தன. அறிவின் துணையோடு அதிலிருந்து வெளியேறிய பெண்களால் மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடர முடிந்தது. அப்போதும் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. விஞ்ஞானி கமலா சோஹோனியின் கதை அந்த நிதர்சனத்தை உணர்த்தும்.
அந்த ஒரு நிபந்தனை
கேட்டதெல்லாம் கிடைக்கிற குடும்பத்தில் பிறந்தவர் கமலா. அப்பா நாராயணராவ் பாகவத், அண்ணன் மாதவராவ் இருவரும் நாடறிந்த விஞ்ஞானிகள். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவுசெய்தவர்கள். அதனாலேயே தனக்கும் அங்கே எளிதாக இடம் கிடைத்துவிடும் என கமலா நினைக்கவில்லை.
பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் வேதியியலும் இணைந்த இளங்கலைப் படிப்பை முடித்தார். பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்வானார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் படிக்க இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் என நினைத்தவருக்குத் தன் பாலினமே அதற்குத் தடையாக இருக்கும் எனத் தெரியாது. ஆய்வுப் படிப்புக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்.
பெண்களைச் சேர்த்தால் ஆய்வகத்தில் பயிலும் ஆண்களின் கவனம் சிதறக்கூடும் என்ற காரணத்தை முன்வைத்து கமலாவின் விண்ணப்பத்தை நிராகரித்தார் விஞ்ஞானி சி.வி.ராமன். நோபல் பரிசு வென்றவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தை நிறுவியவருமான ராமன் சொல்வதை யாரால் மறுத்துவிட முடியும்?
‘ராமன் ஆராய்ச்சி நிறுவன’த்தை நிறுவியது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அறிவியல் ஆய்விதழ்கள் பரவலாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் முன்வைக்கும் வாதத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்யும் என விஞ்ஞானிகளே நம்பினர்.
போராடிப் பெற்ற கல்வி
ஆனால், கமலா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கல்வி பயில பாலினம் தடை என்று சொன்ன பிற்போக்குத்தனத்தை எதிர்த்தார். அவரது தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக ஒரு நிபந்தனையுடன் ஆய்வு மாணவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவரால் எந்தவொரு மாணவனின் கவனமும் திசைதிரும்பக் கூடாது என்ற அந்த நிபந்தனை கமலாவை வெறுப்படைய வைத்தது.
அதற்காகத் தான் நேசித்த அறிவியல் படிப்பைத் துறக்க முடியாது என நினைத்துக் கசப்புடன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். “பெண் என்ற காரணத்துக்காகவே நான் நிராகரிக்கப்பட்டேன் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த நிபந்தனையைக் கேட்டபோது, அவமானமாக இருந்தது. நோபல் பரிசு வென்றவரே இப்படி நடந்துகொள்வதை என்னவென்று சொல்வது” என்று பின்னாளில் சொல்லியிருக்கிறார் கமலா.
அதன் பிறகு ஒவ்வோர் ஆய்விலும் தன் திறமையை நிரூபிக்க அவர் தவறவில்லை. ஆனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது. அறிவியல் துறையில் நிறைந்திருந்த அரசியலும் காழ்ப்புணர்வும் தன்னைச் சோர்வுறச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.
எந்த நிறுவனத்தில் கல்வி பயில தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் உலகுக்கு அனைத்தையும் உணர்த்திவிட்டார் கமலா சோஹோனி.
கமலாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆய்வுப் படிப்பு வாய்ப்பு வழங்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆகின்றன. நாடும் மக்களும் எவ்வளவோ முன்னேறிவிட்டதாகச் சொல் கிறோம். அன்று இருந்த தடைகள் எல்லாம் அகன்றுவிட்டதாகப் பெருமிதப்படுகிறோம். இவையெல்லாம் உண்மை என்றால் இந்தியாவில் அறிவியல் துறையில் கணிசமான அளவுக்குப் பெண்கள் இருக்க வேண்டுமே; ஏன் அது நடக்கவில்லை?
தொடங்கிய இடத்திலேயேதான் இப்போதும் நாம் நின்று கொண்டிருக்கிறோமா? இல்லை என்கிறார் டெல்லி விக்யான் பிரச்சார் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன். “தொழில்நுட்பக் கல்வியோடு ஒப்பிடுகையில் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம். ஆனால், அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்வதில் உள்ள சவால்கள் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம்” என்கிறார் அவர்.
பின்னிழுக்கும் சமூக நிர்பந்தங்கள்
12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்பு (குறைந்தது 5 ஆண்டுகள்) ஆகியவற்றைப் படிக்க 10 ஆண்டுகள் ஆகிவிடும். ஆய்வுப் படிப்பை முடித்ததும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்வரை அது தொடர்பான மேற்படிப்பை மேற்கொண்டால்தான் வாய்ப்பு கிடைக்கும். அதையும் சேர்த்து 13 ஆண்டுகள். இதற்குள் அவர்கள் 30 வயதைத் தொட்டிருப்பார்கள்.
பட்டப் படிப்பு முடித்ததுமே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. சில பெண்கள் வேலைக்குச் சென்று சேமிக்கும் பணத்தில் மணம் புரிவதும் நடக்கிறது. இப்படியான சூழலில் அவர்களது குடும்பத்துக்கு ஊதியம் தடைபடாமல் கிடைக்கும்வகையிலான ஏற்பாட்டை ஆய்வு மாணவர்களுக்கு அரசு ஏற்படுத்தித் தராததும் பின்னடைவுதான்.
நம் நாட்டில் பெரும்பாலான பெண்களின் அதிகபட்ச லட்சியமாகக் கருதப்படுவது திருமணம்தான். அதையும் 23 வயதுக்குள் முடித்துவிட நினைப்பார்கள். ஒரு பெண் 30 வயதுவரை படிப்புக்காகச் செலவிடுவதைக் குடும்பமும் சமூகமும் ஏற்றுக்கொள்வதில்லை.
திருமணம் முடித்த பிறகு படிப்பைத் தொடரலாமே என்ற வாதம் இங்கு எடுபடாது. அலுவலகம் செல்லும் பெண்களுக்கே திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை யில் ஏகப்பட்ட மேடு பள்ளங்கள். நேரம் காலம் பார்க்காமல் ஆய்வகத்தில் இருக்கிற பெண்களுக்குத் திருமண வாழ்க்கையின் பொறுப்புகள் கூடுதல் சுமையாகிவிடுகின்றன.
இது முக்கியப் பிரச்சினை என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். “ஆண்களைப் போல் பெண்களால் ஆய்வகத்தில் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் வேலைசெய்ய முடியாது என்ற கற்பிதம் இருக்கிறது. பெண்கள் அப்படி வேலைசெய்யத் தயாராக இருந்தாலும் குடும்பப் பொறுப்புகளும் சமூக நிர்ப்பந்தங்களும் அவர்களின் கைகளைக் கட்டிப்போடுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார் அவர்.
பொருளாதார விடுதலை வேண்டும்
சமூக - பொருளாதாரப் பின்புலத்துக்கும் பெண்களின் அறிவியல் பங்கேற்புக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பொருளாதார விடுதலை கிடைத்தால் பெண்கள் அதிக அளவில் அறிவியல் துறையில் சாதிக்கலாம் என்கிறார் ஆய்வு மாணவி சங்கீதா. சேலத்தைச் சேர்ந்த இவர், முதுகலை வேதியியலில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
அதனால், மத்திய அரசின் நிதிநல்கையைப் (DST Inspire) பெற்று காரைக்குடியில் இருக்கும் ‘மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலைய’த்தில் ஆய்வு மாணவியாக இருக்கிறார். பணிப் பாதுகாப்பு நிறைந்த, சவால்கள் இல்லாத எட்டு மணி நேர வேலையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதற்கு, சமூகம் தருகிற அழுத்தமே காரணம் என்கிறார் இவர்.
“பள்ளி, கல்லூரி அளவில் ஆண்களைவிடப் பெண்களே அதிக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். பெண்களே பெரும்பாலும் முதல் மதிப்பெண் பெறுகின்றனர். ஆனால், பெண்களின் அறிவியல் தேடல், ஆராய்ச்சிவரை நீளாமல் இருப்பதற்கு இந்தச் சமூகம் ஏற்படுத்திவைத்திருக்கும் தடைகளே காரணம். இத்தனை வயதுக்குள் திருமணம் என்ற அழுத்தம் பல பெண்களின் கனவைச் சிதைத்துவிடுகிறது” என்கிறார் சங்கீதா.
நிதிநல்கை தேவை
பொருளாதாரப் பின்புலம் வலுவாக இருக்கிற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களால் ஓரளவு மேற்படிப்புகளைத் தொடர முடிகிறது. சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களை அரசு வழங்குகிற நிதிநல்கைகள் மட்டுமே கைதூக்கிவிடும். இப்படியான சூழலில் முந்தைய மத்திய அரசு கொண்டுவந்த இன்ஸ்பயர் நிதிநல்கையின் எல்லை அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் ஆளும் மத்திய அரசால் சுருக்கப்பட்டுவிட்டது.
இதனால் இந்தியா முழுவதும் புவியியல், சமூக, பொருளாதார வேறுபாடின்றி அனைவரும் அறிவியல் துறையில் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த நிதிநல்கையின் நோக்கம் மடிந்துவிட்டது.
அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததும் போதுமான வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதும் அறிவியல் துறையில் பெண்கள் தடம் பதிக்கத் தடையாக இருக்கின்றன. சமூக நிர்பந்தங்களைத் தாண்டிப் பெண்கள் அறிவியல் துறையில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. நிதிநல்கைகளுடன் இட ஒதுக்கீட்டையும் உருவாக்குதன் மூலமே அதைச் சாத்தியப்படுத்த முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago