பாரா விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் இந்தியக் கொடி சர்வதேச அரங்கில் பறப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஏக்தா பியான். 2018 அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஆசிய பாரா போட்டியில் உருளைத் தடி எறிதல் (Club throw) போட்டியில் ஏக்தா பியான் (33) தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமைசேர்த்தார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஏக்தா பியான் இந்த வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கப் பெரும் வலியையும் வேதனையையும் கடந்து வரவேண்டியிருந்தது. 2003-ல் எதிர்பாராமல் நடந்த மோசமான கார் விபத்துதான் அந்த வேதனைக்குக் காரணம்.
முடக்கிப்போட்ட விபத்து
அப்போது 18 வயதே நிரம்பியிருந்த ஏக்தா, மருத்துவராக வேண்டும் எனக் கனவு கண்டார். தன் கனவை நிதர்சனமாக்க மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்தக் கோர விபத்து நிகழ்ந்தது. “பயிற்சி வகுப்பு நடந்த இடம் சோனிப்பட்டிலிருந்து டெல்லி செல்லும் வழியில் இருந்தது. நானும் என்னுடைய தோழிகள் ஏழு பேரும் காரில் சென்றுகொண்டிருந்தோம்.
அப்போது காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நிலை தடுமாறி எங்கள் வண்டியின் மீது மோதியது. அந்த விபத்தில் என் தோழிகள் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். நானும் இன்னொரு பெண்ணும்தான் உயிர் பிழைத்தோம்” என அந்தக் கோர விபத்தின் காட்சிகளை விவரிக்கும் ஏக்தாவின் கண்களில், அந்த பயம் இன்னும் மறையவில்லை.
அந்த விபத்துக்குப் பிறகு டெல்லியிலுள்ள இந்திய முதுகுத்தண்டு சிகிச்சை மையத்தில் அவருக்கு ஒன்பது மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று அறுவை சிகிச்சைகள், பிசியோதெரபி ஆகியவை ஏக்தாவை மீட்டெடுக்க உதவின. ஆனால், விபத்தால் இடுப்பின் கீழ்ப்பகுதி முழுவதும் செயல்படாமல்போனது. துள்ளித்திரிந்து கழிக்க வேண்டிய கல்லூரி நாட்கள் சக்கர நாற்காலியில் முடங்கின.
எதிர்பாராத அழைப்பு
எதிர்பாராமல் நடந்த விபத்தால் தன் வாழ்க்கையே இப்படி மாறிவிட்டது என ஏக்தா முடங்கிவிடவில்லை. மருத்துவக் கனவு கைகூடாவிட்டாலும் அதற்கு மாற்றாக ஹரியாணா அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்திலும் உளவியலிலும் பட்டம் பெற்றார் ஏக்தா. சிவில் சர்வீஸ் தேர்விலும் வெற்றிபெற்றார். தற்போது ஹிஸார் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலராகப் பணியாற்றிவருகிறார்.
valigalai-2jpgrightஏக்தாவின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவருக்கு மக்கள் மத்தியில் புகழைப் பெற்றுத் தந்தன. பத்திரிகைகளில் ஏக்தாவின் நேர்காணல்கள் தொடர்ச்சியாக வெளியாயின. இதைப் பார்த்த அர்ஜூனா விருது பெற்ற பாரா தடகள வீரர் அமித் குமார் சோரா, ஏக்தாவைத் தொலைபேசியில் அழைத்துள்ளார்.
பாடப் புத்தகங்களில் மட்டுமே மூழ்கியிருந்த ஏக்தாவுக்கும் விளையாட்டுக்கும் காத தூரம். சிறு வயதிலிருந்தே விளையாட்டு மைதானம் பக்கமே தலைவைக்காத ஏக்தாவுக்கு உருளைத் தடி எறிதல், வட்டெறிதல் ஆகியவற்றில் பயிற்சியளிக்க அமித் குமார் முன்வந்தார். அவர் கொடுத்த தொடச்சியான ஊக்கம் ஏக்தாவுக்குச் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரித்தது.
சொன்னதைச் செய்தவர்
தீவிரமான பயிற்சியின் தொடர்ச்சியாக 2016-ல் ஹரியாணா மாநிலத்திலுள்ள பஞ்ச்குலாவில் நடைபெற்ற தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார். அந்தப் போட்டியில் உருளைத் தடி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும் வட்டெறிதல் போட்டியில் வெண்கலமும் வென்று தன்னுடைய பதக்கக் கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பாரா தடகள கிராண்ட் பிக்ஸ் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்று உருளைத் தடி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் வட்டெறிதல் போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்தார்.
“சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றபோது அத்தனை நாட்கள் நான் சுமந்த வலிகள் எல்லாம் வெற்றிமழையாக மாறி என் மீது பொழிவதைப்போல் உணர்ந்தேன். ஒரு தடகள வீரருக்குக் கிடைக்கும் சிறந்த அனுபவம் என்றால் சர்வதேசப் போட்டியில் நம் நாட்டுக் கொடி பறப்பதும் நாட்டுக்காகப் பதக்கங்கள் வெல்வதும்தான் என 2016-லேயே தெரிவித்திருந்தார்.
அந்த சர்வதேசப் போட்டிக்குப் பிறகு லண்டனில் நடைபெற்ற பாரா தடகள கிராண்ட் பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள நேரடியாகத் தகுதிபெற்றார் ஏக்தா. அந்தப் போட்டியில் உருளைத் தடி எறிதல் பிரிவில் ஆறாவது இடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது.
ஆனால், அந்தக் கணக்கைச் சரிசெய்யும் வகையில் ஆசிய பாரா தடகளப் போட்டியில் உருளைத் தடி எறிதல் பிரிவில் 16.02 மீட்டர் வீசி தங்கப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய அளவில் உருளைத் தடி எறிதல் பிரிவில் முதல் நிலை வீராங்கனையாக இருக்கிறார் ஏக்தா பியான். இலக்குகளுக்குப் பின்னால் ஓடாமல் இலக்கையே நிர்ணயிப்பவராகவும் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago